UPDATED : நவ 15, 2026 08:35 AM
ADDED : நவ 15, 2026 01:37 AM

புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராக, காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தலைமையில் அக்கட்சி தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் தேர்தல் கமிஷன் ஓட்டு திருட்டில் ஈடுபட்டு வருகிறது. இதனால் தான், பா.ஜ., வெற்றி பெற்று வருகிறது' என, ராகுல் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். இந்த போராட்டத்திற்கு கட்சிக்குள்ளேயே ஆதரவு இல்லை.
மூத்த தலைவர்கள் பலரும், ராகுல் போராட்டத்தில் பெயரளவிற்கு பங்கேற்கின்றனர். இதற்கிடையே, ராகுலுக்கு நெருக்கமானவரும், காங்கிரசின் வெளிநாடு குழுவின் தலைவருமான சாம் பிட்ரோடாவின் சமீபத்திய பேட்டி பிரச்னையை கிளப்பியுள்ளது.
'வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் தேர்தல் முறைகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்' என, சாம் பிட்ரோடா கூறினாலும், வேறொரு விஷயத்தையும் அவர் தெளிவாக சொல்லியுள்ளார். 'ராகுல் நடத்தி வரும் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிரான போராட்டம், இப்போதைய இளைஞர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை' எனவும் பேட்டி அளித்துள்ளார். பல மூத்த தலைவர்கள் அவரது கருத்தை வரவேற்றுள்ளனர். ஆனால், இது குறித்து வெளிப்படையாக பேச பலரும் தயங்குகின்றனர்.
இன்னொரு பக்கம், பிரதமர் மோடியை சாம் பிட்ரோடா பாராட்டியதுடன், தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இது, கட்சிக்குள் பூகம்பத்தை கிளப்பி விட்டது. மோடிக்கு எதிராக பேசி வருபவர், திடீரென பல்டி அடிக்க காரணம் என்ன?
'நான் காங்கிரசில் தான் இருப்பேன். நானும், மனைவியும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். பல முறை மோடியை அவரது வீட்டில் சந்தித்துள்ளேன். அவர் அரசியலுக்கு அப்பாற்பட்ட நண்பர்' என, விளக்கம் அளித்தும், இதை கட்சியினர் நம்ப தயாராக இல்லை. எது எப்படியோ, தேர்தல் கமிஷன் குறித்து சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது.
