தி.மு.க.,வை 'அட்டாக்' செய்த பிரதமர்: 4 ஆண்டுகளில் இதுவே முதல்முறை
தி.மு.க.,வை 'அட்டாக்' செய்த பிரதமர்: 4 ஆண்டுகளில் இதுவே முதல்முறை
UPDATED : ஏப் 08, 2025 06:14 AM
ADDED : ஏப் 08, 2025 03:02 AM

மதுரை: தி.மு.க., அரசு பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில், அக்கட்சியினர் குறித்து முதன்முறையாக பிரதமர் மோடி, பாம்பன் பாலம் திறப்பு விழாவில் கிண்டலும், கேலியுமாக பேசியதோடு, மும்மொழி கொள்கை விவகாரம் குறித்து பேசும்போது, 'முதலில் தமிழில் கையெழுத்திடுங்கள்; பின், மருத்துவப் பாடத்தை தமிழில் கொண்டு வாருங்கள்' என பேசினார்.
விமர்சித்ததில்லை
நேற்று முன்தினம் ராமேஸ்வரம் பாம்பன் ரயில் புதிய பாலம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை.
கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த எந்த அரசு நிகழ்ச்சியிலும், தமிழக அரசை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பிரதமர் மோடி விமர்சித்து பேசியதில்லை. சமீபகாலமாக, மும்மொழி கொள்கை மற்றும் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தி.மு.க., தரப்பு செயல்பாடுகள் எதற்கும் பிரதமர் மோடி, எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் தான், பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவிற்காக தமிழகத்திற்கு, மோடி நேற்று முன்தினம் வந்தார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசுவும், ராஜ கண்ணப்பனும், நிகழ்ச்சி முடியும் வரை இறுக்கமாகவே காணப்பட்டனர்.
காரணம், நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, முதன்முறையாக அரசு நிகழ்ச்சி ஒன்றில் தி.மு.க.,வை மறைமுகமாக அட்டாக் செய்தார்.
'தமிழக ரயில்வே திட்டங்களுக்காக, முன்பு இருந்ததை காட்டிலும் துறை சார்பில் 7 மடங்கிற்கு கூடுதலாக நிதி வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பத்தாண்டுகளில், ஏராளமான நிதி வழங்கப்பட்டுஉள்ளது.
தமிழில் பாடத்திட்டம்
'நிதியை வாரிக் கொடுத்தாலும், சிலருக்கு காரணமே இன்றி அழும் பழக்கம் இருக்கிறது. அவர்கள் அழுதுகொண்டே இருக்கட்டும்; அவர்களால் அழத்தான் முடியும்' என கிண்டலாக கூறிய போது, மேடையில் இருந்த தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நெளிந்தார்.
அதே நிகழ்ச்சியில், தமிழக அரசின் மும்மொழி கொள்கையை விமர்சிக்கும் வகையில் பேசிய மோடி, 'தமிழ் மொழி மீது பற்று இருப்பதால்தான், அதன் கலாசாரத்தை உலகளவில் கொண்டு போய் சேர்த்து உள்ளோம். 'தமிழகத்தில் இருந்து சில தலைவர்கள் கடிதம் எழுதுகின்றனர். ஆனால், அது ஆங்கிலத்தில் தான் உள்ளது.
'கையெழுத்தும் ஆங்கிலத்திலேயே போடப்பட்டிருக்கிறது.
'அந்த தலைவர்கள், கையெழுத்தையாவது தமிழில் போட்டு, கடிதம் அனுப்பக்கூடாதா?' என்றார்.
தி.மு.க., அரசு, 'நீட்' தேர்வு விவகாரத்தில் அரசியல் செய்து வரும் நிலையில், அதற்கும் பதில் அளிப்பது போல பேசிய பிரதமர், 'ஏழை மாணவர்களுக்கும் மருத்துவ கல்வி கிடைக்கும் வகையில், தமிழில் பாடத்திட்டங்களை தி.மு.க., அரசு கொண்டு வரவேண்டும்' என கூறினார்.
பிரதமரின் இப்பேச்சு, தி.மு.க., தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.