தமிழ் புத்தாண்டு ஆரம்பத்தில் பஞ்சாங்கம் படித்தால் ஐஸ்வர்யம்: காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் அருளாசி
தமிழ் புத்தாண்டு ஆரம்பத்தில் பஞ்சாங்கம் படித்தால் ஐஸ்வர்யம்: காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் அருளாசி
ADDED : ஏப் 13, 2025 03:14 AM

சென்னை: ''சித்திரை ஆரம்பத்திலே பஞ்சாங்கங்களை படிப்பதன் வாயிலாக, ஐஸ்வர்யம், ரோக நிவர்த்தி, பாப நிவர்த்தியோடு, நல்ல காரியங்கள் தங்கு தடையின்றி பூர்த்தி அடையும்,'' என, காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசி வழங்கினார்.
தமிழ் புத்தாண்டு முன்னிட்டு, திருப்பதி மடத்தில் இருந்து, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசி வழங்கியதாவது:
நமது தர்மத்தில் சித்திரை மாதம் துவங்கி, பங்குனி மாதம் வரை, விசேஷமாக ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பண்டிகைகளை, விரதங்களை அனுஷ்டித்து வருகிறோம். பங்குனி மாதக் கடைசியில் பங்குனி உத்திரம் என்பதாக, சுவாமியுடைய பார்வதி திருக்கல்யாணத்தை நாம் செய்கிறோம்.
இந்த சித்திரை மாதம் அதாவது சாந்திர மாதப்படி, புதிய ஆண்டாக ஸ்ரீ விசுவாவசு ஆரம்பிக்க இருக்கிறது. வேதத்திலே ஒரு தேவதையின் பெயராக விசுவாவசு என்று குறிப்பிடப்படுகிறது.
முக்கியமாக பெண்கள், மாத்ரு சக்தியின் தேவதையாக விசுவாவசு கருதப்படுகிறார். உலகத்திற்கு நல்ல பொருளை அளிக்கக் கூடியது விசுவாவசு என்ற பதத்தில் அமைந்து இருக்கிறது.
இந்த சித்திரை ஆரம்பத்திலே பஞ்சாங்கங்களை படிப்பதன் வாயிலாக ஐஸ்வர்யம், ரோக நிவர்த்தி, பாப நிவர்த்தியோடு, நல்ல காரியங்கள் தங்கு தடையின்றி பூர்த்தி அடையும். இந்த பஞ்சாங்கத்தை படித்து பூஜைகள் செய்வதனாலே, நமக்கு முழுமையாக தேவதைகளின் ஆசி கிடைக்கிறது.
இந்த ஆண்டில் பொதுவாக பலன்கள் அமைந்து இருந்தாலும், நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய தேவை இன்று இருக்கிறது.
கடந்த, 1960ல் இருந்து ஐந்து, ஆறு கிரகங்கள் ஒன்று சேர்ந்த நிலையில், நம்முடைய காஞ்சி பெரியவர்கள், நவக்கிரஹ ஸ்தோத்திரங்கள், கோளறு பதிகங்களையும் படிக்க வேண்டும் என, ஆசி அருளினர்.
அதேபோன்று, இந்த விசுவாவசு ஆண்டிலும் நவக்கிரக ஸ்தோத்திரங்களை, குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை ஆறு கிரகங்கள் ஒன்று சேரும் நிலையில் படித்து பலன் பெற வேண்டும்.
இவ்வாறு அருளாசி வழங்கினார்.

