சனாதன விவகாரம்: உதயநிதி மீது இனி எந்த வழக்கும் தொடரக்கூடாது: உச்சநீதிமன்றம் தடை
சனாதன விவகாரம்: உதயநிதி மீது இனி எந்த வழக்கும் தொடரக்கூடாது: உச்சநீதிமன்றம் தடை
ADDED : மார் 07, 2025 04:32 AM

சனாதனம் தொடர்பாக உதயநிதி மீது, இனி எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யக்கூடாது என, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
2023ல் சனாதன தர்மம் தொடர்பாக, துணை முதல்வர் உதயநிதி பேசியதற்கு எதிராக, மஹாராஷ்டிரா, பீஹார், கர்நாடகா, டில்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக விசாரிக்க வேண்டும் எனக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் உதயநிதி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்கனவே விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணைகளுக்கு நேரில் ஆஜராவதில் இருந்து உதயநிதிக்கு விலக்கு அளித்தது.
இந்நிலையில், உதயநிதியின் மனு, உச்சநீதிமன்றத்தில் நேற்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, உதயநிதி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன் ஆகியோர், 'ஒரே விவகாரம் தொடர்பாகவே பல இடங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. எனவே, அனைத்தையும் ஒன்றாக்கி விசாரிக்க வேண்டும். இல்லையெனில், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்; அவ்வாறு செய்ய இயலாது என்றால், கர்நாடகாவிற்கு மாற்ற வேண்டும். இதற்கு முன், நுபுர் சர்மா, அர்னால் கோஸ்வாமி போன்றோரின் வழக்குகள் மாற்றப்பட்டதை கவனத்தில் கொள்ள வேண்டும்' என, வாதிட்டனர்.
உடன் குறுக்கிட்ட மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ''சனாதன தர்மத்தை கொரோனா போல ஒழிக்க வேண்டும் என, துணை முதல்வராக உள்ள உதயநிதி பேசியுள்ளார். வேறு ஏதாவது ஒரு மாநிலத்தின் முதல்வர், குறிப்பிட்ட மதமும் இதுபோல அழிக்கப்பட வேண்டும் என்று பேசியிருந்தால் என்ன நடந்திருக்கும்,'' என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில், நாங்கள் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை; அப்படி தெரிவித்தால், அது விசாரணை நீதிமன்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்' என்றனர். அத்துடன், வழக்கின் விசாரணையை ஏப்ரல், 28க்கு ஒத்திவைத்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் இப்போது, நாங்கள் கூடுதலாக எதுவும் சொல்லப்போவதில்லை. மேலும் தகுதியின் அடிப்படையிலும், தற்போது விசாரணை செய்யவில்லை. உதயநிதியின் மனுவுக்கு எதிர்மனுதாரர்கள் அனைவரும், அடுத்த ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும். அதற்கு அடுத்த, 15 நாட்களில் வழக்கில் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். சனாதன விவகாரம் தொடர்பாக, உதயநிதிக்கு எதிராக, இனிமேல் எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யக்கூடாது. அடுத்த விசாரணை நடைபெறும் வரை, இந்த விவகாரத்தில் முன்னர் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-டில்லி சிறப்பு நிருபர்-