புயலுக்கு பின் வெடிக்குது போராட்டம்! உணவு, குடிநீர் கிடைக்காமல் ஆவேசம்; விழுப்புரம், கடலுாரில் மக்கள் மறியல்
புயலுக்கு பின் வெடிக்குது போராட்டம்! உணவு, குடிநீர் கிடைக்காமல் ஆவேசம்; விழுப்புரம், கடலுாரில் மக்கள் மறியல்
ADDED : டிச 04, 2024 07:11 AM

வங்கக்கடலில் கடந்த, 25ம் தேதி உருவான 'பெஞ்சல்' புயல், 30ம் தேதி புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இந்த புயலால், புதுச்சேரி, விழுப்புரத்தில், 50 செ.மீ., மழை, கடலுாரில் 25 செ.மீ., மழை கொட்டித் தீர்த்தது. இதனால், இந்த மாவட்டங்களில் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் விழுந்தன.
புயல் கடந்து, தொடர்ந்து பயணித்த பாதை முழுதும் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த வகையில், திருவண்ணாமலை, வேலுார், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்க்க, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. கனமழையால், கடந்த, 1ம் தேதி இரவு போதிய முன்னறிவிப்பின்றி திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனுார் அணையில் இருந்து 2 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனால் நள்ளிரவில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்தது. வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள், திடீரென தண்ணீர் வந்ததால் அச்சமடைந்தனர். கடலுார் மாநகர பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு வெள்ளநீர் புகுந்தது. கலெக்டர் அலுவலகம், துணைமின் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. கடலுார் - புதுச்சேரி சாலையில் நேற்றும் தண்ணீர் ஓடியதால் பஸ் போக்குவரத்து முழுதுமாக நிறுத்தப்பட்டது. கடலுார் மாநகரம் மற்றும் கிராம பகுதிகளில் துண்டிக்கப்பட்ட மின் சப்ளை சீராகாததால் மக்கள் அவதிப்பட்டனர்.
தண்ணீர் புகுந்துள்ள கிராமங்களில் இருந்து மக்களை வெளியேற்றி அருகில் உள்ள முகாம்களில் தங்க வைத்துள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் முழுமையாக மின் வினியோகம் வழங்கப்படவில்லை. குடிநீர் தட்டுப்பாட்டால் கிராம மக்கள் மின்சாரம் வழங்கக் கோரி மறியலில் ஈடுபட்டனர். சின்ன கங்கணாங்குப்பம் உள்ளிட்ட சில கிராமங்களில் மறியல் நடந்தது. போலீசார் பேச்சு நடத்தி சமரசம் செய்தனர். தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் தொலைத்தொடர்பு லைன்கள் மழையால் பாதிக்கப்பட்டு முடங்கியுள்ளன. இன்னும் தொலைத்தொடர்பு பணிகள் சீரமைக்கப்படவில்லை.
தானியங்கள் சேதம்:
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார் பகுதி, மாடர்ன் ரைஸ் மில், விவசாய விளை பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் கிடங்குகள் நிறைந்த பகுதி. மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்த மக்காச்சோளம், உளுந்து, வேர்க்கடலை உள்ளிட்ட தானியங்களை மூன்று பெரிய கிடங்குகளில் இருப்பு வைத்திருந்தனர். மழை வெள்ளத்தால் மூன்று கிடங்குகளிலும் தண்ணீர் புகுந்தது. இதன் காரணமாக, 20 கோடி ரூபாய் மதிப்பிலான தானியங்கள் முற்றிலுமாக மூழ்கி பாழாகின. கம்பு மூட்டைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
மேலும், ஏழு மாடர்ன் ரைஸ் மில்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இங்கிருந்த ஆயிரக்கணக்கான நெல், அரிசி மூட்டைகள் நீரில் மூழ்கி வீணானதுடன், மின் மோட்டார், ஜெனரேட்டர் உள்ளிட்ட மின் சாதனங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதேபோன்று, சிறு வியாபாரிகள் இருப்பு வைத்திருந்த 10 கோடி ரூபாய் மதிப்பிலான அரிசி உள்ளிட்ட பொருட்களும் பாழானது. ஒட்டுமொத்தமாக விளை பொருட்களின் சேத மதிப்பு மட்டும் 50 கோடி ரூபாயை தாண்டும் என, வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தொப்பையாறு:
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், கம்மம்பட்டி பஞ்., சேவியூர் கொட்டாயில் வசிக்கும் மக்களுக்கு, கம்மம்பட்டி பஞ்., வழியாக சாலை வசதி இல்லாததால், சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே கருங்கல்பாளையம் வழியை பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் செல்லும் வழியில், தொப்பையாறு செல்கிறது. அதை கடந்து அவர்கள் செல்ல வேண்டி உள்ளது. நேற்று முன்தினம் தொப்பையாறு அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், 2,000 கன அடி உபரிநீர் தொப்பையாறு ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இந்த நீர் மேட்டூர் அணைக்கு செல்கிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கால், விநாயகபுரம் பகுதியிலிருந்த தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. ஆற்றைக் கடக்க, அதன் குறுக்கே அபாயகரமான முறையில் கயிறு கட்டி பெரியவர்கள் மட்டும் ஆற்றைக் கடந்து சென்று வருகின்றனர். இதனால், 10 கிராம மக்களும் அத்தியாவசிய தேவைக்காக மற்ற இடங்களுக்கு செல்ல பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இம்மாவட்டத்தின் வத்தல்மலையில் பெய்த கனமழையால் மொத்தம், 15 கொண்டை ஊசி வளைவுகளில் ஏற்பட்ட மண் சரிவால் போக்குவரத்தின்றி, 10 கிராம மக்கள் முடங்கி உள்ளனர்.
நெடுஞ்சாலை துண்டிப்பு:
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் இடைவெளி விட்டு கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தில், ஏற்காட்டில் அதிகபட்சமாக, 9.8 செ.மீ., மழை பெய்ததால், மலைப்பகுதியில் இருந்து வெளியேறிய வெள்ளநீர், திருமணிமுத்தாறில் பெருக்கெடுத்தது. வெள்ள நீர் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, கந்தம்பட்டியில், 3 அடி உயரத்துக்கு தேங்கியதால், நேற்று காலை, 6:00 மணி முதல் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
அந்த சாலையில் வந்த அரசு பஸ் ஒன்றும், லாரியும் வெள்ள நீரில் சிக்கிக் கொண்டன. பஸ் பயணியரை போலீசார் பத்திரமாக மீட்டனர். அவ்வழியாக சேலம் நோக்கி வந்த எல்லா வாகனங்களும், கொண்டலாம்பட்டி வழியே மாநகர் பகுதிக்கு திருப்பி விடப்பட்டன. கலெக்டர் அலுவலகம், சங்ககிரி பிரதான சாலை, நெத்திமேடு, லீபஜார், செவ்வாய்ப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தொடர்ந்து, ஐந்து மணி நேரத்துக்கு பிறகும், கந்தம்பட்டியில் மழைநீர் வடியாததால், தேசியநெடுஞ்சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவரை உடைத்து, நெடுஞ்சாலையில் தேங்கிய நீரை வெளியேற்றினர். சேலம் புது பஸ் ஸ்டாண்டில், முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியதால், பஸ்கள் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தன.
வீராணம் ஊராட்சியில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால், இதனால், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பள்ளிப் பட்டி வழியே சுற்றிவரும் நிலை ஏற்பட்டது. வீராணம் பிரதான சாலையில், அல்லிக்குட்டை பஸ் ஸ்டாப் அருகே, மக்கள் திரண்டு, நேற்று காலை, 8:00 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
முட்டல் - கல்லுார் சாலையில் மண் சரிவு ஏற்பட்டதோடு, பாறைகள் உருண்டு விழுந்ததால், 10 மலைக்கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை, 10:00 மணி அளவில் சாத்தனுார் அணைக்கு நீர்வரத்து, 30,000 கன அடியாக குறைந்தது. அணைக்கான நீர்வரத்து அப்படியே உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் அபாய கட்டத்திலிருந்து விலகி, சகஜ நிலைக்கு திரும்பியது.
![]() |
- நமது நிருபர் குழு -