தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/பெங்களூரில் அமேசான், இன்ஸ்டாமார்ட் நிறுவனங்களில் ரூ.1.43 கோடி காலாவதி பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் அமேசான், இன்ஸ்டாமார்ட் நிறுவனங்களில் ரூ.1.43 கோடி காலாவதி பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் அமேசான், இன்ஸ்டாமார்ட் நிறுவனங்களில் ரூ.1.43 கோடி காலாவதி பொருட்கள் பறிமுதல்

2


UPDATED : செப் 09, 2026 05:18 AM

ADDED : செப் 09, 2026 03:38 AM

Follow on GoogleFavourite on Google

2

UPDATED : செப் 09, 2026 05:18 AM ADDED : செப் 09, 2026 03:38 AM


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடகாவில், 'அமேசான், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்' உள்ளிட்ட, 'ஆன்லைன்' வர்த்தக நிறுவனங்கள் உட்பட பல இடங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் நடத்திய சோதனையில், 1.43 கோடி ரூபாய் மதிப்பிலான காலாவதியான உணவு மற்றும் மருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆரோக்கியம், உடல் தகுதி மற்றும் நீண்ட ஆயுள் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர்கள் ஒன்று கூடி, 'பெப்டைடு பார்ட்டி' எனப்படும் வேதி சேர்மங்களை ருசித்து பார்க்கும் விருந்துகள், அமெரிக்காவில் பிரபலம். இந்த விருந்துகள், தற்போது கர்நாடக மாநிலம், பெங்களூரிலும் அதிகரித்து வருகின்றன.

பெங்களூரு, கோரமங்களாவில் கடந்த மாதம் தனியார் நிறுவனம் ஒன்று, பெப்டைடு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதற்கு, எப்.எஸ்.டி.ஏ., எனும் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு பிரிவு தடை விதித்தது.

அதிரடி ஆய்வு


இந்த பார்ட்டி தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், தேவனஹள்ளியில் உள்ள, 'அமேசான்' நிறுவன வளாகத்தில், அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு செய்தனர்.

இணையதளம் மூலம் விற்கப்படும் பொருட்களின் லேபிளில், பொருளின் உற்பத்தி, காலாவதி தேதி, சேமிப்பு காலம் மற்றும் பிற உணவு பாதுகாப்பு தரநிலைகள் குறித்து ஆய்வு செய்தனர்.

இதில், தவறான அல்லது முழுமையற்ற லேபிள் கொண்ட, 14 லட்சம் ரூபாய் உணவு பொருட்களும், காலாவதியான 10 லட்சம் ரூபாய் உணவு பொருட்கள் என, மொத்தம் 24 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அத்துடன், தேவையான உரிமம் இல்லாமல் கொள்முதல் செய்யப்பட்டிருந்த, 2.45 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல, ஆனேக்கல்லில் உள்ள அமேசான் மையத்திலும், 32 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

முந்திரி பருப்புகள்


எச்.பி.ஆர்., லே - அவுட்டில் உள்ள சப்தா பஜாரில் மளிகை பொருட்கள், பால், காய்கறிகள், தயிர் உட்பட பல்வேறு உணவு பொருட்கள், 'ஆன்லைன்' தளங்கள் மூலம் வாங்கப்படுவதாக புகார் வந்ததையடுத்து, அங்கும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அங்கு, காலாவதியான முந்திரி பருப்புகள், பிஸ்கட், ராகி மாவு, சிக்கன் கட்லெட், பனீர், குக்கீஸ், முட்டைகள், மாவு உட்பட 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

லிங்கராஜபுரத்தில் உள்ள, 'லியோ 7' என்டர்பிரைசசில், 56 லட்சம் ரூபாய் மதிப்பிலான காலாவதியான, காலாவதியாகும் தருவாயில் இருந்த ஊட்டச்சத்து பொருட்கள், குளிர்பானங்கள், சாக்லேட்கள், இனிப்புகள், நெய் மற்றும் விதைகளை பறிமுதல் செய்தனர்.

இன்ஸ்டாமார்ட்


பெங்களூரு புறநகர் மாவட்டம், ஹொஸ்கோட்டில், 'ஸ்விக்கி' நிறுவனத்தின், 'இன்ஸ்டாமார்ட்' கிடங்கு உள்ளது. இங்கும் 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அத்துடன் 1 கோடி ரூபாய் மதிப்பிலான காலாவதியான மற்றும் தவறாக லேபிள் ஒட்டப்பட்ட உணவு பொருட்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

ஒட்டுமொத்த நடவடிக்கையில், 1.43 கோடி ரூபாய் மதிப்பிலான உணவு மற்றும் மருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இது குறித்து, கர்நாடக காங்., அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் காதர் நேற்று அளித்த பேட்டி: காலாவதியான மருந்துகளுக்கு மீண்டும் புதிதாக லேபிள் ஒட்டி, விற்பனை செய்வதாக அதிகாரிகளின் கவனத்துக்கு வந்துள்ளது. காலாவதியான பொருட்களை சட்ட விரோதமாக சேமித்து வைத்திருந்த குடோன்களுக்கு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.

சமூக அக்கறையின்றி பொது சுகாதாரத்துடன் விளையாடும் இத்தகைய நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us