புற்றீசல் போல பெருகும் ரவுடிகள்; புது பட்டியல் தயாரிப்பில் போலீஸ் தீவிரம்
புற்றீசல் போல பெருகும் ரவுடிகள்; புது பட்டியல் தயாரிப்பில் போலீஸ் தீவிரம்
ADDED : பிப் 11, 2025 04:15 AM

சென்னை: புற்றீசல்கள் போல ரவுடிகள் பெருகி வருவதால், புதிதாக ரவுடிகள் பட்டியலை, டி.எஸ்.பி.,க்கள் தலைமையிலான போலீசார் தயாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஆட்களை கடத்தி கொலை செய்தல் உள்ளிட்ட கொடூர குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகளை, போலீசார், 'ஏ பிளஸ்' என வகைப்படுத்தி உள்ளனர்.
மற்ற ரவுடிகளின் குற்ற செயல்களுக்கு ஏற்ப, அவர்களை ஏ, பி, சி, என வகைப்படுத்தி உள்ளனர். அதற்கேற்ப கண்காணிப்பு பணியும் நடக்கிறது.
தற்போது, புற்றீசல்கள் போல், இளம் வயது ரவுடி கள் அதிகரித்து வருகின்றனர். இவர்கள் குறித்த விபரம் இல்லாததால், அவர்களை கைது செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க, புதிய ரவுடிகளை அடையாளம் காணவும், அவர்களின் பின்னணியில் இருக்கும், முக்கிய புள்ளிகள் குறித்து துப்பு துலக்கவும், டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் போலீசார், வடக்கு, தெற்கு, மத்திய, மேற்கு மண்டலங்கள் வாரியாக, ரவுடிகள் பட்டியலை மறு வரையைறை செய்து, புதிய பட்டியல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுஉள்ளனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
முந்தைய ரவுடிகளை கண்காணித்த போது, 'ஏ பிளஸ்' மற்றும் ஏ, பி, சி, என நான்கு வகையான ரவுடிகள் பட்டியலில், 27,600 பேர் இருந்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன், ரவுடிகள் பட்டியலை மறு வரையறை செய்த போது, ரவுடிகள் எண்ணிக்கை, 26,500 ஆக குறைந்து இருந்தது.
ஆனால், கடைகளில் புகுந்து சூறையாடுதல், கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தல், அடிதடி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த, ரவுடிகளை மீண்டும் மறு வரையறை செய்து, புதிய பட்டியல் தயாரிப்பு பணி நடக்கிறது.
அதற்கு மண்டல வாரியாக, டி.எஸ்.பி.,க்கள் தலைமையில், ரவுடிகள் கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளன.
இக்குழுவில் உள்ள போலீசார், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடிகள்; ஜாமினில் வெளியே வந்தவர்கள்; என்.பி.டபிள்யு., எனப்படும் நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ரவுடிகள் ஆகியோரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.