நீலகிரி தொகுதியில் வாரிசுகளுக்கு 'சீட்'? அ.தி.மு.க., - பா.ஜ., சார்பில் களமிறக்க 'மாஜி' சபாநாயகர்கள் மும்முரம்
நீலகிரி தொகுதியில் வாரிசுகளுக்கு 'சீட்'? அ.தி.மு.க., - பா.ஜ., சார்பில் களமிறக்க 'மாஜி' சபாநாயகர்கள் மும்முரம்
ADDED : மார் 14, 2024 12:17 AM

திருப்பூர் : நீலகிரி லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., - பா.ஜ., கட்சிகளில் வேட்பாளர்களாக களமிறங்க, சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பொறுப்பு வகித்தவர்கள், தங்கள் மகன்களுக்கு சிபாரிசு செய்து வருகின்றனர்.
ஊட்டி, குன்னுார், கூடலுார், மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் என, ஆறு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய நீலகிரி லோக்சபா தொகுதியில், பா.ஜ., சார்பில் மத்திய அமைச்சர் முருகன் களமிறக்கப்படுவார் என, கடந்த, 3 ஆண்டாகவே பேச்சு இருந்து வந்தது. அதற்கேற்ப, கட்சியினரும் முருகனை முன்னிறுத்தியே கட்சியை வளர்த்தனர்.
இதனை உறுதிப்படுத்துவது போன்று அமைச்சர் முருகன், தொடர்ந்து நீலகிரி லோக்சபா தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து, மக்களை சந்தித்தார்.அவர் ராஜ்ய சபா எம்.பி.,யாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, 'நீலகிரி தொகுதியில் பா.ஜ., சார்பில் களமிறங்கப் போகும் வேட்பாளர் யார்?' என்ற கேள்வி எழுந்தது.
'முருகன் தான் களமிறங்குவார்' என, கட்சியினர் பலர் கூறி வந்தாலும், தி.மு.க.,வில் இருந்து, பா.ஜ.,வில் இணைந்த, முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, தன் மகன் அருணுக்கு, நீலகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிட 'சீட்' கேட்டு வருகிறார் எனக் கூறப்படுகிறது.
சரியான போட்டி
ராசிபுரம் தொகுதியை சேர்ந்த வி.பி.துரைசாமி, தனது அரசியல் வாழ்க்கையை அ.தி.மு.க.,வில் இருந்து துவக்கினார். 1977ல், ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின், தி.மு.க.,வில் இணைந்த அவர், 2006ல் சங்ககிரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்; தி.மு.க., அமைச்சரவையில், துணை சபாநாயகராகவும் இருந்தார். கட்சி துணை பொது செயலர் பொறுப்பையும் பெற்றிருந்தார்.
கடந்த, 2020ல், கட்சிப்பதவி பறிக்கப்பட்ட நிலையில், அந்தாண்டு மே மாதம் , தி.மு.க.,வில் இருந்து விலகிய அவர்,தனது மகனுடன் சென்று அப்போது பா.ஜ., மாநில தலைவராக இருந்த முருகன் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார்.
இதுஒரு புறமிருக்க, அவிநாசி சிட்டிங் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வும், ராசிபுரம் தொகுதியை சொந்த ஊராக கொண்டவருமான முன்னாள் சபாநாயகர் தனபால், நீலகிரி தொகுதியில் போட்டியிட தன் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு பரிந்துரை செய்திருக்கிறார்.
லோகேஷூம், கட்சித் தலைமையில் 'சீட்' கேட்டு, விருப்ப மனு கொடுத்துள்ளார். கடந்த, 2011ல் ராசிபுரம் தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட வி.பி.துரைசாமியை, அ.தி.மு.க., வேட்பாளர் தனபால் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் சபாநாயகர், துணை சபாநாயகர்களின் வாரிசுகளுக்கான போட்டி களமாக நீலகிரி தொகுதி அமையுமா என, கட்சியினர் காத்திருக்கின்றனர்.

