போதை நகரமாக மாறிய புதுச்சேரி: இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறி
போதை நகரமாக மாறிய புதுச்சேரி: இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறி
UPDATED : மார் 07, 2024 04:34 AM
ADDED : மார் 07, 2024 04:26 AM

புதுச்சேரி: பெருமைமிகு புதுச்சேரி தனது அடையாளத்தையும், பெருமைகளையும் இழந்து விட்டு நிற்கிறது. இதற்கு காரணம் போதை கலாசாரம் தான்.
புதுச்சேரியில் திரும்பிய பக்கம் எல்லாம் மது பார்களாக காட்சியளிக்கிறது. இதுமட்டுமல்லாமல், 'ரெஸ்டோ பார்', 'ரெஸ்டோ பப்' என்ற புதிய போதை விஷயங்களும் தற்போது தலைதுாக்கி வருகிறது.
நகரத்தில் எந்த பக்கம் திரும்பினாலும் வீடுகளுக்கு மத்தியிலும், பள்ளிகளுக்கு அருகிலும் ரெஸ்டோ பார், ரெஸ்டோ பப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு புதிது புதிதாக உருவாகி வருகிறது.
இங்கே குடியும் கும்மாளமுமாக சுற்றுலா பயணிகள் இருக்க, உள்ளூர்கள் இளைஞர்களின் கைகளில் கஞ்சாவில் ஆரம்பித்து, விலை உயர்ந்த போதை பொருட்கள் வரை சர்வ சாதாரணமாக புழங்குகிறது.
புதுச்சேரியில் நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு அடித்தளமாக கஞ்சா விளங்குகிறது. கஞ்சாவுக்கு அடிமையாகும் இளைஞர்கள் வேலைக்கு செல்லாமல் வாழ்க்கையை தொலைத்து ரவுடிகளாக உருவெடுத்து வருகின்றனர்.
நாள் முழுதும் போதையில் மிதக்கும் இளைஞர்கள் என்ன செய்கிறோம் என்பது தெரியாமலேயே கொடூரமான குற்றங்களில் சர்வ சாதாரணமாக ஈடுபடுகின்றனர். முத்தியால்பேட்டை சிறுமியின் கொடூர கொலை வழக்கிலும் கஞ்சாவே பின்னணியில் இருந்துள்ளது.
குற்றங்களுக்கு ஆரம்ப புள்ளியாக திகழும் கஞ்சாவை ஒழிக்க எந்த நடவடிக்கையும் புதுச்சேரி போலீசார் உறுதியாக எடுக்கவில்லை. எந்தந்த பகுதியில் கஞ்சா விற்கிறது என்பது போலீசாருக்கு நன்றாகவே தெரியும். ஆனால், நடவடிக்கை என்பது 'ஜீரோ'வாக உள்ளது.
'எங்கள் பகுதியில் கஞ்சா ஆசாமிகள் கும்பலாக இருக்கின்றனர். பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது' என புகார் அளித்தாலும் போலீசார் கண்டு கொள்வதில்லை. இதனால், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா தாராளமாக கிடைக்கும் ஆபத்து அரங்கேறி உள்ளது. மருத்துவ மாணவர்களே கஞ்சா விற்க கிளம்பிவிட்டனர்.
இப்போது கஞ்சாவுக்கு பச்சிளம் சிறுமியை பறிகொடுத்துள்ளோம். இதற்கு பின்பும் கஞ்சா கும்பலையும், விற்பனையையும் போலீசார் கட்டுப்படுத்தாவிட்டால் புதுச்சேரியையும், இளைய சமுதாயத்தையும் யாராலும் காப்பற்ற முடியாது.

