ADDED : பிப் 27, 2026 04:45 AM

தி.மு.க.,வில் சேர சசிகலா எதிர்ப்பு தெரிவித்ததாலும், தன் கட்சியில் இணைய அழைப்பு விடுத்துள்ளதாலும், முடிவெடுக்க முடியாத நிலையில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் இருக்கிறார்.
சென்னை அறிவாலயத்தில் நேற்று மதியம் 1:00 மணிக்கு, பன்னீர்செல்வம் தி.மு.க.,வில் சேருகிறார் என்ற தகவல் பரவியது. பன்னீர்செல்வம் இணையும்போது, தேனி மாவட்டச் செயலர் தங்கதமிழ்செல்வனும் இருக்க வேண்டும் என்பதால், அவரும் சென்னைக்கு அழைக்கப்பட்டார்.
ஆனால், பன்னீர்செல்வம் அறிவாலயம் வரவில்லை. அவரை வரவேற்க காத்திருந்த தி.மு.க., நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்தனர். தி.மு.க.,வில் பன்னீர்செல்வம் இணையப் போகிற தகவல் சசிகலாவுக்கு தெரியவந்ததும், அவர் முட்டுக்கட்டை போட்டு தடுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, சசிகலா ஆதரவாளர்கள் கூறியதாவது: சட்டசபை தேர்தலில் பன்னீர்செல்வத்துடன் இணைந்து, தனி அணியாக போட்டியிட்டு எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்த வேண்டும் என சசிகலா கூறி வருகிறார். இந்நிலையில், தி.மு.க.,வில் பன்னீர்செல்வம் இணைவது குறித்த தகவல் தெரியவந்ததும், அவர் அதிருப்தி அடைந்தார்.
தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் ஓட்டுகள், பன்னீர்செல்வம் வாயிலாக தி.மு.க.,வுக்கு சென்று விட்டால், தன் புதிய கட்சிக்கு ஆதரவு கிடைக்காது. முக்குலத்தோர் சமுதாய ஓட்டுக்களை ஒருங்கிணைக்க முடியாது என சசிகலா கருதுகிறார். எனவே, தி.மு.க.,வில் பன்னீர்செல்வம் இணைவதை தடுத்து விட்டார்.
இதனால், சசிகலா கட்சியில் இணைவதா அல்லது தி.மு.க.,வில் இணைவதா என்ற முடிவு எடுக்க முடியாமல், மதில் மேல் பூனையாக பன்னீர்செல்வம் உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

