சமூக வலைதள பக்கம் முடக்கம் அன்புமணி மீது புகார் கூறும் ராமதாஸ்
சமூக வலைதள பக்கம் முடக்கம் அன்புமணி மீது புகார் கூறும் ராமதாஸ்
ADDED : செப் 28, 2025 05:24 AM

சென்னை: பா.ம.க.,வில் அப்பா -- மகன் மோதலை தொடர்ந்து, அன்புமணியை ராமதாஸ் நீக்கினார். தனது பேஸ்புக், எக்ஸ் தள பக்கங்களில், ராமதாஸ் தினமும், சமூகம் மற்றும் அரசியல் ரீதியிலான கருத்துகளை பதிவிட்டு வந்தார். ஆனால், மே 28க்கு பிறகு, எந்த பதிவும் வெளியிடப்படவில்லை.
கட்சி நிறுவனர் ராமதாஸின் அதிகாரப்பூர்வ இ - மெயில், முகநுால், எக்ஸ் தள பக்கங்களை நிர்வகித்தவர்கள் அன்புமணி பக்கம் உள்ளனர். இவற்றின் பாஸ்வேர்டை மாற்றி, தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், மே 28க்கு பின் எந்த பதிவையும் வெளியிட முடியவில்லை என, ராமதாஸ் தரப்பில், போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
ஆனாலும் எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில், ராமதாஸ் பெயரில், புதிதாக முகநுால், எக்ஸ் தள பக்கங்கள் துவக்கப்பட்டன. இத்தகவலை பா.ம.க., - எம்.எல்.ஏ., அருள், நேற்று முன்தினம் வெளியிட்டார். ஆனால், சில மணி நேரங்களிலேயே, அந்த பக்கங்கள் முடக்கப்பட்டன.
இது தொடர்பாக ராமதாஸ் தரப்பு நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, 'ராமதாசின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களின், 'பாஸ்வேர்டு' அன்புமணியிடம் உள்ளது. அந்த பழைய பக்கங்களில் இருந்து, ராமதாஸ் பெயரில் போலி பக்கம் துவக்கப்பட்டுள்ளதாக, அன்புமணி தரப்பு புகார் அளித்துள்ளது. அதன் அடிப்படையில், ராமதாஸின் புதிய பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன.
'விரைவில் அதை மீட்டு விடுவோம். இது தொடர்பாக, மீண்டும் காவல்துறையில் புகார் அளிக்க இருக்கிறோம்' என்றார்.