பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று உழைத்த ரத்தன் டாடா
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று உழைத்த ரத்தன் டாடா
ADDED : நவ 10, 2024 12:30 AM

ரத்தன் டாடா நம்மை விட்டுப் பிரிந்து ஒரு மாதமாகிறது. அவர் நம்மிடையே இல்லாதது, நாடு முழுதும் பெரு நகரங்கள் முதல் சிறு கிராமங்கள் வரை வசிக்கும் அனைத்து தரப்பு மக்களாலும் ஆழமாக உணரப்படுகிறது. அனுபவமிக்க தொழிலதிபர்கள், வளர்ந்து வரும் தொழில் முனைவோர்கள், தொழில் வல்லுனர்கள், அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கின்றனர். சுற்றுச்சூழலின் மீது ஆர்வம் உள்ளவர்களும், அடுத்தவர்களுக்கு உதவுவதில் அர்ப்பணிப்பு உள்ளவர்களும் வருந்துகின்றனர்.
இளைஞர்களுக்கு ரத்தன் டாடா ஒரு உத்வேகம், கனவுகள் தொடரத் தகுந்தவை என்பதை நினைவூட்டும் ஆளுமை. வெற்றி என்பது இரக்கம் மற்றும் பணிவுடன் இணைந்து இருக்க முடியும் என்பதை நினைவூட்டுபவர்.
அவரது தலைமையிலான டாடா குழுமம், உலக அளவில் மரியாதை, நேர்மை மற்றும் நம்பகத்தன்மையை உள்ளடக்கிய புதிய உயரங்களுக்கு முன்னேறியது. இருப்பினும், அவர் தன் சாதனைகளை பணிவுடனும், கருணையுடனும் எளிதாக ஏற்றுக்கொண்டார்.
மற்றவர்களின் கனவுகளுக்கு, ரத்தன் டாடாவின் அசைக்க முடியாத ஆதரவு என்பது, அவரது பண்புகளில் ஒன்றாகும். சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவின் ஸ்டார்ட் அப் சூழல் அமைப்புக்கு வழிகாட்டியாகவும், பல நம்பிக்கைக்குரிய முயற்சிகளில் முதலீடு செய்பவராகவும் அவர் அறியப்பட்டார்.
நேர்மறையான தாக்கம்
இளம் தொழில் முனைவோரின் நம்பிக்கைகளையும், விருப்பங்களையும் அவர் புரிந்து கொண்டார். இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் அவர்களின் திறனை அங்கீகரித்தார். அவர்களின் முயற்சிகளை ஆதரிப்பதன் வாயிலாக, தைரியமான முடிவுகளை எடுக்கவும், எல்லைகளை நோக்கி முன்னேறவும் அதிகாரம் அளித்தார்.
இது, புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவு கலாசாரத்தை உருவாக்குவதில் நீண்ட துாரம் சென்றுள்ளது. இது, வரும் பல தசாப்தங்களுக்கு, இந்தியாவில் நேர்மறையான தாக்கத்தை தொடரும் என நான் நம்புகிறேன்.
சிறந்த தரம் என்பதை ரத்தன் டாடா தொடர்ந்து ஆதரித்து வந்தார். இந்திய நிறுவனங்கள் உலகளாவிய மாதிரி அளவுகோல்களை நிறுவ வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த தொலைநோக்கு பார்வை, உலகத் தரத்திற்கு ஒப்புமை உடையதாக இந்தியாவை உருவாக்க, நம் எதிர்காலத் தலைவர்களுக்கு ஊக்கமளிக்கும் என்று நம்புகிறேன்.
அவரது மகத்துவம், சக தொழிலாளர்களுடன் பங்கேற்கும் அலுவலக கூட்டம் அல்லது சக மனிதர்களுக்கு உதவுவதோடு மட்டும் நின்று விடவில்லை. அவரது கருணை, அனைத்து உயிர்களுக்குமாக விரிவடைந்தது.
விலங்குகள் மீதான அவரது ஆழ்ந்த அன்பு நன்கு அறியப்பட்டது. விலங்குகள் நலனை மையமாகக் கொண்ட, ஒவ்வொரு சாத்தியமான முயற்சியையும் அவர் ஆதரித்தார்.
எந்த ஒரு வணிக முயற்சியையும் போலவே, தன் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்த தன் நாய்களின் புகைப்படங்களை அவர் அடிக்கடி பகிர்ந்து கொண்டார்.
உண்மையான தலைமைத்துவம் என்பது, ஒருவரின் சாதனைகளால் மட்டுமல்ல; மிகவும் பாதிக்கப்படக்கூடிய நபர்களை கவனித்துக்கொள்ளும் ஒருவரின் திறனாலும் அளவிடப்படுகிறது என்பதை, அவரது வாழ்க்கை நம் அனைவருக்கும் நினைவூட்டுவதாக அமைந்தது.
நெருக்கடியான காலங்களில் ரத்தன் டாடாவின் தேசபக்தி, கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு பிரகாசமாக வழிகாட்டியது. 26/11 பயங்கரவாத தாக்குதலுக்கு பின், மும்பையில் உள்ள புகழ்பெற்ற தாஜ் ஹோட்டலை, அவர் விரைவாக மீண்டும் திறந்தது, -'இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது; பயங்கரவாதத்திற்கு அடிபணிய மறுக்கிறது' என, தேசத்திற்கு அணி திரளும் ஓர் அறைகூவலாக மாறியது.
தனிப்பட்ட முறையில், பல ஆண்டுகளாக அவரை மிக நெருக்கமாக அறிந்து கொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. நாங்கள் குஜராத்தில் நெருக்கமாக பணியாற்றினோம். அங்கு அவர் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த பல திட்டங்கள் உட்பட, விரிவான முதலீடுகளை செய்தார்.
சில வாரங்களுக்கு முன், ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ் உடன், நான் வதோதராவில் இருந்தேன்.
இந்தியாவில், 'சி- 295' விமானங்களை தயாரிப்பதற்கான தொழிற்சாலை வளாகத்தை நாங்கள் கூட்டாகத் துவங்கி வைத்தோம். ரத்தன் டாடா தான் இதற்கான பணிகளை துவங்கினார். அதனால், நிகழ்ச்சிக்கு ரத்தன் டாடாவின் வருகை இல்லாதது, பெரும் குறையே என்பதை சொல்லத் தேவையில்லை.
ரத்தன் டாடாவை, கடிதங்களின் நாயகர் என்ற முறையில் நான் நினைவுகூர்கிறேன். அரசு நிர்வாகம் சம்பந்தப்பட்டது, அரசின் செயல்பாட்டை பாராட்டி வாழ்த்து தெரிவிப்பது, தேர்தல் வெற்றிக்குப் பின் வாழ்த்து அனுப்புவது என, பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் அடிக்கடி எனக்கு கடிதம் எழுதுவார்.
நான் மத்திய அரசு பொறுப்புக்கு சென்ற பின்னரும், எங்களின் நெருங்கிய தொடர்புகள் தொடர்ந்தன.
நம் தேசத்தை கட்டியெழுப்பும் முயற்சிகளில், அவர் ஓர் உறுதியான பங்குதாரராக இருந்தார்.
குறிப்பாக, 'துாய்மை இந்தியா' இயக்கத்திற்கு ரத்தன் டாடா அளித்த ஆதரவு, என் இதயத்திற்கு நெருக்கமானது. இந்தியாவின் முன்னேற்றத்திற்கு துாய்மை, சுகாதாரம், துப்புரவு போன்றவை இன்றியமையாதது என்பதை புரிந்து, இந்த வெகுஜன இயக்கத்திற்கு குரல் கொடுப்பவராக அவர் இருந்தார்.
அக்டோபர் மாத துவக்கத்தில், துாய்மை இந்தியா இயக்கத்தின் 10வது ஆண்டு விழாவையொட்டி, அவர் அனுப்பிய மனமார்ந்த காணொளி செய்தி எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. இது, அவரது கடைசி பொதுவெளி தோற்றங்களில் ஒன்றாகும்.
திட்டவட்டம்
ரத்தன் டாடாவின் இதயத்திற்கு நெருக்கமான மற்றொரு செயல் மருத்துவம். குறிப்பாக, புற்று நோய்க்கு எதிரான போராட்டம். இரண்டு ஆண்டுகளுக்கு முன், அசாமில் நடந்த நிகழ்ச்சியில், மாநிலத்தில் பல்வேறு புற்று நோய் மருத்துவமனைகளை நாங்கள் இணைந்து துவங்கி வைத்ததை நினைவுகூர்கிறேன்.
அந்த நிகழ்வில், அவர் ஆற்றிய உரையில், தன் இறுதி ஆண்டுகளை மருத்துவத்திற்கு அர்ப்பணிக்க விரும்புவதாக திட்டவட்டமாக கூறியிருந்தார்.
ஒரு நியாயமான சமூகம், அதில் மிகவும் பாதிக்கப்படுவோருக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன், உடல்நலத்தையும், புற்று நோய் சிகிச்சையையும் எளிதில் அணுகும் வகையிலும், குறைந்த செலவுடையதாகவும் மாற்றுவதற்கான அவரது முயற்சிகள், நோய்களுடன் போராடுவோர் மீதான ஆழ்ந்த ஒப்புணர்வில் வேரூன்றியிருந்தன.
இன்று அவரை நாம் நினைவுகூரும் போது, அவர் கற்பனை செய்த சமூகத்தையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
அந்த சமூகத்தில் வணிகம் நன்மைக்கான சக்தியாக செயல்பட முடியும்; அந்த சமூகத்தில் ஒவ்வொரு தனிநபரின் திறனும் மதிப்புக்குரியது; அந்த சமூகத்தில் அனைவரின் நல்வாழ்வாலும், மகிழ்ச்சியாலும் முன்னேற்றம் அளவிடப்படும்.
அவர் தொட்ட வாழ்க்கையிலும், அவர் வளர்த்த கனவுகளிலும் அவர் உயிர் வாழ்கிறார். இந்தியாவை சிறந்த, கனிவான, நம்பிக்கை யான இடமாக மாற்றியதற்காக, பல தலைமுறைகள் அவருக்கு நன்றியுள்ளதாக இருக்கும்.