எப்ப சார் புகார் தருவீங்க... ராகுலை வறுத்தெடுத்த பா.ஜ.,
எப்ப சார் புகார் தருவீங்க... ராகுலை வறுத்தெடுத்த பா.ஜ.,
ADDED : அக் 01, 2025 11:44 PM

புதுடில்லி: 'பீஹார் வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் மோசடி நடந்திருப்பது உண்மை எனில், ஏன் இதுவரை அதிகாரபூர்வமாக புகார் அளிக்கவில்லை? ' என, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு, பா.ஜ., கேள்வி எழுப்பியுள்ளது.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. வரும் நவம்பருக்குள் இம்மாநில சட்டசபைக்கு தேர்தல் நடக்கவுள்ளது.
குற்றச்சாட்டு
இதையொட்டி கடந்த மூன்று மாதங்களாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது.
வரைவு வாக்காளர் பட்டியலை ஆக., 1ம் தேதி வெளியிட்ட நிலையில், 65 லட்சம் வாக்காளர்களை நீக்கிவிட்டு, வாக்காளர் பட்டியலை பா.ஜ.,வுக்கு சாதகமாக தயாரித்து இருப்பதாக ராகுலும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்ட நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்காக அறிவிக்கப்பட்ட ஆவணங்களில் ஆதாரையும் சேர்க்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் சிறு முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டாலும், ஒட்டுமொத்தமாக அதை ரத்து செய்யவும் தயங்க மாட்டோம் என எச்சரித்திருந்தது.இந்தச் சூழலில், பீஹார் மாநிலத்துக்கான இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் கடந்த 30ம் தேதி வெளியிட்டது.
22 ஆண்டு இடைவெளிக்குப் பின் நடத்தப்பட்ட இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில், உயிரிழந்தோர், நிரந்தரமாக வேறு மாநிலத்திற்கு புலம்பெயர்ந்தோர், இருவேறு இடங்களில் பெயர்களை பதிவு செய்தோர் என மொத்தமாக, 47 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.
புதிதாக, 21 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். இதன் மூலம் பீஹாரில் ஓட்டளிக்க தகுதி வாய்ந்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 7.89 கோடியில் இருந்து 7.42 கோடியாக சரிந்துள்ளது.
இந்நிலையில், பீஹாரில் நடந்த சிறப்பு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக ராகுலும், காங்கிரஸ் கட்சியும் ஏன் அதிகாரபூர்வமாக புகார் அளிக்கவில்லை என, பா.ஜ., கேள்வி எழுப்பியுள்ளது.
இறுதி பட்டியல்
இது குறித்து பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் கூறியதாவது:
பீஹார் மாநில இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது. ஆனால், இதுவரை காங்கிரசிடம் இருந்து அதிகாரபூர்வமாக எந்த புகாரும் வரவில்லை. தேர்தல் கமிஷன் மீது எழுப்பிய புகார்கள் குறித்து, பிரமாண பத்திரத்தையும் அவர் தாக்கல் செய்யவில்லை.
பொய்யாக பிரசாரம் செய்துவிட்டு, ஓட்டம் பிடிப்பதையே தன் நிலையான கொள்கையாக ராகுல் வைத்திருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.