பலாத்கார வழக்குகள் அதிகரிப்பு; தண்டனை விகிதம் குறைவு
பலாத்கார வழக்குகள் அதிகரிப்பு; தண்டனை விகிதம் குறைவு
UPDATED : டிச 12, 2024 05:56 AM
ADDED : டிச 11, 2024 11:41 PM

பெங்களூரு : கர்நாடகாவில் பலாத்கார வழக்குகள் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஆனால் இந்த வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பது மிகவும் குறைவாக உள்ளது.
இதுதொடர்பாக, உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
கர்நாடகாவில் 2022 முதல் 2024 அக்டோபர் வரை, 1,673 பலாத்கார வழக்குகள் பதிவாகின. இவற்றில் வெறும் ஆறு வழக்குகளில் மட்டுமே, குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்தது. 74 வழக்குகளில் விடுதலை ஆகினர். 295 வழக்குகள் ஆய்வில் உள்ளன. 1,187 வழக்குகள் விசாரணை கட்டத்தில் உள்ளன. 108 வழக்குகள் பொய்யான வழக்கு என்பது, விசாரணையில் தெரிந்தது.
300 சம்பவங்கள்
நடப்பாண்டு பெங்களூரில் மட்டுமே 131 பலாத்கார வழக்குகள் பதிவாகின. துமகூரில் 20, சிக்கபல்லாபூர் மற்றும் ஹாசனில் தலா 17 வழக்குகள் பதிவாகின. மாநில குற்ற ஆவணங்கள் அறிக்கையின்படி, நடப்பாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை, 300 சம்பவங்கள் அறிமுகமுள்ள நபர்களால் நடந்தன.
மாநிலத்தில் பலாத்கார வழக்குகளில், தண்டனை அளவு 0.36 சதவீதமாக உள்ளது. சாட்சி, ஆதாரங்கள் பற்றாக்குறை, விசாரணை தாமதமாவது என, பல காரணங்களால் தண்டனை குறைந்துள்ளது.
பலாத்கார வழக்குகளில், பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலம் மிகவும் முக்கியம். சில வழக்குகளில் குடும்பம் அல்லது மற்றவரின் நெருக்கடியாலோ, சமூகத்தில் களங்கம் ஏற்படும் என்ற அச்சத்தினாலோ, பெண்கள் வாக்குமூலத்தை மாற்றி விடுகின்றனர். எனவே தாமாக முன் வந்து, நீதிபதி முன் வாக்குமூலம் அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்கள் கூற மறுக்கின்றனர்.
பலவீனம்
பல வழக்குகளில், பாதிக்கப்பட்டவரே எதிராக சாட்சியம் அளிக்கிறார். இதனால் நீதிமன்றங்களில் வழக்கு பலவீனமாகிறது.
பலாத்காரம் நடந்த 24 மணி நேரத்துக்குள், மருத்துவ பரிசோதனை நடக்க வேண்டும். சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் குழுவினர், சாட்சிகளை சேகரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண், நீதிபதி முன் உண்மையை கூற வேண்டும். அப்போதுதான் குற்றவாளிக்கு தண்டனை கிடைக்கும்.
ஆனால் பெரும்பாலான வழக்குகளில், விசாரணை குழுக்கள் சரியான சாட்சி, ஆதாரங்களை சேகரிப்பது இல்லை. இது வழக்குகளில் பின்னடைவு ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நெருக்கடி
வக்கீல் மஞ்சுளா தேவி கூறியதாவது:
பாலியல் வன்முறை வழக்கு விசாரணை முடிய, மூன்று முதல் ஐந்து ஆண்டு ஆகிறது. விசாரணை தாமதமாவதால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நினைவு சக்தி குறையும். சாட்சிகளும் தலைகீழாக மாறுவர். சில வழக்குகளில், குற்றவாளியை திருமணம் செய்து கொள்ளும்படி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நெருக்கடி தரப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் அல்லது அவரை சார்ந்தவர், புகார் அளிக்கும் போதே பல குளறுபடிகளை செய்கிறார். இதையே குற்றவாளி தரப்பு வக்கீல், சாதகமாக பயன்படுத்தி வாதாடி, குற்றவாளியை காப்பாற்றுகிறார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைப்பதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.