‛'ரேபிஸ்' மனிதர்களை மட்டுமல்ல கால்நடைகளையும் பாதிக்கும்
‛'ரேபிஸ்' மனிதர்களை மட்டுமல்ல கால்நடைகளையும் பாதிக்கும்
ADDED : செப் 27, 2024 06:29 AM

மதுரை: 'ரேபிஸ்' நோய் மனிதர்களை மட்டுமின்றி கால்நடைகளையும் பாதிக்கும் என்பதால் ஆடு, மாடு, குதிரை, பூனைகளை நாய் கடித்தால் உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும். பராமரிப்பவர்களும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்கிறார் மதுரையைச் சேர்ந்த அரசு கால்நடை உதவி டாக்டர் மெரில் ராஜ்.
அவர் கூறியதாவது: நாளை (செப்.28) உலக 'ரேபிஸ்' நோய் தடுப்பு தினம். வெறிநாய் கடித்தாலோ, ஏற்கனவே உள்ள காயங்களில் நாய் எச்சில் பட்டாலோ 'ரேபிஸ் லைசா வைரஸ்' என்ற கிருமியால் 'ரேபிஸ்' நோய் ஏற்படுகிறது. கடிபட்ட இடத்தை சோப்பு மற்றும் தண்ணீரால் 15 நிமிடம் கழுவ வேண்டும். காயத்திற்கு 'போவிடோன் அயோடின்' மருந்து தடவலாம்.
கட்டு போடக்கூடாது. நாய் கடித்த 48 மணி நேரத்திற்குள் 'டெட்டனஸ்' தடுப்பூசி மற்றும் 'ரேபிஸ்' வெறிநோய் தடுப்பூசி செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் 'ரேபிஸ்' நோய் நரம்பு மண்டலம் வழியாக பரவி மூளை, தண்டுவடத்தை தாக்கி நுரையீரல் மற்றும் இதயத்தை செயலிழக்க செய்து இறப்பை ஏற்படுத்தும்.
இந்தியாவில் அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு,கோவா தவிர மற்ற மாநிலங்களில் ஆண்டு முழுவதும் 'ரேபிஸ்' நோய் ஏற்படுகிறது. வெறிநாய்கள் கடிப்பதன் மூலம் மனிதர்களுக்கு 96 சதவீதம் 'ரேபிஸ்' நோய் பரவுகிறது.
தடுப்பூசி மூலம் நோயை தடுக்கலாம். நாய்கள் மட்டுமின்றி பிற விலங்குகள் கடித்தாலும் 'ரேபிஸ்' நோய் பரவலாம் என்பதால் தொடர் தடுப்பூசி செலுத்த வேண்டும். உலகம் முழுவதும் இந்நோய் பற்றிய விழிப்புணர்வு இன்மையால் ஆண்டுதோறும் 59ஆயிரம் பேர் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. அதில் 36 சதவீத இறப்புகள் இந்தியாவில் நடக்கிறது. 15 வயதிற்குட்பட்ட 60 சதவீதம் பேர் இறக்கின்றனர்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 23 லட்சம் பேர் நாய்க்கடிக்கான 'பெப் ரேபிஸ்' தடுப்பூசி செலுத்திக் கொள்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
வெறி நாய் கடித்து நோய் அறிகுறிகள் தோன்ற சில வாரங்கள் முதல் சில மாதங்கள் ஆகிறது. உடல் சோர்வு, அதிக காய்ச்சல், பயம், குழப்பம், மூளை பாதிப்பு என ஆரம்பித்து துாக்கமின்மை, தண்ணீர், வெளிச்சத்தை கண்டு பயம், பைத்தியம் பிடித்த நிலைக்கு கொண்டு செல்லும். இந்த அறிகுறிகள் தோன்றிய சில நாட்களில் இறப்பு ஏற்படும்.
பாதிக்கப்படும் பிற விலங்குகள்
வெறிநாயால் மனிதர்கள் மட்டுமல்ல பிற விலங்குகளும் பாதிக்கப்பட்டு இறக்கின்றன. வீட்டு நாய்களுக்கு வெறி நாய் கடித்து அறிகுறி தோன்ற 10 நாட்கள் முதல் 6 மாதங்கள் ஆகும்.
உணவு உட்கொள்ளாமல் நாய் அமைதியின்றி காணப்படும். நுரையுடன் எச்சில் தொடர்ச்சியாக வடியும். கால்கள் செயலிழந்த நிலையில் 5 முதல் 7 நாட்களில் நாய் இறந்து விடும்.
வெறிநாய் பூனையை கடித்தால் பூனை அதிக கோபத்துடன் வெறிபிடித்த நிலையில் இருக்கும். நாய் மற்றும் மனிதர்களை திடீர் என தாக்க முயற்சிக்கும். ஆடு, மாடுகளில் நாய் கடித்து அறிகுறிகள் தோன்ற 10 நாட்கள் முதல் 6 மாதங்கள் ஆகும். மாடுகள் காய்ச்சலுடன் தீவனம் உண்ணாது. பின்னங்கால்களில் தடுமாற்றம் ஏற்படும். மஞ்சள் நிற நுரையுடன் எச்சில் தொடர்ச்சியாக வடியும். வெறி முற்றிய நிலையில் இலக்கின்றி ஓடும். அருகில் செல்பவர்களை முட்ட வரும். 'ரேபிஸ்' நோய் அறிகுறிகள் உள்ள மாட்டின் பாலை கறக்கக்கூடாது.
ஆடுகள் தொடர்ச்சியாக கத்தும். கல், மண், கட்டைகளுடன் தன் உடம்பு மற்றும் வாலை தானே கடிக்கும். குதிரைகளில் அறிகுறிகள் தோன்ற 12 நாட்கள் ஆகும். உடல் நடுக்கம், உணவை கக்குதல், எச்சில் வடித்தல், நடையில் தடுமாற்றம் ஏற்படும். நோய் முற்றிய நிலையில் கால்கள் செயலிழந்து இறந்து விடும்.
வீட்டில் வளர்க்கும் நாய்,பூனைகளுக்கு ஆண்டுதோறும் 'ரேபிஸ்' நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும். நாய்குட்டிகளுக்கு மூன்று மாத வயதிலும் பின்னர் பூஸ்டர் தடுப்பூசி ஒன்பது மாதத்திலும் செலுத்த வேண்டும். தெரு நாய்களை தத்து எடுத்தால்முதலில் 'ரேபிஸ்' தடுப்பூசி செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.