ஓட்டுக்கு நோட்டு கொடுத்து 'வலை': இதே போன்ற கேவலம் வேறில்லை!
ஓட்டுக்கு நோட்டு கொடுத்து 'வலை': இதே போன்ற கேவலம் வேறில்லை!
UPDATED : ஏப் 18, 2024 06:12 AM
ADDED : ஏப் 18, 2024 04:02 AM

நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. தேர்தல் ஆணைய அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் துாவி விட்டு, கோவையில் வாக்காளர்களுக்கான பணப்பட்டுவாடா, தீவிரமாக நடக்கிறது. இன்று இரவு பட்டுவாடா உச்சம் தொடுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்களுக்கு 'ரேட்' பேசும் இதே போன்ற கேவலம் வேறில்லை என்பதால், வாக்காளர்கள் தங்களுக்கு பணம் தருவோர் பற்றி, தேர்தல் ஆணையத்தில் புகார் செய்ய வேண்டும். அத்தோடு, அவர்களுக்கு ஓட்டுப்போடுவதையும் தவிர்க்க வேண்டும்.
தமிழகத்தின் மிக முக்கியத் தொகுதியாக கோவை மாறியுள்ளது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணா மலை இங்கு வேட்பாளராகக் களமிறங்கியதால், போட்டி மிகக்கடுமையாக உள்ளது.
மும்முனைப் போட்டி என்று முடிவானதுமே, கோவையின் மீது முக்கியக் கட்சிகளின் கவனம் தீவிரமாகியுள்ளது.
இதற்காக அனைத்துக் கட்சிகளுமே, தேர்தல் பணிகளுக்கு கோடிக்கணக்கில் பணத்தை இறைத்துள்ளன.
வழக்கமாக தேர்தல் பணி துவங்கி விட்டால், பூத் கமிட்டிகள் அமைத்து, அவற்றுக்கு பல கட்டமாக பணம் கொடுக்கப்படும்.
இந்த முறை தி.மு.க., சார்பில், 10 ரவுண்டுகளாக தலா 10 ஆயிரம் வீதம் பணம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது; அ.தி.மு.க., தரப்பில் இதில் பாதியளவே பணம் தரப்பட்டுள்ளது. பா.ஜ., சார்பிலும் பூத் கமிட்டிகளுக்கு, அவ்வப்போது செலவுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், போட்டி கடுமையாக இருப்பதால், சொந்தக்கட்சி வாக்காளர்களைத் தக்க வைக்கவும், பிற கட்சிகளின் வாக்காளர்களை இழுக்கவும், ஓட்டுக்கு இவ்வளவு என்று பணம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஓட்டுக்கு 500 ரூபாய்!
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே, தி.மு.க., சார்பில், ஓட்டுக்கு 500 ரூபாய் வீதமாக பணம் விநியோகிக்கப்படுவதாக, பரவலாக தகவல்கள் வெளியாகின.
சில இடங்களில், தி.மு. க.,வினர் பணம் கொடுப்பதை பிற கட்சியினர் பிடித்துக் கொடுத்தும், தேர்தல் கமிஷன் அதிகாரிகள் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வாகனங்களில் பணம் எடுத்துச் செல்வதைக் கண்காணிபபதும், தடுப்பதும் பெயரளவுக்கு சடங்காகவே நடந்துள்ளது. இதனால் எல்லாப் பகுதிகளிலும் தங்கு தடையின்றி, பணப்பட்டுவாடா நடந்து கொண்டிருக்கிறது.
நேற்று மாலையில், பிரசாரம் முடிவுக்கு வந்த நிலையில், வேட்பாளர்களுக்கு ஆதரவாக வீடு வீடாக வாக்குச் சேகரிப்புப் பணி துவங்கியது.
பல பகுதிகளில் ஓட்டுக்கு இவ்வளவு என்று கணக்கிட்டு, கவர்கள் தரப்பட்டுள்ளன. நகரப்பகுதிகளில், பெரும்பாலான இடங்களில் ஓட்டுக்கு 500 ரூபாய் வீதமாக, பணம் தரப்பட்டு விட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது.
புறநகர் பகுதிகளில் ஆயிரம் ரூபாய்!
அதே நேரத்தில், புறநகர் பகுதிகளிலும், கிராமங்களிலும் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வரை பணம் தரப்பட்டதாக, சமூக ஊடகங்களில் தகவல் பரவியுள்ளது.
இதனால் சில பகுதிகளில், 'அங்கே ஆயிரம் ரூபாய்; இங்கே மட்டும் 500 ரூபாயா' என்று மக்கள் கேள்வி கேட்க, கட்சி நிர்வாகிகள் கதி கலங்கிப் போயுள்ளனர்.
அ.தி.மு.க., சார்பில் சில இடங்களில் மட்டும், ஓட்டுக்கு ரூ.250 மற்றும் ரூ.300 வீதமாகப் பணம் தரப்பட்டதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
பா.ஜ., சார்பிலும் சூலுார் மற்றும் பல்லடம் தொகுதிகளில், கிராமப்புறங்களில் ஓட்டுக்குப் பணம் தரப்படுவதாக எதிர்க்கட்சியினர் புகார் தெரிவித்தனர். ஆனால் தாங்கள் ஓட்டுக்குப் பணம் கொடுக்கவில்லை என்று, பா.ஜ., நிர்வாகிகள் திட்டவட்டமாகக் கூறினர்.
பிற கட்சிகள் சார்பில் பணம் தருவதைத் தடுத்தால் மக்களின் கோபம், தங்கள் மீது திரும்புமோ என்ற பயத்தில், மற்ற கட்சியினர் ஒதுங்கிக் கொண்டதும் அப்பட்டமாகத் தெரிகிறது.
அதிகாரிகள் ஒத்துழைப்பில்லை
ஓட்டுக்குப் பணம் கொடுப்பதைத் தடுப்பதற்கு, மறுமலர்ச்சி மக்கள் இயக்கம், ஊழல் தடுப்பு இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் பிரசாரம் செய்தும், அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாததால் பலனில்லை.
நாளை ஓட்டுப்பதிவு என்பதால், ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் வேலை, இன்றிரவு உச்சம் தொடும் வாய்ப்புள்ளது. இதைத் தடுப்பதற்கு, தேர்தல் கமிஷன் தரப்பில் தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால், தேர்தல் முடிவு நியாயமானதாக இருக்குமா என்ற சந்தேகம், நேர்மையான வாக்காளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஆகவே, பணம் தருவோர் குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கவும், பணம் தரும் கட்சியை நிராகரிக்கவும் வாக்காளர்கள் முன்வர வேண்டும்.

