ஸ்ரீவில்லிபுத்துார் - ராமேஸ்வரம் 4 வழிச்சாலை; புத்துயிர் பெறுவதால் பயண நேரம் குறையும்
ஸ்ரீவில்லிபுத்துார் - ராமேஸ்வரம் 4 வழிச்சாலை; புத்துயிர் பெறுவதால் பயண நேரம் குறையும்
ADDED : செப் 24, 2024 04:34 AM

ஸ்ரீவில்லிபுத்துார் - ராமேஸ்வரம் இடையேயான பயண நேரத்தை குறைக்கும் வகையில், 12 ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்ட சாலை பணியை, நெடுஞ்சாலைத்துறை மீண்டும் துாசு தட்டியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் செல்வதற்கு, மதுரை வழியாக 260 கி.மீ., பயணிக்க வேண்டும்.
சிவகாசி மற்றும் மதுரையில் நிலவும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, குறைந்தபட்சம், 4.30 மணி நேரம் பயணிக்க வேண்டியுள்ளது.
சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிற்சாலை விபத்துகள் மற்றும் சாலை விபத்துகளில் சிக்குபவர்களை, மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கும் காலதாமதம் ஏற்படுகிறது. தீபாவளி மற்றும் புத்தாண்டு நேரத்தில், சிவகாசிக்கு அதிகளவில் வரும் சரக்கு வாகனங்களால் நெரிசல் மூச்சு முட்டுகிறது.
ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து மதுரை செல்லாமல், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, பார்த்திபனுார் வழியாக, மற்றொரு மாநில நெடுஞ்சாலை உள்ளது.
ஆனால், இந்தச் சாலை 10 மீட்டர் அகலத்தில் இரு வழிச்சாலையாக மட்டுமே உள்ளது. பல இடங்களில், 7 மீட்டர் அகலத்தில் சாலை குறுகியுள்ளது.
இச்சாலை வழியாக செல்லும் போது, பயண நேரம், 30 நிமிடங்கள் வரை குறைந்தாலும், இரவு நேரம் மற்றும், 'பீக் ஹவர்'களில் பயணிப்பது பாதுகாப்பற்றதாக உள்ளது.
இந்த சாலையை, 12 ஆண்டுகளுக்கு முன், நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய, மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்தது.
இதற்காக, நிலம் எடுப்புக்கு அனுமதி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டதோடு சரி; பணிகள் துவக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டன.
முடங்கி கிடந்த இச்சாலை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த, மதுரை யில் நடந்த நெடுஞ் சாலைத்துறை ஆய்வு கூட்டத்தில், அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டார்.
அதன்படி, நான்கு வழிச்சாலையாக, 30 மீட்டர் அகலத்திற்கு இச்சாலை விரிவுப்படுத்தப்பட உள்ளது. அத்துடன், 34 கி.மீ.,க்கு சிவகாசி சுற்றுவட்ட சாலை அமைப்பதற்கு, 10 கி.மீ.,க்கு நிலம் கையகப்படுத்த, அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக, 120 கோடி ரூபாய் ஒதுக்க, நிதித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.
நான்கு வழிச்சாலையுடன், சிவகாசி சுற்றுவட்ட சாலையும் இணைக்கப்பட உள்ளது. பூவநாதபுரம் விளக்கு முதல் வடமலாபுரம் சந்திப்பு வரை, இதற்கான பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளன.
இந்த சாலை பணிக்கு மாநில நெடுஞ்சாலை துறையின் கீழ் இயங்கும் தமிழக சாலை மேம்பாட்டு நிறுவனம் வாயிலாக, திட்ட மதிப்பீடு தயாரிப்பு பணி வேகமாக நடந்து வருகிறது.
- நமது நிருபர் -