sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

பா.ம.க.,வில் தொடர்கிறது ராமதாஸ் அதிரடி; போட்டியாக பொதுக்குழு கூட்டுகிறார் அன்புமணி

/

பா.ம.க.,வில் தொடர்கிறது ராமதாஸ் அதிரடி; போட்டியாக பொதுக்குழு கூட்டுகிறார் அன்புமணி

பா.ம.க.,வில் தொடர்கிறது ராமதாஸ் அதிரடி; போட்டியாக பொதுக்குழு கூட்டுகிறார் அன்புமணி

பா.ம.க.,வில் தொடர்கிறது ராமதாஸ் அதிரடி; போட்டியாக பொதுக்குழு கூட்டுகிறார் அன்புமணி

3


ADDED : ஜூன் 11, 2025 06:57 AM

Google News

ADDED : ஜூன் 11, 2025 06:57 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா.ம.க.,வில் அன்புமணி ஆதரவு நிர்வாகிகளை நீக்கி விட்டு, அப்பொறுப்புகளில் தன் ஆதரவாளர்களை, ராமதாஸ் நியமித்து வருகிறார். அதற்கு போட்டியாக, மாவட்டவாரியாக பொதுக்குழு கூட்டங்களை நடத்த, அன்புமணி தயாராகி வருகிறாார்.

கட்சியின் நிறுவனரான ராமதாசுக்கும், அதன் தலைவரான மகன் அன்புமணிக்கும் இடையில், கடந்த சில மாதங்களாக மோதல் நீடித்து வருகிறது. இளைஞர்களை மையப்படுத்தி, கட்சி கட்டமைப்பை பலப்படுத்த, தலைவர் பொறுப்பை ஏற்பதாகவும், அன்புமணி செயல் தலைவராக இருப்பார் என்றும், ஏப்ரல் 10ல், ராமதாஸ் அதிரடியாக அறிவித்தார்.

அதன்பின், அக்கட்சியில் இரு கோஷ்டிகள் தோன்றின. இதில், 90 சதவீதத்திற்கும் அதிகமான மாநில, மாவட்ட நிர்வாகிகள், அன்புமணி பக்கம் இருப்பதுடன், கட்சியின் அஸ்திவாரமான வன்னியர் சங்கமும், சமூக நீதி பேரவையும் அவரது கட்டுப்பாட்டில் தான் உள்ளன.

அதனால், கட்சியை முழுமையாக தன் கைக்குள் கொண்டு வர, அன்புமணிக்கு ஆதரவாக செயல்படும் மாவட்டத் தலைவர்களை, ராமதாஸ் நீக்கி வருகிறார். அந்த பொறுப்புகளில் தன் ஆட்களை நியமித்து வருகிறார். ராமதாசால் நீக்கப்பட்டவர்கள், அப்பதவியில் நீடிப்பர் என, அன்புமணி அதிரடி காட்டி வருகிறார்.

இதற்கிடையில், கட்சி விதிகளின் படி மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பதால், விரைவில் பொதுக்குழுவைக் கூட்டவும் ராமதாஸ் திட்டமிட்டார். கூடவே, பொதுக்குழு வாயிலாக, அதிரடியாக சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடிவெடுத்திருந்தார்.

அன்புமணியை தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கி, செயல் தலைவராக அறிவித்த தன்னுடைய முடிவுக்கு, பொதுக்குழு வாயிலாக ஒப்புதல் பெறவும் முடிவெடுக்கப்பட்டிருந்தது. இதற்காக, கட்சியின் வழக்கறிஞர்கள், ஆடிட்டர் ஆகியோரை தைலாபுரம் வரவழைத்து ஆலோசனை நடத்தினார் ராமதாஸ். ஆனால், எதிர்பார்த்தபடியெல்லாம் செய்ய முடியுமா என்ற சந்தேகம் எழ, திடுமென அந்த யோசனையை கைவிட்டார் ராமதாஸ்.

இருந்தபோதும், தொடர்ச்சியாக அன்புமணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கும் ராமதாஸ், கட்சியின் மாவட்ட நிர்வாகிகளை தொடர்ச்சியாக மாற்றிக் கொண்டிருக்கிறார். அன்புமணி ஆதரவாளர்களாக இருக்கும் நிர்வாகிகளிடம் இருந்து பொறுப்புகளைப் பறித்து, தன்னுடைய நேரடி ஆதரவாளர்களுக்கு அளித்து வருகிறார். இப்படி பல மாவட்டத் தலைவர்கள் மற்றும் செயலர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் நேற்று, ராமதாஸ் வெளியிட்ட பட்டியலில், மாநில துணைத் தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ., ரவிராஜ், கடலுார் மாவட்ட வன்னியர் சங்க செயலராக வினோத், கடலுார் வடக்கு மாவட்ட தலைவராக கதிரவன், திருவள்ளூர் வடக்கு மாவட்ட அமைப்பு செயலராக சங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அன்புமணி ஆதரவாளரான, சமூக நீதி பேரவை தலைவராக இருக்கும் கே.பாலுவை, அப்பொறுப்பில் இருந்து நீக்கி விட்டு, அவருக்கு பதிலாக, வழக்கறிஞர் கோபுவை, ராமதாஸ் நியமித்துள்ளார். கே.பாலு அன்புமணிக்கு மிகவும் நெருக்காமானவர் என்பதுடன், கட்சி சார்பில் பல்வேறு வழக்குகளில் வாதாடி வருபவர். அவரை நீக்கியது, அன்புமணியை அதிர வைத்துள்ளது.

அதனால், ராமதாசுக்கு பதிலடியாக, ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டங்களை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். அன்புமணி தலைமையில், வரும் 15 முதல் வரிசையாக நடக்க உள்ள 10 மாவட்ட பொதுக்குழு கூட்ட விபரங்களை நேற்று வெளியிட்டுள்ளனர்.

அது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை: பா.ம.க., உறுப்பினர் சேர்க்கை, ஓட்டுச்சாவடி குழுக்கள் அமைப்பு, கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்க, தமிழகம் முழுதும் ஒருங்கிணைந்த வருவாய் மாவட்ட அளவில் பொதுக்குழு கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

வரும் 15ம் தேதி- காலை, திருவள்ளூர் மாவட்டம், மாலையில் செங்கல்பட்டு மாவட்டம்; 16ம் தேதி காலை காஞ்சிபுரம் மாவட்டம், மாலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுக்குழு நடக்கும். 17ம் தேதி காலை வேலுார், மாலை திருப்பத்துார்; 18ம் தேதி காலை திருவண்ணாமலை, மாலையில் கள்ளக்குறிச்சி; 19ல் காலை -சேலம், மாலை -தர்மபுரி மாவட்டங்களில் பொதுக்குழு கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. மீதமுள்ள மாவட்ட பொதுக்குழு கூட்ட தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us