கவலைக்கிடமாகும் கழகங்கள், வாரியங்கள் பதவிகளில் ஓய்வு அதிகாரிகள் ஆக்கிரமிப்பு
கவலைக்கிடமாகும் கழகங்கள், வாரியங்கள் பதவிகளில் ஓய்வு அதிகாரிகள் ஆக்கிரமிப்பு
ADDED : மார் 17, 2025 01:21 AM

தமிழகத்தில் கழகங்கள், வாரியங்கள் என, அரசு பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பல பதவிகளை ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஆக்கிரமித்து வருகின்றனர்.
மாநில அளவில் அனைத்து அரசு துறைகளிலும், 4.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்பாததால் ஊழியர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது.
தி.மு.க.,வின், 2021 சட்டசபை தேர்தல் வாக்குறுதியாக, 58வது பக்கத்தில், 'வேலை வாய்ப்பு திறன் பயிற்சி' என்ற தலைப்பில், 'ஆண்டிற்கு, 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும்' என, உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆட்சி பொறுப்பேற்று தற்போது நான்காண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அதுபோன்ற வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
இதற்கிடையே, 37 கழகங் கள், வாரியங்களில் உயர் பதவிகள் முதல் உதவியாளர் வரை, குறிப்பாக கம்பெனி செகரெட்டரி, 'பீல்டு ஆபீசர்ஸ்' ஆய்வாளர், மேலாளர்கள், உதவியாளர்கள் என பல பதவிகளில், 'ஆபீசர் ஆன் ஸ்பெஷல் டியூட்டி' என்ற அடிப்படையில் ஓய்வு பெற்றவர்களே தொடர்கின்றனர்.
ஆயிரக்கணக்கான காலிப்பணியிடங்களும், 'அவுட்சோர்ஸ்' வாயிலாக நிரப்பப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் கூறியதாவது:
தற்போதைய நிலையில், அரசு கழகங்கள், வாரியங்களின் நிலை கவலைக்கிடமாகவே உள்ளன. பணி ஓய்வு பெற்றவர்கள் மீண்டும் அதிக சம்பளத்தில் நியமிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு பதில் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றுபவர்களை நிரந்தரம் செய்யலாம். ஆனால், நிதி ஆதாரம் இல்லை என, அரசு கைவிரிக்கிறது.
முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, 'அவுட்சோர்ஸ் நியமனங்கள், இளைஞர்கள் அறிவு, உழைப்பை குறைந்த கூலிக்கு சுரண்டும் செயல்' என்று, விமர்சித்தார். ஆனால், அவர் முதல்வரான பின், அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த நிலை தான் தொடர்கிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, அரசு நியமனங்கள் குறித்து, 'சம்பளத்திற்கான செலவினத்தை திட்ட செலவினத்துடன் சேர்த்து பார்க்க வேண்டும். ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் மாணவர்களின் முன்னேற்றத்திற்கான செலவாகவும், மருத்துவர்களுக்கு கொடுக்கும் சம்பளம் மக்களின் ஆரோக்கியத்திற்கான முதலீடாக பார்க்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
இவரது அறிவுரையை பின்பற்றி, காலி பணியிடங்களை நிரப்ப முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்
- நமது நிருபர் - .