ரெரா' உத்தரவை மீறினால் 3 ஆண்டு சிறை: ரியல் எஸ்டேட் ஆணையம் அறிவிப்பு
ரெரா' உத்தரவை மீறினால் 3 ஆண்டு சிறை: ரியல் எஸ்டேட் ஆணையம் அறிவிப்பு
ADDED : ஜன 18, 2025 01:14 AM

சென்னை: 'ரெரா எனப்படும், ரியல் எஸ்டேட் ஆணைய உத்தரவுகளை நிறைவேற்ற தவறினால், சம்பந்தப்பட்ட நபருக்கு, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வழிகள் உள்ளன' என, ரியல் எஸ்டேட் ஆணையம் தெரிவித்துள்ளது.
வீடு, மனை விற்பனையில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், 2016ல் நிறைவேற்றப்பட்டது.
இழப்பீடு
இதை அமல்படுத்த, தமிழகத்தில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், தீர்ப்பாயம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டன. வீடு, மனை வாங்குவோர் தெரிவிக்கும் புகார்களை, இந்த ஆணையம் விசாரித்து உத்தரவுகளை பிறப்பிக்கிறது.
குறிப்பிட்ட காலத்தில், வீட்டை ஒப்படைக்காத நிறுவனங்கள், அதற்காக வசூலித்த பணத்தை, வட்டியுடன் திருப்பித் தர உத்தரவிடுகிறது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணமாக, இழப்பீடு வழங்கவும் ஆணையம் உத்தரவிடுகிறது.
இதில், பெரும்பாலான உத்தரவுகளை, கட்டுமான நிறுவனங்கள் செயல்படுத்தாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
மனுதாரர்கள் மீண்டும் முறையிட்டால், ரியல் எஸ்டேட் ஆணையம், சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்துக்கு எதிராக, 'வாரன்ட்' பிறப்பித்து, வருவாய் மீட்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க, கலெக்டர்களுக்கு உத்தரவிடப்படுகிறது. இதுபோன்ற ஆணையத்தின் பெரும்பாலான உத்தரவுகள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளன.
பதிவு செய்ய வேண்டும்
இந்நிலையில், ரியல் எஸ்டேட் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில், 5,381 சதுரடி அல்லது அதற்கு மேற்பட்ட நிலப்பரப்பில் செயல்படுத்தப்படும் கட்டுமான திட்டங்களை, ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.
அவ்வாறு பதிவு செய்யாமல், வீடு, மனை விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதில், ரியல் எஸ்டேட் சட்டத்தின், கீழ் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை, கட்டுமான நிறுவனங்கள் நிறைவேற்ற தவறினால், மூன்று ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
கட்டுமான நிறுவனங்கள் இதை உணர்ந்து செயல்பட வேண்டும். புதிதாக, வீடு, மனை வாங்குவோர், கட்டுமான திட்டம் குறித்த விபரங்களை, ரியல் எஸ்டேட் ஆணையத்தின், www.rera.tn.gov.in இணையதளத்தில் பார்வையிடலாம்.
இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.