பேரிடர்களை சமாளிக்க தனி அமைச்சகம்: மத்திய அரசுக்கு கனிமொழி யோசனை
பேரிடர்களை சமாளிக்க தனி அமைச்சகம்: மத்திய அரசுக்கு கனிமொழி யோசனை
ADDED : டிச 13, 2024 06:35 AM

''ஒவ்வொரு வினாடியும், நாட்டில் நடக்கக்கூடிய வெவ்வேறு விதமான பேரிடர்களை திறம்பட கையாளும் வகையில், இதற்கென்று தனியாக அமைச்சகம் உருவாக்க, மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும். ''புயல், மழை உள்ளிட்டவை குறித்த முன்னெச்சரிக்கையை குறைந்தது மூன்று நாட்களுக்கு முன்பாக தந்தால்தான் மாநில அரசுகளால் சமாளிக்க முடியும்,'' என்று கனிமொழி கூறினார்.
ஜோதிடம் போல்
லோக்சபாவில் நேற்று நடந்த பேரிடர் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தின்போது துாத்துக்குடி தி.மு.க., - எம்.பி., கனிமொழி பேசியதாவது: மழை, புயல், வெள்ளம் ஆகியவற்றை முன்கூட்டியே கணிப்பதற்கு, மத்திய அரசு தவறி விடுகிறது. தரக்கூடிய முன்னறிவிப்புகளும், ஏதோ ஜோதிடத்தைப் போல் உள்ளது. நவீன அறிவியலுக்கு பொருத்தமானதாக இல்லை.
புயல் நிலவரம் குறித்து, ஒரு நாளுக்கு முன் தகவல் தந்தால், ஏராளமான மக்களை புயல் பாதிப்புக்குள்ளாகும் இடத்திலிருந்து எப்படி உடனடியாக நகர்த்த முடியும். பேரிடர்களை முன்கூட்டியே, கண்டறியும் நவீன ரக ரேடார்கள் அவசியம். குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு முன்பாகவாவது, எச்சரிக்கை தந்தால்தான் மாநில அரசுகளால் சமாளிக்க முடியும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின், எல்லா மசோதாக்களையும் போலவே, இந்த மசோதாவும், மாநில அரசின் உரிமைகளை பறித்துள்ளது. மாநில அரசுகளுடன் மோதும் வகையிலேயே அணுகுமுறைகள் உள்ளன. பேரிடர் நிர்வாகம் என்பது, மாநில அரசு தொடர்புடையது. ஆனால் மசோதாவில், சிறு திருத்தம் செய்வதாக இருந்தாலும், அதை மாநில அரசுடன் கலந்து ஆலோசித்துதான் செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால், அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
கடல் அரிப்பு மிகப்பெரிய பிரச்னை. தமிழகத்தில் நிறைய பகுதிகள் கடல் அரிப்பினால் பாதிக்கப்படுகின்றன. எதிர்காலங்களில் நிறைய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாகக் கணித்துள்ளனர். இதற்கு தகுந்த தீர்வு தேவை. பேரிடர் என்பது மிகவும் தீவிரமானதா, இல்லையா என்பதைக் கண்டறிவதற்கு ஒரு குழு அமைக்கப்படும் என்று இந்த மசோதா கூறுகிறது.
குழப்பம் - சிக்கல்
ஆனால், இந்த குழுவுக்கு என தனி அதிகாரம் இல்லை. இந்த குழு மத்திய அரசு கட்டுப்பாட்டில் தான் இயங்கும். அப்படியானால், மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சியைச் சேர்ந்த அரசுகள் இருந்தால் மட்டுமே, ஒரு மாநிலத்தில் ஏற்பட்டது, தீவிர பேரிடர் என்று எடுத்துக் கொள்ளப்படும். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பேரிடர்கள் நிகழ்ந்தாலும், அவை கவனத்தில் கொள்ளப்படாமல் போகும்.
புயல், மழை போன்ற பேரிடர்களால் அடிக்கடி பாதிக்கப்படும் தமிழகம், தனக்கான நிவாரண நிதியை மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கு போராட வேண்டியுள்ளது. உச்ச நீதிமன்றம் வரை செல்ல வேண்டியதுள்ளது. பேரிடர் நிர்வாகக் குழுக்களை, மாநில தலைநகர் மற்றும் மாநகராட்சிகளிலும் அமைக்கப்படும் என்று மசோதா கூறுகிறது. அதன்படி செய்தால், தற்போதுள்ள அதிகார அமைப்புகள் செயல் இழக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட அதிகார மையங்கள் கையாளும்போது, தேவையற்ற குழப்பங்கள், சிக்கல்களும் ஏற்படும்.
பேரிடர்கள் இடர்ப்பாடுகளை வெவ்வேறு துறைகள் கையாண்டு வரும் நிலையில், இது தேவையற்ற காலதாமதத்தை ஏற்படுத்தும். அதனால், இதை உடனே கைவிட வேண்டும். ஒவ்வொரு வினாடியும், நாட்டில் நடக்கக்கூடிய வெவ்வேறு விதமான பேரிடர்களை கையாளும் வகையில், இதற்கென்று தனியாக அமைச்சகத்தை உருவாக்க, மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும். தண்டிக்கப்படும் தமிழகம்
மாநில பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கீட்டின்போது, மக்கள் தொகை மற்றும் பரப்பளவு ஆகியவற்றை வைத்து, 30 சதவீத முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் முன்னணி மாநிலமாக திகழ்ந்தற்காக தமிழகம் தண்டிக்கப்படுகிறது. எல்லா விதங்களிலும் முன்னேறிய மாநிலமாக தமிழகம் இருப்பதாலேயே, மாநிலம் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.
மழை, புயல், வெள்ளத்தால் ஆண்டுதோறும் தமிழகம் பாதிக்கப்படுகிறது. ஆனாலும், அபாயம் அதிகம் உள்ள மாநிலங்கள் என்று தமிழகத்தையும் சேர்த்து வகைப்படுத்த மத்திய அரசு மறுக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
- நமது டில்லி நிருபர் -

