கோவையில் ராஜஸ்தான் கொள்ளையர்... ஜாக்கிரதை! பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை
கோவையில் ராஜஸ்தான் கொள்ளையர்... ஜாக்கிரதை! பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை
UPDATED : டிச 19, 2024 07:55 AM
ADDED : டிச 18, 2024 10:58 PM

கோவை; வெளிமாநில கொள்ளையர்கள், மாநகர பகுதிகளில் கைவரிசை காட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், உஷாராக இருக்க பொதுமக்களை போலீசார் எச்சரித்துள்ளனர்.
வெளி மாநிலங்களில் இருந்து வந்து, கோவை மாநகர பகுதிகளில் திருட்டு, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுவோரை, அவர்களின் மாநிலங்களுக்கே சென்று மாநகர போலீசார் கைது செய்கின்றனர்.
தீபாவளி சமயத்தில் பீளமேடு, துடியலுார் பகுதி வீடுகளில் கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை, கோவை மாநகர தனிப்படை போலீசார் குஜராத்தில் வைத்து கைது செய்தனர்.
இது போன்ற குற்றச்சம்பவங்களில், ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனினும், வெளி மாநிலங்களில் இருந்து கோவைக்கு வந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோர் எண்ணிக்கை முற்றிலுமாக ஒழியவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வந்துள்ள, கொள்ளை கும்பல் கோவை துடியலுார் பகுதியில் இறங்கியுள்ளதாகவும், பூட்டி இருக்கும் வீடுகளில் கைவரிசை காட்ட திட்டமிட்டுள்ளதாகவும், போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அபார்ட்மென்ட் மற்றும் குடியிருப்புகளில் வசிப்போர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, நோட்டீஸ் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த, கோவை போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, விழிப்புணர்வு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
இந்நிலையில், கடந்த 15ம் தேதி பீளமேடு, சேரன் மாநகர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 3.5 சவரன் நகை திருடிச் செல்லப்பட்டுள்ளது. 16ம் தேதி செல்வபுரம் பகுதியில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து சுமார், 5.5 சவரன் தங்க நகை திருடப்பட்டுள்ளது.
ஒரு சில இடங்களில், சி.சி.டி.வி., கேமரா ஒயர்கள் அறுக்கப்பட்டுள்ளன. வீட்டு பூட்டை உடைத்து திருட முயன்றுள்ளனர். இது, ராஜஸ்தான் கொள்ளையர்களின் கைவரிசையாக இருக்குமோ என சந்தேகிக்கப்படுகிறது.
போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின் கூறுகையில், ''கொள்ளை சம்பவங்களில் ஈடுபட, வெளி மாநிலங்களில் இருந்து, ஒரு கும்பல் வந்துள்ளதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கண்காணித்தபோது, வட மாநில கும்பல் குறித்து தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது. குற்றச்சம்பவங்களை தடுக்க போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொது மக்கள் உஷாராக இருக்க வேண்டும். துடியலுார், சரவணம்பட்டி, பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.
இதனால், பொதுமக்கள் இரவு நேரங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏதாவது சத்தம் கேட்டால் வெளியில் சென்று பார்க்காமல், வீட்டில் 'லைட்களை' போட்டு, அருகில் வசிப்பவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சந்தேகப்படும் வகையில் யாராவது வந்தால், காவலாளியிடம் தெரிவிக்கலாம்; அல்லது போலீசுக்கு போன் செய்ய வேண்டும். தனியாக வசிக்கும் மக்கள், அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கின்றனர் போலீசார்.