'ரஸகுல்லா விற்பனை தமிழகத்தில் அமோகம்'; சொல்கிறார் 'ஸ்மார்ட் பஜார்' சி.இ.ஓ., தாமோதர் மால்
'ரஸகுல்லா விற்பனை தமிழகத்தில் அமோகம்'; சொல்கிறார் 'ஸ்மார்ட் பஜார்' சி.இ.ஓ., தாமோதர் மால்
ADDED : அக் 20, 2024 01:11 AM

மாறிவரும் நுகர்வு பழக்கங்கள் பற்றி, கடைக்காரர்களுக்கு தான் நன்கு தெரியும். நுகர்வு அதிகம் உள்ள இந்த பண்டிகை பருவத்தில் அது பற்றி கேட்டு அறிய, நாடு முழுவதும் 900க்கும் மேற்பட்ட சூப்பர் மார்கெட்டுகளை இயக்கி, மளிகை வியாபாரத்தில் கோலோச்சும் ரிலையன்ஸ் ரீடெயிலின் மளிகை பிரிவிற்கான சி.இ.ஓ., தாமோதர் மால் மற்றும் அந்த நிறுவனத்தின் தமிழக தலைவர் ஆவுடையப்பன் பிள்ளையிடம் பேசினோம். அவர்கள், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
தமிழகம் உங்களுக்கு முக்கியமான சந்தையா?
நாட்டியலேயே பெரிய மளிகை சில்லரை வர்த்தகர் நாங்கள் தான். சென்னை விலகலாக தமிழகத்தில் தான் எங்கள் கடைகளின் அடர்த்தி அதிகம். இதில் ஸ்ரீ கண்ணன் ஸ்டோர்ஸ் போன்று முன்பு தனியாக செயல்பட்டு வந்த சில்லரை வர்த்தகர்களும் எங்களுடன் இணைந்தவுடன் ஸ்ரீ கண்ணன் ஸ்மார்ட் என்ற பெயரில் செயல்படுகின்றனர்.
இப்படிப்பட்ட கடைகளை இணைத்துக்கொண்ட பின்னும் அவற்றின் நிறுவனர்களுடன் தான் இணைந்து பணியாற்றுகிறோம். உள்ளூர் தேவைகள் பற்றிய அவர்களது அறிவு எங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது.
ஓசூர் முதல் நாகர்கோவில் வரை அனைத்து இடங்களிலும் இருக்கிறோம். தமிழகத்தில் தற்போது 215 கடைகளை நடத்தி வருகிறோம். இங்கு, 500 விவசாயிகளிடம் இருந்து மாதம் 1,500 டன் காய்கறி கொள்முதல் செய்கிறோம். அதனால், தமிழகம் எங்களுக்கு அதி முக்கியம் என்று சொன்னால் மிகையாகாது.
நீங்கள், பண்டிகை காலங்களின் மீது சிறப்பு கவனம் செலுத்தி, தள்ளுபடி திட்டங்களை அதிகம் கொடுப்பதை கவனிக்கிறோம். காரணம் என்ன? அமேசான் போன்ற இணைய வர்த்தக தளங்களுடன் போட்டியா?
நான் மளிகை வியாபாரத்தில் நெடுங்காலமாக பணியாற்றி வருகிறேன். பண்டிகை காலங்கள் நுகர்வுக்கு உரிமை கொடுக்கின்றன என்பது என் பார்வை. அப்போது செய்யப்படும் செலவு பெரிய அளவில் குடும்பத்திற்குள் கேள்விக்கு உள்ளாவது இல்லை.
இந்த பண்டிகை பருவத்தில் உங்களுக்கு வியாபாரம் எப்படி இருக்கிறது? கடந்த காலங்களை பார்க்கும்போது இப்போது நுகர்வில் ஏதேனும் மாற்றம் தெரிகிறதா?
கண்டிப்பாக மாற்றம் ஏற்பட்டுள்ளது! வியாபாரமும் சிறப்பாக இருக்கிறது!
வழக்கமாக, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் தங்கள் வர்த்தக தொடர்புகளுக்கு தீபாவளிக்கு அன்பளிப்பு வழங்குவர். ஆனால், இந்த முறை, சிறிய நிறுவனங்களும் ஆர்டர் கொடுக்க துவங்கி உள்ளனர்.
பெரிய ஆர்டர்கள் இல்லை. 1,0-20 என்ற எண்ணிக்கையில், டிபன் பாக்ஸ் போன்ற வீட்டு உபயோக போருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
இதை, குறிப்பாக, திருப்பூர், கோவை, நாமக்கல் மற்றும் ஈரோட்டில் பார்க்க முடிகிறது.
இது எங்களுக்கே ஆச்சரியம் தான். ஏனென்றால், தமிழகத்தில், வீட்டில் செய்த தின்பண்டங்களை நெருக்கமானவர்களுக்கு கொடுப்பது மட்டும் தான் வழக்கமாக இருந்தது. இப்போது தீபாவளி அன்பளிப்பு கலாசாரம் பரவி வருவது தெரிகிறது.
தமிழகத்தில் பாரம்பரிய இனிப்புகளை தாண்டி, இந்த பண்டிகை காலத்தில் ரஸகுல்லா வியாபாரம் அதிகரித்துள்ளது மற்றுமொரு சுவாரசியம். ரஸகுல்லா போலவே, இங்கு 'முந்திரி கேக்' எனப்படும் 'காஜு கத்லி' வட நாட்டில் கோலோச்சி வந்த இனிப்பாக இருந்தது. ஆனால், இப்போது, நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகம் வியாபாரமாகிறது.
இதே போல தான், உ.பி.,யில் தென்னாட்டு இனிப்பான மைசூர் பாகு வியாபாரம் கடுமையாக அதிகரித்து இருக்கிறது. இன்று நாட்டிலேயே மைசூர் பாகு நுகர்வில் உ.பி., இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா?
இதற்கு காரணம், ஒருவரின் பாரம்பரியம் மற்றொருவரின் நவீனமாக அமைவது தான். மக்களிடையே வசதி அதிகரிக்கும்போது புதுமையை நோக்கி நகர்கின்றனர்.
பனீரும் ஒரு எடுத்துக்காட்டு. பாக்கெட்டில் மட்டும் அல்லாமல், 'லுாஸ் பனீர்' என்ற பெரிய பனீர் கட்டிகளை தயாரித்த அன்றே வெட்டி வியாபாரம் செய்கிறோம். அதற்கும் தமிகத்தில் ஏகப்பட்ட வரவேற்பு உருவாகி உள்ளது.
அந்தந்த பிராந்தியத்திற்கு வழக்கமான பண்டிகைகளை தாண்டி, இப்போது, பிற பிராந்திய பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன. காரணம் நகரமயமாதல்.
பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் கூடி வாழும்போது, தங்கள் நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டினரின் பண்டிகைகளிலும் மக்கள் கலந்துகொள்கின்றனர். அதனால், இப்போது, ஓணம் கொண்டாட்டமும் அது சார்ந்த நுகர்வும் வடநாட்டில் அதிகரித்து வருகிறது.
மகாராஷ்டிராவில் விமரிசையாக கொண்டாடப்படும் பிள்ளையார் சதுர்த்தி சார்ந்த நுகர்வு தமிழகத்தில் அதிகரித்து உள்ளது.
இதற்கும் மேலாக ஒரே நகரத்திற்குள்ளேயே சில இடங்களில் சில பிராந்தியங்களை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். உதாரணமாக, சென்னையில் சவுகார்பேட்டை. அவர்களது பண்டிகை காலம் நகரத்தின் மற்ற பகுதிகளில் இருந்து வேறுபடுகிறது. இதற்கும் எங்கள் கடைகள் ஆயத்தமாக இருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட சவால்களும், சுவாரசியங்களும் தான் எங்களை பண்டிகை காலங்கள் மீது கவனம் செலுத்த வைக்கிறது.
இனிப்புகளையும் அன்பளிப்புகளையும் தாண்டி, பண்டிகை காலத்தில் வேறு எந்த வியாபாரம் சூடு பிடித்துள்ளது?
எங்கள் ஸ்மார்ட் பஜார் கடைகளில் மளிகை தவிர அனைத்து விதமான வீட்டு உபயோக பொருட்களும் கிடைக்கும். நியாய விலை ஆயத்த ஆடைகளும் கிடைக்கும். இந்த பண்டிகை பருவத்தில், எங்கள் ஆயத்த ஆடை வியாபாரம் சூடுபிடித்துள்ளது ஒரு சுவாரசியம்.
10 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் 'சூப்பர் மார்கெட்வாலா' என்று ஒரு புத்தகம் எழுதி இருந்தீர்கள். அதில், ஒரு விஷயம் மனதில் நிற்கிறது. உணவு தொழிலில் ஈடுபட விரும்பும் திறமையான பெண்களை ஊக்குவித்து சூப்பர் மார்கெட்டில் அவர்களது தயாரிப்புகள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று எழுதி இருந்தீர்கள். ரிலையன்சில் அதை செய்ய முடிந்ததா?
கடந்த 10 ஆண்டுகளில் நிறைய மாறி இருக்கிறது. வீட்டில் சிறிய அளவில் உணவு பண்டங்களை தயாரித்து வியாபாரம் செய்வதை தாண்டி திறமையானவர்கள் 'ஸ்டார்ட் அப்' நோக்கி நகர்ந்துவிட்டனர். 'ஸ்டார்ட் அப்' கலாசாரம் உண்மையிலேயே பெரிய அளவில் மலர்ந்துள்ளது.
அதற்கு இரண்டு உதாரணங்கள் சொல்கிறேன். 'யோகா பார்' என்ற ஊட்டச்சத்து உணவை அனேக இடங்களில் பார்த்திருப்பீர்கள். அதை உருவாக்கியவர்கள் பெங்களூரில் வசிக்கும் இரு தமிழ் பெண்கள். அவர்கள் வீட்டு அடுக்களையில் உருவானது தான் 'யோகா பார்'. இன்று தேசிய 'பிராண்ட்' ஆகிவிட்டது.
எங்கள் கடைகளில் அதிகம் வியாபாரமாவது, 'லால் ஸ்வீட்ஸ்'. பெங்களூரில், வீட்டின் கார் ஷெட்டில் துவங்கப்பட்ட நிறுவனம் தான் அது, என்றால் நம்புவீர்களா?
'குயிக் காமர்ஸ்' என்று 10- - 15 நிமிடங்களில் வீட்டில் மளிகை பொருட்களை கொண்டு தருவது, அபரிமிதமாக வளர்ந்து வருகிறது. இதனால், உங்கள் சூப்பர் மார்கெட்டுகளில் ஆட்கள் வருவது குறைந்துள்ளதா?
மளிகை வியாபாரத்தில் இரண்டு அங்கங்கள் உண்டு. நுகர்வோர் கடைக்கு சென்று பொருள் வாங்குவது ஒரு அங்கம், வீட்டிற்கு பொருட்களை வரவழைப்பது மற்றொரு அங்கம். சூப்பர் மார்கெட் வருவதற்கு முன்பே, மளிகை கடைகள் வீட்டிற்கு பொருட்களை கொண்டு சேர்ப்பதுண்டு. கிட்டத்தட்ட 50% மளிகை வியாபாரம் அப்படித்தான் நடக்கும்.
இதை கருதி தான், எங்கள் ஸ்மார்ட் பஜாரிலும் வீட்டிற்கு பொருட்களை அனுப்புகிறோம்.
சூப்பர் மார்கெட் வளர்ச்சியால் கடைக்கு வரும் அனுபவம் நவீனமாகி உள்ளது. குயிக் காமர்ஸ் வருகையால் வீட்டிற்கு வரவழைப்பது நவீன மயமாகி உள்ளது, அவ்வளவு தான்.
நம் நாட்டை போன்ற நுகர்வு வளர்ந்து வரும் சூழலில், ஒன்றின் வருகையால் மற்றொன்று பாதிக்கப்படுவதெல்லாம் இல்லை.
எங்களுடைய 4,000 ஸ்மார்ட் பஜார்களிலும், நுகர்வோர் வருகை அதிகரித்த வண்ணம் தான் இருக்கிறது.
உங்கள் தொழில் உத்திகளில் ஆச்சரியமான ஒரு விஷயம், நீங்கள் நாளிதழ் போன்ற அச்சு ஊடகத்தில் விளம்பரங்களுக்கு அதிகம் செலவு செய்கிறீர்கள். டிஜிட்டலை பலரும் மெச்சும்போது, ஏன் இப்படி ஒரு யுத்தி?
நாளிதழ் போன்ற அச்சு ஊடகத்தில் எங்கள் சலுகைகளை விளம்பரம் செய்தால் தான் நுகர்வோர் இடையே நம்பிக்கை ஏற்படும். ஏனெனில், நாளிதழ்கள் தான் அதிக நம்பகத்தன்மை உள்ள ஊடகம்.
டிஜிடல் அல்லது டிவியை மட்டுமே நம்பி தொழில் நடத்த முடியாது. நீங்கள் பெரிய டிஜிட்டல் வர்த்தக தளங்களை கூட பாருங்களேன். அவர்களுமே அச்சு ஊடகங்களில் விளம்பரப்படுத்துகின்றனர்.