ராமநாதபுரம் பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் விமானத்தில் சென்னை வந்தது
ராமநாதபுரம் பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் விமானத்தில் சென்னை வந்தது
ADDED : ஆக 31, 2025 03:07 AM

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரியில், முதல் முறையாக மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, உறுப்புகள் அனைத்தும் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கொல்லங்குளத்தை சேர்ந்த செல்வக்குமார் மனைவி சந்தியா, 26. இவர், ஆக., 27ல் டூ - வீலரில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார். பேரையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், அவருக்கு முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவர் மூ ளைச்சாவு அடைந்ததை டாக்டர்கள் உறுதி செய்தனர்.உறவினர்களிடம் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவது குறித்து எடுத்துக்கூறி, டாக்டர்கள் ஒப்புதல் பெற்றனர்.
நேற்று காலை, டாக்டர்கள் சுகுமார், பரணிதரண், அறிவழகன், சரவணன் ஆகியோர், அறுவை சிகிச்சை மூலம் இதயம், நுரையீரல், சிறுநீரகம், கண் ஆகியவற்றை பாதுகாப்பாக எடுத்தனர். உறுப்புகள் அனைத்தும், இரு ஆம்புலன்ஸ்களில் மதுரை கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
சந்தியாவின் உடலுக்கு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனை முதல்வர் அமுதா ராணி, டாக்டர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
அமுதா ராணி கூறுகையில், ''ராமநாதபுரம் மருத்துவக் கல்லுாரியில், முதல் முறையாக மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன.
''இதன் மூலம், ஆறு பேருக்கு மறுவாழ்வு கிடைக்கும்,'' என்றார்.
- நமது நிருபர் - -

