தி.மு.க., தரப்பு அழுத்தம்? நாளை நடைபெற இருந்த காங்., செயற்குழு கூட்டம் ரத்து
தி.மு.க., தரப்பு அழுத்தம்? நாளை நடைபெற இருந்த காங்., செயற்குழு கூட்டம் ரத்து
ADDED : செப் 27, 2025 04:56 AM

தி.மு.க., கூட்டணியில், 'கூடுதல் தொகுதிகள், ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும்' என்ற கோஷம், காங்கிரஸ் கட்சிக்குள் அதிகரித்துள்ள நிலையில், நாளை நடக்கவிருந்த காங்., செயற்குழுக் கூட்டம், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க., கூட்டணியில், பிரதான கட்சியாக காங்கிரஸ் உள்ளது. இக்கட்சி நிர்வாகிகள் பலர், வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கேட்பதுடன், ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கருத்தை, தமிழக காங்., முன்னாள் தலைவர் அழகிரி, சட்டசபை காங்., தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் பொது வெளியில், வெளிப்படையாகவே பேசி உள்ளனர்.
கடந்த 2006 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், 63 தொகுதிகளில் காங்., போட்டியிட்டது. இந்த எண்ணிக்கை, 2016 தேர்தலில் 41ஆகவும், 2021 தேர்தலில் 25 ஆகவும் குறைந்தது.
ஆனால், 'வரும் சட்ட சபை தேர்தலில், அதுபோல இருக்கக்கூடாது. தி.மு.க., கூடுதல் தொகுதிகளை கொடுக்காவிட்டால், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க வேண்டும்' என்பது, காங்கிரசில் பெரும்பாலானோர் கோரிக்கையாக உள்ளது.
இது குறித்து, சென்னையில் உள்ள காங்., தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், நாளை நடக்கவிருந்த, தமிழக காங்., செயற்குழுக் கூட்டத்தில் குரல் எழுப்ப, முடிவு செய்தனர்.
இந்த தகவல், காங்கிரசில், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக உள்ள தலைவர்களுக்கு தெரிந்தது. உடனே, ஏற்கனவே இருக்கும் செயற்குழு உறுப்பினர்கள் 51 பேர் தவிர, கூடுதலாக சிறப்பு செயற்குழு உறுப்பினர்கள் 10 பேர் பட்டியலை தயார் செய்தனர்.
அவர்களை, செயற்குழு கூட்டத்தில், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாகவும், விஜய் உடன் கூட்டணி அமைப்பதற்கு எதிராகவும் பேச வைக்க திட்டமிட்டனர். அதை முறியடிக்க, எதிர் தரப்பினரும் தயாராக இருந்தனர்.
இதையடுத்து, தற்போதைய சூழலில், செயற்குழு கூட்டத்தை கூட்டி, அது, தி.மு.க., கூட்டணிக்கு எதிராக அமைந்து விடக்கூடாது என, டில்லி மேலிடத்திடம் கூறப்பட்டது.
தி.மு.க., தரப்பில் இருந்தும், காங்., மேலிடத்துக்கு அழுத்தம் கொடுக்க, நாளை நடைபெற இருந்த செயற்குழு ரத்து செய்யப்பட்டுள்ளது.
உட்கட்சி பிரச்னை, கூட்டணி சலசலப்புகளை தவிர்க்க, செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக, காங்., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது நிருபர் -