ஆம் ஆத்மிக்கு சமாஜ்வாதி ஆதரவு : காங்கிரசை கழற்றிவிட திட்டம்
ஆம் ஆத்மிக்கு சமாஜ்வாதி ஆதரவு : காங்கிரசை கழற்றிவிட திட்டம்
ADDED : டிச 22, 2024 01:29 AM

'இண்டி' கூட்டணியில், கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள மோதல் தீவிரமாகி வருகிறது. டில்லி சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக, சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளார்; இது கூட்டணிக்குள் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாண்டு லோக்சபா தேர்தலின்போது, தேசிய அளவில், பா.ஜ.,வுக்கு எதிரான நிலைப்பாடு உள்ள பல கட்சிகள் இணைந்து, இண்டி கூட்டணியை உருவாக்கின.
முந்தைய லோக்சபா தேர்தலைவிட இந்தாண்டு நடந்த தேர்தலில், காங்கிரசின் வெற்றி எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது.
அந்த கட்சியின் முன்னாள் தலைவர் ராகுலுக்கு, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து கிடைத்தது.
இதையடுத்து பார்லிமென்டிலும், அரசியல் களத்திலும், காங்கிரஸ் கட்சி தன்னை முன்னிலைப்படுத்த முயன்றது.
பெரும் தோல்வி
இது, கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா சட்டசபைகளுக்கு சமீபத்தில் நடந்த தேர்தல்களில் காங்கிரசும், அதனுடன் கூட்டணி அமைத்த இண்டி கூட்டணி கட்சிகளும் பெரும் தோல்வியைத் தழுவின. இதன்பின், கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியாக காங்கிரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
இந்த பட்டியலில், உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவ் தற்போது இணைந்துள்ளார்.
டில்லி சட்டசபைக்கு அடுத்தாண்டு பிப்ரவரியில் தேர்தல் நடக்க உள்ளது. காங்கிரசுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடப் போவதாக, ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இதையடுத்து, ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.,வுக்கு இடையே டில்லியில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
காங்கிரசும் தனித்து போட்டியிடப் போவதாக கூறியுள்ளது. இந்நிலையில், இண்டி கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜ்வாதி, டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இது காங்.,குக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
அகிலேஷ் யாதவின் இந்த முடிவுக்கான காரணம் குறித்து சமாஜ்வாதி மூத்த தலைவர்கள் கூறியுள்ளதாவது:
லோக்சபா தேர்தலுக்குப் பின், காங்கிரசின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாகவே உள்ளன.
கூட்டணி கட்சிகளின் ஆதரவு கிடைத்ததால்தான், அதிக இடங்களில் அந்த கட்சி வெற்றி பெற முடிந்தது. ஆனால், தனிப்பட்ட செல்வாக்கில் வென்றதுபோல், பெரியண்ணன் போன்று செயல்படத் துவங்கியது.
சட்டசபை தேர்தல்
மத்திய பிரதேச சட்டசபைக்கு கடந்தாண்டு தேர்தல் நடந்தது. அப்போது, சமாஜ்வாதிக்கு உரிய தொகுதிகளை காங்கிரஸ் ஒதுக்கவில்லை.
ஹரியானா சட்டசபைக்கு இந்தாண்டு நடந்த தேர்தலின்போது, ஆம் ஆத்மி மற்றும் சமாஜ்வாதியை ஒரு பொருட்டாக காங்கிரஸ் பார்க்கவில்லை.
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலிலும், ஏற்கனவே வென்ற இரண்டு தொகுதிகளை மட்டும் கொடுத்தனர்.
அதனால் நாங்கள், மஹா விகாஸ் அகாடிகூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து, ஏழு தொகுதிகளில் போட்டியிட வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிவிட்டனர். இதுபோன்ற காரணங்களால் தான், டில்லியில் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் -