பிர்கா அளவில் துணை தாசில்தார் நியமனம்; வருவாய்த்துறை பதவி உயர்வு அலுவலர்கள் வலியுறுத்தல்
பிர்கா அளவில் துணை தாசில்தார் நியமனம்; வருவாய்த்துறை பதவி உயர்வு அலுவலர்கள் வலியுறுத்தல்
ADDED : டிச 26, 2024 05:31 AM

மதுரை : ''மக்கள் நலனை மையப்படுத்தி, பிர்கா அளவில் துணை தாசில்தார் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும்'' என தமிழ்நாடு வருவாய்த் துறை பதவி உயர்வு அலுவலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்த அமைப்பின் மாநில தலைவர் ராமச்சந்திரன், பொதுச் செயலாளர் ஜெயகணேஷ் கூறியதாவது: வருவாய்த் துறையில் துறைத் தலைவர் அளவில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுடன் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும். வருவாய் துறையில் உதவியாளராக பதவி உயர்வு பெறும் இளநிலை உதவியாளர், தட்டச்சர்களின் முதுநிலையை நிர்ணயம் செய்வதில் பின்பற்றும் விதியை வி.ஏ.ஓ.,க்களுக்கும் பின்பற்ற வேண்டும்.
மேலும் அவர்களுக்கான பணியிட மாறுதல் அரசியல்வாதிகள், உயரதிகாரிகள், சங்க நிர்வாகிகள், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் போன்றோரின் விருப்பு வெறுப்பு அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதைத் தவிர்க்க பொது கலந்தாய்வு மூலமே மாறுதல் வழங்க வேண்டும்.
மேற்கண்ட ஊழியர்களின் இடமாறுதல், பதவி உயர்வுக்கு மாவட்ட அளவில் சீனியாரிட்டியை கணக்கில் கொள்வதை தவிர்த்து, மாநில அளவிலான மதிப்பெண் அடிப்படையில் கடைபிடிக்க வேண்டும்.
முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வுக்கு இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர்கள் 5 ஆயிரம் பேருக்கு 70 சதவீதம் ஒதுக்கீடு உள்ளது. ஆனால் 12 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.,க்களுக்கு 30 சதவீதமே உள்ளது. இந்த முரண்பாடை களைந்து, வி.ஏ.ஓ.,க்களுக்கே 70 சதவீதம் ஒதுக்க வேண்டும்.
பட்டா மாறுதலின் போது சிறு தவறுகளுக்கு மேல்முறையீடு அலுவலரான ஆர்.டி.ஓ.,க்களே நடவடிக்கை எடுக்கின்றனர். அதேசமயம் மேலும் கூடுதலாக எப்.ஐ.ஆர்., பதிவு செய்து கைது செய்வதை தவிர்க்க வேண்டும். செட்டில்மென்ட், நகர நிலஅளவை, நத்தம் நிலவரி போன்ற பணிகளில் பிழை போன்றவற்றுக்கு நிர்வாக ரீதியில் தாசில்தார்களுக்கே அதிகாரம் வழங்க வேண்டும். மேல்முறையீடு எழுந்தால் ஆர்.டி.ஓ.,க்களிடம் பரிகாரம் தேடலாம் என்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
பட்டா மாறுதல், சான்றளிப்பு விஷயங்களில் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க பிர்கா அளவில் துணை தாசில்தார் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். இவற்றை தென்காசியில் நடந்த மாநில பொதுக்குழுவில் வலியுறுத்தி உள்ளோம். இதற்காக ஜன.,22ல் மாநில அளவில் மாலைநேர ஆர்ப்பாட்டம், ஜன.,29 ல் வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.