அமைச்சர்கள் நீக்கம்; மா.செ.,க்கள் நியமனம்: தேர்தல் முடிவுக்காக காத்திருக்கிறது தி.மு.க.,
அமைச்சர்கள் நீக்கம்; மா.செ.,க்கள் நியமனம்: தேர்தல் முடிவுக்காக காத்திருக்கிறது தி.மு.க.,
ADDED : மே 24, 2024 04:41 AM

சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் முடிந்த பின், தி.மு.க., அமைச்சரவையில் மாற்றம் செய்து, கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சவும், இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளித்து, புதிய மாவட்ட செயலர்களை நியமிக்கவும், தி.மு.க., மேலிடம் திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான பின், ஜூன் இரண்டாவது வாரத்தில், தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம், 10 முதல் 15 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்தியில், 'இண்டியா' கூட்டணி ஆட்சி அமையும் பட்சத்தில், ஜூலை இரண்டாவது வாரத்திற்கு, சட்டசபை கூட்டத்தை தள்ளி வைக்கும் திட்டமும் உள்ளது.
அதற்கு காரணம், இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால், தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு, 'பவர்புல்' இலாகாக்களை பெற வேண்டிய வேலை உள்ளது. அதற்காக, முதல்வர் டில்லி செல்ல வேண்டும் என்பதால், அந்த நேரத்தில் சட்டசபை கூட்டத்தை கூட்டுவதற்கு வாய்ப்பு இருக்காது.
மாற்றம்
இந்நிலையில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் முடிந்த பின், தி.மு.க., அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அப்போது, உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்றும் தெரிகிறது. வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு முன், கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில், இளைஞர்களுக்கு மாவட்ட செயலர் பதவி வழங்கவும், தி.மு.க., மேலிடம் தயாராகி உள்ளது.
இதுகுறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: லோக்சபா தேர்தலில் சரிவர செயல்படாத அமைச்சர்களிடமிருந்து, மாவட்ட செயலர் பதவி பறிக்கப்படும். தற்போதைய அமைச்சர்களில், தங்கள் துறைகளில் சிறப்பாக செயல்படாதவர்களை மாற்ற வாய்ப்பு உள்ளது. வட மாவட்டத்தை சேர்ந்த ஒரு அமைச்சர், தேர்தல் பணிகளை முற்றிலும் புறக்கணித்து விட்டார் என்பதால், அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
தென் மண்டலத்தில் மூத்த அமைச்சர், தன் ஆதரவாளருக்கு, 'சீட்' கிடைக்காத அதிருப்தியில், தன் சொந்த சமுதாயத்தினரின் ஓட்டுக்களை, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக திருப்பிய புகாரில் சிக்கியுள்ளார்.
நெருக்கடி
வயது முதிர்வு, உடல் நலம் ஒத்துழைக்காத அமைச்சர்களின் பதவிகளும் பறிக்கப்பட உள்ளன. திருநெல்வேலி, தென்காசி, சேலம், தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களுக்கு, அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லை.
சட்டசபை தேர்தலுக்கு முன், இந்த மாவட்டங்களுக்கு, ஜாதி அடிப்படையில், அமைச்சரவையில் வழங்கப்பட உள்ளது. லோக்சபா தேர்தல் நேரத்தில், அம்மாவட்டங்களுக்கு அமைச்சர் இல்லாததால், பொறுப்பு அமைச்சராக வேறு மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.
ஒரு அமைச்சர் தன் மாவட்டத்திலும், கூடுதலாக பொறுப்பேற்ற மாவட்டத்திலும் தேர்தல் வேலைகளை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், அதிக நெருக்கடியும் செலவும் ஏற்பட்டது. அதற்கு தீர்வாக, தற்போதைய அமைச்சரவை மாற்றம் இருக்கும்.
அமைச்சர்கள் மாற்றத்திற்கு பின், கட்சியில் இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலர் நியமனமும் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அப்போது, இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -