ராமதாஸ் - அன்புமணி தனித்தனியாக தியாகிகள் படத்திற்கு அஞ்சலி
ராமதாஸ் - அன்புமணி தனித்தனியாக தியாகிகள் படத்திற்கு அஞ்சலி
ADDED : செப் 18, 2025 02:21 AM

திண்டிவனம்: பா.ம.க.,வில் ராமதாஸ், அன்புமணி மோதலை தொடர்ந்து, இருவரும் தனது ஆதரவாளர்களுடன், தனித்தனியாக சென்று, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
வன்னியர் இடஒதுக்கீடு போரட்டத்தில் உயிர்நீத்த 21 பேரின் நினைவாக, ஆண்டுதோறும் செப்., 17ம் தேதி, பா.ம.க., சார்பில், தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
தற்போது ராமதாஸ்-அன்புமணி மோதல் உள்ள நிலையில், தியாகிகள் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியை இரு தரப்பினரும் தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் நேற்று அனுசரித்தனர்.
ராமதாஸ் தரப்பில், தைலாபுரம் தோட்டத்தில் தியாகிகளின் படங்களுக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, ராமதாஸ் மூத்த மகள் ஸ்ரீகாந்திமதி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதேபோல், அன்புமணி, தனது மகள் மற்றும் ஆதரவு நிர்வாகிகளுடன் சித்தணி, பனையபுரம் பாப்பனபட்டு உள்ளிட்ட இடங்களில் உள்ள தியாகிகள் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, திண்டிவனம் தனியார் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றார். பொருளாளர் திலகபாமா, செய்தி தொடர்பாளர் பாலு, மயிலம் எம்.எல்.ஏ., சிவக்குமார உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
திண்டிவனம், விழுப்புரம், கொள்ளுக்காரன்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.