தானாக சீர் செய்து கொள்ளும் சாலைகள் புதிய முயற்சி!: தேசிய நெடுஞ்சாலைத்துறை சோதனை
தானாக சீர் செய்து கொள்ளும் சாலைகள் புதிய முயற்சி!: தேசிய நெடுஞ்சாலைத்துறை சோதனை
ADDED : மே 04, 2024 11:33 PM

புதுடில்லி: பல்வேறு காரணங்களால் சாலையில் பள்ளம் ஏற்பட்டால், அதை தானாகவே சரி செய்து கொள்ளும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆய்வு செய்து வருகிறது. இதன் வாயிலாக, தேசிய நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு மிகவும் சுலபமாகிவிடும்.
நாடு முழுதும் தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளை, என்.எச்.ஏ.ஐ., எனப்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கவனித்து வருகிறது.
இந்தத் துறைக்கு உள்ள மிக முக்கியமான பிரச்னை, நெடுஞ்சாலைகளை பராமரிப்பது.
போக்குவரத்து பாதிப்பு
நெடுஞ்சாலைகள் பல காரணங்களால் சேதமடைகின்றன. இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், விபத்துகளும் நடக்கின்றன. ஒரு சில இடங்களில் லேசாக சரளைக் கற்கள் விலகினால், அடுத்த சில நாட்களில் அது பள்ளமாக மாறிவிடும்.
இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக, தானாகவே சீர் செய்து கொள்ளும் வகையில் சாலையை அமைப்பது தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது.
இதற்காக, புதிய வகை, 'ஆஸ்பால்ட்' எனப்படும் தார்ச்சாலை பொருள் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில், இரும்பு பைபர்கள் மற்றும் 'பிட்டுமென்' எனப்படும் தார் கலந்த சரளைக் கற்கள் கலவை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சாலையில் ஏதாவது சேதம் ஏற்பட்டால், இந்த புதிய தொழில்நுட்பத்தின் வாயிலாக, அதற்குள்ள இலகுதன்மையால், தானாகவே, சேதத்தை அது சரி செய்து கொள்ளும்.
ஆனால், இந்த ஆஸ்பால்ட் எவ்வளவு நாளைக்கு தாக்குபிடிக்கும், எந்தளவுக்கு உள்ள சேதங்களை தானாகவே சரி செய்து கொள்ளும் உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வுகள் நடந்து வருகின்றன. மேலும், இதற்கு ஆகும் செலவுகள் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது.
நிரந்தர தீர்வு
இது குறித்து என்.எச்.ஏ.ஐ., அதிகாரிகள் கூறியுள்ளதாவது:
சாலைகளின் தரத்தை உயர்த்துவதுடன், சாலைகளில் ஏற்படும் சேதங்களுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
ஆஸ்பால்ட் என்பது, எளிதில் சேதமடையாத, சாலை அமைக்க பயன்படுத்தும் பொருளாகும். நெடுஞ்சாலைகள் மற்றும் பாதசாரிகள் நடக்கும் இடங்கள், விமான நிலையங்களில் இது பயன்படுத்தப்படுகிறது.
இதன் ஸ்திரத்தன்மை, வழக்கமான தார்ச்சாலைகளைவிட மிகவும் அதிக மாகும். அதுபோலவே, தார்ச்சாலைகளை விட அதிக செலவு பிடிக்கும்.
சுற்றுச்சூழலுக்கும் உகந்தது என்பதால், இதைப் பயன்படுத்தி, தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பது தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது.
தற்போது சரளைக் கற்கள் மற்றும் தார் ஆகியவை இணைந்த கலவை, சாலைகள் அமைக்க பயன்படுத்தப்படுகிறது. இவற்றுடன் இணைப்பு மற்றும் நெகிழ்வுதன்மை ஏற்படுத்துவதுதான், புதிய தொழில்நுட்பமாகும்.
விரைவில் இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.