ரேஷன் அரிசி, பருப்பில் மட்டுமல்ல ரேஷன் கார்டுகளிலும் வந்து விட்டது 'கலப்படம்!'
ரேஷன் அரிசி, பருப்பில் மட்டுமல்ல ரேஷன் கார்டுகளிலும் வந்து விட்டது 'கலப்படம்!'
UPDATED : செப் 25, 2024 04:56 PM
ADDED : செப் 25, 2024 12:14 AM

கோவை : கோவையில் உள்ள ரேஷன்கடைகளில், போலி ஸ்மார்ட் ரேஷன்கார்டுகள் அதிகரித்து விட்டன. இந்த கார்டுகளை பயன்படுத்தி, இலவச அரிசியை பெற்று விற்பனை செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இது குறித்து எதுவும் தெரியாத, மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள், கலெக்டரிடம் புகார் தெரிவித்தவுடன், வாரிச்சுருட்டி எழுந்து விசாரிக்கத் துவங்கியுள்ளனர்.
கோவையில் உள்ள 12 தாலுகாக்களில், 1,401 ரேஷன்கடைகளும், 11, 46,045 ரேஷன் கார்டுகளும் உள்ளன. மாதந்தோறும் பச்சரிசி, புழுங்கல் அரிசி, துவரம்பருப்பு, பாமாயில், கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இது தவிர, பொங்கல் பரிசுத்தொகை, பொங்கல் பண்டிகைக்கு தேவையான அரிசி, வெல்லம் அல்லது சர்க்கரை, கரும்பு, இலவச வேஷ்டி, சேலை, தீபாவளி பண்டிகைக்கான கூடுதல் சர்க்கரையும் வழங்கப்படுகின்றன.
இச்சூழலில், கோவையில் பல ரேஷன்கடைகளில், போலியான ஸ்மார்ட் ரேஷன்கார்டுகள் பயன்படுத்தப்படுவதாகவும், அதன் வாயிலாக பொருட்கள் வாங்கி வெளிச்சந்தையில், அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆலாந்துறை திருப்பதி செட்டியார் தோட்டத்தில் வசிக்கும் காயத்ரி, கலெக்டர் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவுக்கு அளித்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது:
நான் கடந்த பத்து மாதங்களாக எனது பெற்றோரின் வீட்டில் இருக்கிறேன். என் ஸ்மார்ட் கார்டு எண் 31BPO39PY ஆகும். மத்வராயபுரம் ரேஷன்கடையில் பொருட்கள் வாங்கி வந்தேன். ஆனால் எனது ரேஷன்கார்டை போலியாக தயாரித்த வேறு ஒருவர், கடந்த எட்டு மாதங்களாக ரேஷன் பொருட்களை பெற்று வருகிறார்.
குறுஞ்செய்தி வந்ததால், நேரில் சென்று விசாரித்த போது, ரேஷன்கார்டை ஸ்கேன் செய்வதில், எந்த பிரச்னையும் இல்லை எனில், பொருட்களை வழங்கிவிடுவேன் என்கிறார் கடைக்காரர்.
கார்டு கொண்டு வந்திருக்கும் நபர் யார் என்று கண்டறிய வேண்டும். அவரது கைரேகையை ஸ்கேன் செய்ய வேண்டும்.
இந்த பணிகளை செய்யாததால், போலியாக ஸ்மார்ட் கார்டுகளை தயாரித்து, சிலர் மோசடியில் ஈடுபடுகின்றனர்.
ஆலாந்துறையை அடுத்துள்ள மத்வராயபுரத்தில், இது போன்று ஏராளமான ஸ்மார்ட் கார்டுகளை போலியாக பயன்படுத்துகின்றனர். இது குறித்து, கலெக்டரும், மாவட்ட வழங்கல் அலுவலரும் விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் இது போன்று, ஏராளமான போலி ஸ்மார்ட் ரேஷன்கார்டுகள் புழக்கத்தில் உள்ளதாக, புகார்கள் வருகின்றன. ஆனால், இது குறித்து மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகளுக்கு எதுவும் தெரியவில்லை.
போலி கார்டுகளை வழங்கல் துறை அதிகாரிகள் அழிக்க வேண்டும்; தவறினால் ஏழை மக்களுக்கான உணவு பொருட்கள், வெளிமார்க்கெட் செல்வதை தடுக்க முடியாது.