ADDED : ஜன 05, 2024 05:30 AM

சபரிமலை: கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த, 10 வயது சிறுமி, 50 முறை சபரிமலை சென்று அய்யப்பனை வணங்கி புண்ணியம் தேடி உள்ளார்.
கொல்லம் ஏழுகோனை சேர்ந்தவர் அபிலாஷ் மணி. தீவிர அய்யப்ப பக்தர். இவரது மகள் அத்ரிதி, 10. இவர், 9 மாத குழந்தையாக இருந்த போது அபிலாஷ் தனது கையில் தாங்கி சபரிமலை வந்து அய்யப்பனை தரிசனம் செய்தார்.
அது முதல் நேரமும், வாய்ப்பும் கிடைக்கும் போதெல்லாம் மகளை அழைத்து சபரிமலை வந்து தரிசனம் செய்தார்.
மண்டல, மகர பூஜை காலம் மட்டுமல்லாமல் மாத பூஜை, சித்திரை விசு போன்ற எல்லா பூஜை காலங்களிலும் மாலையணிந்து மகளை தவறாமல் அழைத்து வந்தார். அத்ரிதியும் மகிழ்ச்சியுடன் சபரிமலை பயணம் மேற்கொண்டார் . எருமேலியில் பேட்டை துள்ளல் இவருக்கு குதுாகலத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், அத்ரிதிக்கு 10 வயது முடிய ஒரு நாள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், நேற்று முன்தினம் சபரிமலை வந்து அய்யப்பனை வணங்கினார்.
இது அவரது, 50வது சபரிமலை பயணமாகும். சன்னிதானத்தின் முன்புறம் நின்று போட்டோ எடுத்துக் கொண்ட அவர், அய்யப்பனை 50 முறை பார்த்து வணங்கியது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்று குறிப்பிட்டார்.
இனி, 50 வயதுக்கு பின்னர் இங்கு மீண்டும் வருவேன் என, தெரிவித்தார். இவர் அங்குள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறார்.
பொதுவாக, சபரிமலைக்கு 18 முறை வருபவர்கள் குரு சுவாமி என்று அழைக்கப்படுகின்றனர். 18 முறை சபரிமலை வந்ததின் அடையாளமாக அந்த பக்தர் சன்னிதானத்தில் பின்புறம் உள்ள பஸ்மகுளம் அருகே தென்னங்கன்றுகளை நடவு செய்வர் என்பது குறிப்பிடத்தக்கது.