விறுவிறுப்பாக நடக்கும் 'மகா கும்பமேளா' ஏற்பாடுகள்: நீருக்கடியில் கண்காணிக்க ட்ரோனை பயன்படுத்த முடிவு
விறுவிறுப்பாக நடக்கும் 'மகா கும்பமேளா' ஏற்பாடுகள்: நீருக்கடியில் கண்காணிக்க ட்ரோனை பயன்படுத்த முடிவு
ADDED : டிச 30, 2024 01:53 AM

பிரயாக்ராஜ்: உத்தர பிரதேசத்தில், 'மகா கும்பமேளா'வுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பக்தர்களின் பாதுகாப்பை கருதி, நீருக்கடியில் 328 அடி ஆழம் வரை செல்லக்கூடிய, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்களை பயன்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பிரயாக்ராஜ் மாவட்டத்தில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் ஒன்றாக சேர்கின்றன.
இங்கு, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்கள் புனித நீராடும் நிகழ்வு, மகா கும்பமேளா என அழைக்கப்படுகிறது.
எதிர்பார்ப்பு
வரும் ஜன., 13- - பிப்., 26 வரை மகா கும்பமேளா நடக்கிறது. இதில், உலகம் முழுதும் இருந்து, 45 கோடி பக்தர்கள் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்ச்சிகளில் ஒன்றான மகா கும்பமேளாவில், பக்தர்கள் சிரமமின்றி பங்கேற்க பல்வேறு ஏற்பாடுகளை உ.பி., அரசும், மத்திய அரசும் செய்து வருகின்றன.
சிறப்பு ரயில்கள், சிறப்பு விமானங்கள், சிறப்பு பஸ்கள் என, போக்குவரத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மகா கும்பமேளாவுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பக்தர்களின் பாதுகாப்பை கருதி, நீருக்கடியில், 328 அடி ஆழம் வரை செல்லக்கூடிய, 'ட்ரோன்'களை பயன்படுத்த உ.பி., அரசு முடிவு செய்துள்ளது.
அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
மகா கும்பமேளாவுக்கு வரும் ஒவ்வொரு பக்தர்களின் பாதுகாப்பும் மிகவும் முக்கியம். பக்தர்களுக்கு சிரமங்கள் ஏற்படாதபடி, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. இந்த விவகாரத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.
பக்தர்களின் பாதுகாப்பை கருதி, நீருக்கடியில், 328 அடி ஆழம் வரை செல்லக்கூடிய ட்ரோன்களை பயன்படுத்த உள்ளோம். இந்த ட்ரோன்கள், 24 மணி நேரமும் கண்காணிப்பை வழங்கும்; குறைந்த வெளிச்சத்தில் கூட திறம்பட செயல்படும். மேலும், எந்த சூழ்நிலையிலும் துல்லியமான தகவல்களை வழங்கும் திறன் கொண்டவை.
நீருக்கடியில் சந்தேகத்துக்குரிய நடமாட்டம் இருந்தால், அது குறித்த தகவல்களை, ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு இந்த ட்ரோன்கள் வழங்கும்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் போது பயன்படுத்தப்பட்ட ட்ரோன் எதிர்ப்பு சிஸ்டம், மகா கும்பமேளா நிகழ்ச்சியிலும் பயன்படுத்தப்படும்.
நடவடிக்கை
இதே போல, வான்வெளி பாதுகாப்பிலும் இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன. வான் வழியாக ஏதாவது அச்சுறுத்தல் காணப்பட்டால், அது குறித்த தகவல்களை வழங்குவதோடு, அதை செயலிழக்கவும் ட்ரோன்கள் நடவடிக்கை எடுக்கும்.
மக்கள் அதிகம் கூடும் பஸ் நிறுத்தம், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில், கண்காணிப்பு பணிக்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்படும்.
மேலும், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட கேமராக்கள், மக்கள் கூட்டத்தை நிர்வகிக்க பயன்படும். முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.