ADDED : ஆக 06, 2025 04:38 AM

காங்கிரஸ் ஆர்.டி.ஐ., பிரிவு நிர்வாகி அப்ரோஸ் கைது செய்யப்பட்ட வீடியோவை பார்த்த, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் 'அப்செட்' ஆன தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக காங்., ஆர்.டி.ஐ., பிரிவு மாநிலச் செயலர் அப்ரோஸ் கைது செய்யப்பட்டதை, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் அழகிரி, நேற்று முன்தினம் கடுமையாக கண்டித்தார்.
அப்ரோஸ் தாயார் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், டில்லி மேலிடத் தலைவர்களிடம், தொலைபேசியில் புகார் தெரிவித்தனர். அப்ரோசை, போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தது தொடர்பான ஆறு வீடியோக்களை, நேற்று முன்தினம் ராகுலுக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த வீடியோவை பார்த்த ராகுல், 'அப்செட்' ஆகியுள்ளார். அவர், தி.மு.க., மூத்த எம்.பி.,யை தொடர்பு கொண்டு, 'அப்ரோஸ் விவகாரத்தை, முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்' என, அறிவுறுத்தி உள்ளார்.
தமிழக காங்., துணைத் தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
அப்ரோஸ் கைது தொடர்பான வீடியோக்கள் ராகுலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அப்ரோஸ் விவகாரம் குறித்து பேச, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் முன்னாள் தலைவர்கள், முதல்வர் ஸ்டாலினை சந்திக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது. குண்டர் சட்டத்தில் கைது செய்யும் அளவிற்கு, அப்ரோஸ் எதுவும் செய்யவில்லை.
சாலை வசதிக்காக, மாநராட்சி உதவி பொறியாளரை சந்தித்து மனு கொடுத்தார். போலீஸ் உயர் அதிகாரிக்கு கருப்பு கொடி காட்டியுள்ளார். குண்டர் சட்டத்தில் அடைக்கும் அளவுக்கு, அது பெரிய தவறா?
கூட்டணியில் இருந்தாலும், காங்கிரசாரை ஒடுக்கிப் பார்க்க நினைத்தே, தி.மு.க., இப்படிப்பட்ட காரியங்களை செய்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -