பிரதமர் மோடியை கொல்ல நடந்த சதி?; 'பகீர்' கிளப்பிய ஆர்.எஸ்.எஸ்., வார இதழ்
பிரதமர் மோடியை கொல்ல நடந்த சதி?; 'பகீர்' கிளப்பிய ஆர்.எஸ்.எஸ்., வார இதழ்
ADDED : அக் 28, 2025 04:38 AM

சென்னை: பிரதமர் மோடியை கொலை செய்ய நடந்த முயற்சியை, ரஷ்யாவுடன் சேர்ந்து இந்தியா தடுத்து நிறுத்தியதாக, ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் அதிகாரப்பூர்வ ஆங்கில வார இதழான, 'ஆர்கனைசர்' செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக, இரண்டாவது முறையாக டிரம்ப் பதவியேற்ற சில மாதங்களிலேயே, இந்திய -- அமெரிக்க உறவில் சிக்கல் ஏற்பட்டது.
தான் சொல்லிதான் பாகிஸ்தான் மீதான ராணுவ தாக்குதலை, இந்தியா நிறுத்தியதாக, டிரம்ப் திரும்ப திரும்ப கூறி வருகிறார்.
அது மட்டுமல்லாது, இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு, 50 சதவீத வரி விதித்துள்ளார். 'ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும், அமெரிக்காவில் இருந்து வேளாண் உற்பத்தி பொருட்களை வாங்க வேண்டும்' என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை, பிரதமர் மோடி ஏற்கவில்லை.
இப்படி அமெரிக்க -- இந்திய உறவு சிக்கலாகி வரும் நிலையில், ஏழு ஆண்டுகளுக்குப் பின், எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி ஆகஸ்ட் 30ம் தேதி சீனா சென்றார்.
சீனா அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். எஸ்.சி.ஓ., மாநாட்டிற்கு வந்த ரஷ்ய அதிபர் புடினுடன், காருக்குள் அமர்ந்து, 45 நிமிடங்கள் தனியாக ஆலோசனை நடத்தினர். இது, உலகை உற்றுநோக்க வைத்தது.
சீனா பயணத்தை முடித்து, செப்டம்பர் 1ம் தேதி மாலை இந்தியா திரும்பிய மோடி, மறுநாள் 2ம் தேதி டில்லியில் நடந்த, 'செமிகான்' உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்.
ரகசியங்கள் அப்போது மோடி தன் பேச்சை துவங்கியதும், பார்வையாளர்கள் கைகளை தட்டி ஆர்ப்பரித்தனர். அதை குறிப்பிட்டு பேசிய மோடி, 'நான் சீனா சென்றதற்காக கை தட்டுகிறீர்களா அல்லது சீனாவில் இருந்து திரும்பி வந்ததற்காக கை தட்டுகிறீர்களா' என, கேட்டார்.
பிரதமர் மோடி பேச்சின் பின்னே பல்வேறு ரகசியங்கள் இருப்பதாக கூறப்பட்டது. எதற்காக மோடி இப்படி குறிப்பிட்டார்.
சீனாவில் அவருக்கு ஏதேனும் ஆபத்து இருந்ததா என்ற கேள்விகளை பலரும் எழுப்பினர்.
ஆகஸ்ட் 31ல், வங்கதேச தலைநகர் டாக்காவில், அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவரது உடலை, அவசர அவசரமாக அமெரிக்க துாதரக அதிகாரிகள் கைப்பற்றினர்.
இந்த சம்பவத்தையும், செப்டம்பர் 2ம் தேதி, டில்லி செமிகான் மாநாட்டில், பிரதமர் மோடியின் பேச்சையும் ஒப்பிட்டுள்ள ஆர்.எஸ்.எஸ்., ஆங்கில வார இதழான ஆர்கனைசர், 'பிரதமர் மோடியை கொல்ல, அமெரிக்க சி.ஐ.ஏ., திட்டமிட்டிருக்கலாம்' என சந்தேகம் எழுப்பியுள்ளது.
டாக்காவில், அமெரிக்க ராணுவ அதிகாரி மர்மமான முறையில் மரணம் அடைந்த பின்தான், பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புடினும் சீனாவில் ரகசியமாக, 45 நிமிடங்கள் பேசினர். 'மோடியை கொல்ல நடந்த முயற்சியை, ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா முறியடித்திருக்கலாம்' என, அந்த இதழ் கூறியுள்ளது.
சந்தேகம் ஆர்.எஸ்.எஸ்.,சின் அதிகாரப்பூர்வ இதழ் என்பதால், பிரதமர் அலுவலக அதிகாரிகள், அரசின் அதிகாரிகளுடன் கலந்து பேசாமல், இந்த செய்தியை வெளியிட்டிருக்க வாய்ப்பில்லை.
கடந்த 2022 ஜூலையில், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சே அபே, தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது சுட்டு கொல்லப்பட்டார். அதுபோல, பிரதமர் மோடியை கொல்ல சதி நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தையும், சமூக வலைதளங்களில் பலர் எழுப்பி வருகின்றனர்

