மகளை தர்மபுரியில் களமிறக்க ராமதாஸ் முடிவு; தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சை துவக்கினார் ஜி.கே.மணி
மகளை தர்மபுரியில் களமிறக்க ராமதாஸ் முடிவு; தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சை துவக்கினார் ஜி.கே.மணி
ADDED : அக் 30, 2025 06:20 AM

பா.ம.க., செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தன் மகள் ஸ்ரீகாந்தியை, தர்மபுரி சட்டசபை தொகுதியில் களமிறக்க, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில், தி.மு.க.,வுடன் நல்ல நட்பில் இருக்கும் கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி வாயிலாக, அக்கட்சியுடன் ராமதாஸ் கூட்டணி பேச்சு நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
பா.ம.க.,வில் அப்பா, மகன் இடையிலான மோதல், 10 மாதங்களை கடந்தும் முடிவுக்கு வரவில்லை. மகன் அன்புமணியை கட்சியிலிருந்து நீக்கியுள்ள ராமதாஸ், அவருக்கு பதிலாக, தன் மூத்த மகள் ஸ்ரீகாந்தியை, கட்சியின் செயல் தலைவராக கடந்த 26ல் நியமித்தார்.
உடன்பாடு இல்லை தன்னையும், கட்சியையும் கவனித்து கொள்ளவே, மகளுக்கு செயல் தலைவர் பதவி வழங்கியதாக ராமதாஸ் தெரிவித்தார்.
கடந்த லோக்சபா தேர்தலில், தர்மபுரியில் அன்புமணி போட்டியிடுவார் என எதிர்பார்த்த நிலையில், கடைசி நேரத்தில் அவரது மனைவி சவுமியா களமிறக்கப்பட்டார். இதில் ராமதாசுக்கும், அவரது மகளுக்கும் உடன்பாடு இல்லை என்பதால், தேர்தலுக்கு பிறகு குடும்பத்திற்குள் மோதல் வெடித்தது.
மகளை சமாதானப்படுத்த, பேரன் முகுந்தனை இளைஞரணி தலைவராக ராமதாஸ் அறிவித்தார். ஆனால், அன்புமணி எதிர்ப்பால், அவர் அரசியலை விட்டே ஒதுங்கினார்.
மகனுக்கு பொறுப்பு மறுக்கப்பட்டதால், ஸ்ரீகாந்தியே அரசியலில் இறங்கி உள்ளார்.
செயல் தலைவரான பிறகு பேட்டியளித்த அவர், 'எனக்கு எம்.பி., - எம்.எல்.ஏ., ஆகும் ஆசை இல்லை. ஆனால், ராமதாஸ் விரும்பினால், எம்.எல்.ஏ.,வாக வாய்ப்பு கிடைக்கும்' என்றார்.
இந்நிலையில், வரும் 2026 சட்டசபை தேர்தலில், தர்மபுரி தொகுதியில் மகள் ஸ்ரீகாந்தியை களமிறக்க, ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராமதாஸ் ஆதரவாளர்கள் கூறியதாவது:
அன்புமணிக்கு ஆதரவாக பா.ஜ., இருப்பதால், அவருக்கு சாதகமாகவே தேர்தல் கமிஷனின் முடிவு இருக்கும் என்பது ராமதாசின் எண்ணமாக உள்ளது.
சவுமியாவுக்கு போட்டி எனவே, தி.மு.க., கூட்டணியில் இணைந்து, ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் வென்றாலே, கட்சியை தன் பக்கம் தக்க வைத்து விடலாம் என ராமதாஸ் திட்டமிடுகிறார். அன்புமணி தன் மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்ததால் தான், ஸ்ரீகாந்தியும் அரசியலுக்கு வந்துள்ளார்.
எனவே, சவுமியாவுக்கு போட்டியாக, தர்மபுரி தொகுதியில் மகள் ஸ்ரீகாந்தியை களமிறக்க முடிவு செய்துள்ளார். அதனால், அவருக்கு செயல் தலைவர் பதவி வழங்கும் அறிவிப்பை தர்மபுரியில் வெளியிட்டார்.
இதற்கிடையில், தி.மு.க.,வுடன் கூட்டணி பேசி முடிக்கும் பொறுப்பை, அக்கட்சியுடன் நல்ல நட்பில் உள்ள ஜி.கே.மணியிடம் ராமதாஸ் ஒப்படைத்துள்ளார், அவர் தி.மு.க.,வுடன் பேச்சு நடத்தி வருகிறார். தொகுதி எண்ணிக்கையில் சிக்கல் நீடிக்கிறது.  இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர்- -

