காங்., நிர்வாகிகள் மாநாட்டில் ராகுல்l தி.மு.க.,விடம் அதிக 'சீட்' பெற திட்டம்
காங்., நிர்வாகிகள் மாநாட்டில் ராகுல்l தி.மு.க.,விடம் அதிக 'சீட்' பெற திட்டம்
ADDED : ஜூலை 13, 2025 03:30 AM

இரண்டு லட்சம் நிர்வாகிகள் பங்கேற்கும் கிராம கமிட்டி காங்கிரஸ் மாநாட்டிற்கு, பார்லிமென்ட் எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை அழைத்து வந்து, கட்சியின் பலத்தை காட்டி, தி.மு.க., கூட்டணியில் அதிக தொகுதிகளை பெற, அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
72 சதவீதம் பணி
வரும் சட்டசபை தேர்தலில், கட்சி பலத்தின் அடிப்படையில் கூடுதல் தொகுதிகளை பெற வேண்டும் என்ற இலக்குடன் தமிழக காங்கிரஸ் செயல்படுகிறது.
இதற்காக, காங்கிரஸ் நிர்வாகத்தை சீரமைக்க, தமிழகம் முழுதும், கிராம கமிட்டி குழு அமைக்கும் பணிகளை துவக்கியது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 24,000 கிராம கமிட்டியில், குறைந்தபட்சம் ஐந்து, அதிகபட்சம் 15 நிர்வாகிகளை உறுப்பினராக நியமிக்கும் பணி துவக்கப்பட்டது.
தற்போது, 16,500 நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, 72 சதவீதம் பணி முடிந்துள்ளது.
மாவட்ட வாரியாக, தலைமை பயிற்சியாளர்கள் 100 பேர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், சமீபத்தில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்தது.
அக்கூட்டத்தில் அடுத்த கட்டமாக, டில்லி மேலிட தலைவர்களை அழைத்து, மூன்று நாட்கள் பயிற்சி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஆட்சியில் பங்கு
இது குறித்து, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியதாவது:
கிராம கமிட்டி நிர்வாகிகளை நியமிக்கும் பணியை, தமிழக காங்கிரஸ் மந்திரகோலாக எடுத்துள்ளதற்கு தேர்தல் அரசியல் தான் காரணம்.
தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைத்தால், ஆட்சியில் பங்கு தரப்படும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
அக்கட்சியுடன் கூட்டணி அமைக்கும் நிலை ஏற்பட்டால், 'பூத்' கமிட்டியை பலப்படுத்த வேண்டும்.
கட்சி சீரமைப்பு
அதற்காகவே கிராம கமிட்டி பலப்படுத்தப்படுகிறது. கமிட்டி உறுப்பினர்களாக, குறைந்தபட்சம் ஒன்றரை லட்சம் முதல் இரண்டு லட்சம் நிர்வாகிகள் சேர்க்கப்படுகின்றனர்.
அவர்கள் அனைவரையும், ஒரே இடத்தில் அழைத்து மாநாடு நடத்தவும், அதில் ராகுலை பங்கேற்க வைக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
கட்சி சீரமைப்புக்கு பின், தி.மு.க., அல்லது விஜய் கட்சியில் அதிக 'சீட்' பெற்று கூட்டணி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -