இபிஎஸ்.,க்கு செங்கோட்டையன் 10 நாள் கெடு: பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும்
இபிஎஸ்.,க்கு செங்கோட்டையன் 10 நாள் கெடு: பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும்
ADDED : செப் 06, 2025 02:43 AM

“அ.தி.மு.க.,வில் இருந்து வெளியே சென்றவர்களை இணைக்க, பொதுச்செயலர் பழனிசாமி 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், என் போன்ற மனநிலையில் இருப்பவர்களுடன் சேர்ந்து, ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வேன்,” என, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
கோபிச்செட்டிப்பாளையத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கடந்த, 1972ல் அ.தி.மு.க., துவங்கப்பட்ட போதே, என் கிராமத்தில் கட்சியை துவக்கினேன். 1975ல் கோவையில் அ.தி.மு.க., பொதுக்குழுவை நடத்துவதற்கான ஏற்பாடு குழுவின் தலைவராக அரங்கநாயகம், செயலராக திருப்பூர் மணிமாறன், பொருளாளராக என்னையும் எம்.ஜி,ஆர்., நியமித்தார். பொதுக்குழுவை சிறப்பாக நடத்தியதற்காக, சத்யா ஸ்டூடியோவுக்கு அழைத்து, எம்.ஜி.ஆர்., பாராட்டினார்.
பின், 1977ல் சத்தியமங்கலத்தில் போட்டியிடுமாறு, எம்.ஜி.ஆர்., சொன்னார். 'அது புதிய தொகுதி' என நான் கூறியதும், 'என் பெயரைச் சொல்; வெற்றி கிடைக்கும்' என்றார்; அதுபோல வெற்றியும் கிடைத்தது. அப்படி மக்கள் செல்வாக்குமிக்க தலைவரான எம்.ஜி.ஆரே... கட்சியில் இருந்து எஸ்.டி.சோமசுந்தரம், கோவை செழியன் போன்றோர் வெளியேறியபோது, அவர்கள் வீடுகளுக்கேச் சென்று அழைத்தார்.
என் நீண்டகால அரசியல் பயணத்தில், பல்வேறு பொறுப்புகளும், பல சோதனைகளும் வந்தன. கட்சிக்காக சோதனைகளை எதிர்கொண்டு அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருக்கிறேன். 'அ.தி.மு.க.,வுக்கு சோதனைகள் வந்தபோது, தடுமாற்றம் இல்லாமல் செயல்பட்டவர்' என, ஜெயலலிதா என்னை பாராட்டியிருக்கிறார்.
ஜெயலலிதா மறைந்ததும், பல்வேறு சோதனைகளை அ.தி.மு.க., சந்தித்தது. கட்சி முடங்கிவிடக் கூடாது என்பதற்காக, சசிகலாவை பொதுச்செயலர் ஆக்கினோம். அடுத்த முதல்வர் யார் என்ற நிலை வந்தபோது, பழனிசாமியை சசிகலா முன்மொழிந்தார். கட்சி நலனுக்காக, எந்த தியாகத்திற்கும் தயாராக இருந்தேன். இரண்டு வாய்ப்புகள் எனக்கு கிடைத்தன. கட்சி உடைந்துவிடக் கூடாது என்பதற்காக, என் பணிகளை மேற்கொண்டேன். அ.தி.மு.க.,வை நம்பி கோடிக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர். கட்சி துண்டு துண்டாகி விடக்கூடாது; மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறேன்.
'அ.தி.மு.க.,வில், மூத்த தலைவர்களை ஜெயலலிதா மதிப்பதில்லை' என, சட்டசபையில் தி.மு.க., குற்றஞ்சாட்டியது. அதற்கு பதிலளித்த ஜெயலலிதா, 'இப்போது சட்டசபையில் என் அருகில் அமர்ந்திருப்பவர்கள், என்னை கடுமையாக விமர்சனம் செய்தவர்கள். ஆனாலும், அனைவரையும் அரவணைத்து பாசத்தோடு, பண்போடு செயல்படுகிறேன். அரசியல் அனுபவம் உள்ளவர்களைக் கொண்டுதான் ஆட்சி நடத்துகிறேன்' என்றார்.
கடந்த, 2016க்குப் பின் தொடர்ந்து தேர்தலை சந்திக்கிறோம். 2019, 2024 லோக்சபா, 2021 சட்டசபை, உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றி கிடைக்கவில்லை. 2024ல் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்திருந்தால், 30 இடங்களில் வெற்றி பெற்றிருக்க முடியும். இதை, அ.தி.மு.க., பொதுச்செயலரிடம் கூறினோம்; அவர் ஏற்கவில்லை. தேர்தல் முடிவுகளுக்குப் பின், முன்னாள் அமைச்சர் வேலுமணியும், இதே கருத்தை வெளிப்படுத்தினார்.
கடந்த லேக்சபா தேர்தல் முடிந்ததும், நான், நத்தம் விஸ்வநாதன், வேலுமணி, தங்கமணி, அன்பழகன், சி.வி.சண்முகம் ஆகிய ஆறு பேரும் பழனிசாமியை சந்தித்தோம். அப்போது, 'தேர்தல் களத்தில் என்ன வியூகம் வகுத்தாலும் வெற்றி கிடைக்கவில்லை. எனவே, பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும்' என வலியுறுத்தினோம். இந்த கருத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் பழனிசாமி இல்லை.
அதன்பின், என்னை அழைத்து அவர் பேசவில்லை. 'மறப்போம்; மன்னிப்போம்' என்ற அடிப்படையில், வெளியே சென்றவர்களை அரவணைத்தால் மட்டுமே தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியும். நம் தலைவர்கள் கற்றுத்தந்த பாடம் இது. 2009-, 2010ல் நடந்த இடைத்தேர்தல்களில், அ.தி.மு.க., 'டிபாசிட்' இழந்தது. அப்போது கோவை, திருச்சி, மதுரையில் ஜெயலலிதா பங்கேற்ற ஒவ்வொரு கூட்டத்திலும், 15 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
அப்படிப்பட்ட சூழலிலும், தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க.., போன்ற கட்சிகளுடன் ராஜதந்திரத்தோடு கூட்டணி அமைத்தார்; அதனால்தான் வெற்றி கிடைத்தது. 2016 சட்டசபை தேர்தலிலும், இதே ராஜதந்திரத்தைதான் ஜெயலலிதா கையாண்டார்.
கட்சியிலிருந்து வெளியே சென்றவர்கள், 'எந்த நிபந்தனையும் வைக்கவில்லை; எந்த தியாகத்திற்கும் தயாராக இருக்கிறோம். எங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்' என, வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதேநேரம், ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர். இந்தச் சூழலில், வெளியே சென்றவர்களை இணைத்தால் மட்டுமே வெற்றி என்ற இலக்கை அடைய முடியும்.
எனவே, வெளியே சென்றவர்களை கட்சிக்குள் கொண்டு வரும் முயற்சிகளை, 10 நாட்களில் பொதுச்செயலர் மேற்கொள்ள வேண்டும் என்பதே, என் வேண்டுகோள். இல்லையெனில், இந்த மனநிலையில் இருக்கும் அனைவரும் ஒன்றிணைந்து, ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வோம். இதற்கு முடிவு தெரிந்தால்தான், பொதுச்செயலரின் பிரசார பயணத்தில் கலந்து கொள்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தன் நீண்ட பேட்டியில், பழனிசாமியின் பெயரை செங்கோட்டையன் பல இடங்களில் குறிப்பிட வேண்டி இருந்தது. ஆனால், கவனமாக அதை தவிர்த்தார். பழனிசாமி பெயருக்கு பதிலாக, கட்சியின் பொதுச்செயலர் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் என்றும் குறிப்பிட்டார்.
- -நமது நிருபர் -