செந்தில் பாலாஜியின் பதற்றம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: அ.தி.மு.க., குற்றச்சாட்டு
செந்தில் பாலாஜியின் பதற்றம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: அ.தி.மு.க., குற்றச்சாட்டு
ADDED : அக் 02, 2025 01:33 AM

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதற்றம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அ.தி.மு.க., குற்றம்சாட்டியுள்ளது.
அ.தி.மு.க., தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்திருக்கிறோம் என்று தி.மு.க., அரசு அறிவித்தது. அதன் பிறகு மின்வாரிய அதிகாரி, கலெக்டர், கூடுதல் டி.ஜி.பி., ஆகியோர் செய்தியாளர் சந்திப்பு நடத்துகின்றனர். டி.ஜி.பி., பேட்டி கொடுக்கிறார். முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியிடுகிறார்.
வருவாய், மக்கள் நல்வாழ்வு துறைகளின் செயலர்கள், டி.ஜி.பி., கூடுதல் டி.ஜி.பி., ஆகியோர் கூட்டாக பேட்டியளிக்கின்றனர். இப்போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
இவ்வளவு பதற்றப்பட்டு, அவர் என்ன சொல்ல வருகிறார்? அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சொன்னதுபோல், விசாரணை ஆணையத்தை அரசுக்கு வேண்டிய திசையில் வழிநடத்திக் கொண்டிருக்கிறீர்களா?
செந்தில் பாலாஜியின் இந்த பதற்றம் தான் உண்மையிலேயே கரூரில் என்ன நடந்தது என்ற கேள்வியை, சந்தேகத்தை வலுக்கச் செய்கிறது. ஒரு விசாரணை ஆணையம் அமைத்த பிறகு, அது தொடர்பான வாதங்களையோ, வீடியோக்களையோ அரசு அதிகாரிகள், அரசைச் சார்ந்தோர் பொதுவெளியில் வெளியிட்டு, ஆணையத்தின் நிர்ணயங்களை அவமதித்துள்ளீர்கள். இது நீதிமன்ற அவமதிப்புக்கு சமம்.
அ.தி.மு.க., ஆட்சியில் டாஸ்மாக் கடைகளில் எந்த புகார் வந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. எங்கோ ஒரு இடத்தில் நடந்த, சட்டவிரோத விற்பனை முதல் சந்து விற்பனை வரை அனைத்து புகார்களுக்கும், புகார் எழுந்த உடன், 8000-க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிந்துள்ளோம். ஆனால், தி.மு.க., ஆட்சியில் டாஸ்மாக் மது கடைகளில் நிறுவனமயமாக்கப்பட்ட கொள்ளை நடக்கிறது. அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் பாட்டிலுக்கு மேல், 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை கணக்கே இல்லாமல் கொள்ளை அடித்து, இப்போது பாட்டில் மேல் 10 ரூபாய் ஸ்டிக்கர் ஒட்டி வசூல் செய்யும் அளவிற்கு பகல் கொள்ளை அடிக்கின்றனர்.
'பத்து ரூபாய்' என்று பழனிசாமி சொன்னாலே, 'பாலாஜி' என்று மக்களே சொல்லும் அளவிற்கு, அவரது பத்து ரூபாய் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றினார் பழனிசாமி.
அப்போது எல்லாம் கள்ள மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, இப்போது 41 உயிர்கள் பலியானதும் இதைப் பேசுகிறார் என்றால், உங்கள் அரசின் அலட்சியத்தை மறைக்க முனையும் மடைமாற்ற அரசியல் தானே இது?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.