சட்டசபை நடக்கும் போதே தொடர் கொலைகள்; அரசுக்கு தர்மசங்கடம்; கோட்டை விட்ட உளவுப்பிரிவு
சட்டசபை நடக்கும் போதே தொடர் கொலைகள்; அரசுக்கு தர்மசங்கடம்; கோட்டை விட்ட உளவுப்பிரிவு
ADDED : மார் 24, 2025 06:07 AM

தமிழகத்தில், சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் போதே தொடர் கொலைகள் நடந்துள்ளது, சட்டம் - ஒழுங்கு குறித்த விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ரவுடிகளை கண்காணிக்க வேண்டிய ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு கோட்டை விட்டுள்ளதையே, இது காட்டுகிறது.
'ஹை அலெர்ட்'
தமிழகத்தில் தொடர் கொலைகள் நடந்து வருவதாக பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., குற்றஞ்சாட்டியது. இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், '2012 முதல் 2024 வரையிலான அ.தி.மு.க., - தி.மு.க., ஆட்சியில், 2012ல் தான் அதிகபட்சம், 1,943; 2013ல், 1,927 கொலைகள் நடந்துள்ளன.
'இதுதான், 12 ஆண்டில் அதிகபட்சம். அ.தி.மு.க., ஆட்சியில் கொரோனா காலத்தில் கூட, 2020ல் 1,661 கொலைகள் நடந்துள்ளன. 2024ல், 1,540 கொலைகள் மட்டுமே நடந்துள்ளன' என, சட்டசபையில் புள்ளிவிபரங்களுடன் ஸ்டாலின் தெரிவித்தார். அதன்பிறகும், தமிழகத்தில் கொலைகள் நடந்து வருகின்றன.
பொதுவாக சட்டசபை கூட்டத்தொடர் துவங்குவதாக அறிவிக்கப்பட்ட உடன் தமிழக போலீசார், 'ஹை அலெர்ட்' மோடுக்கு மாறிவிடுவர். கூட்டத்தொடர் நடக்கும் போது, லாக்கப் மரணம், மின் தடை கூட ஏற்பட்டு விடக்கூடாது என்ற வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவர்.
தமிழக பட்ஜெட் கடந்த 14ல் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து விவாதம் நடந்து வருகிறது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்பிருந்தே, அதாவது கடந்த 12ம் தேதி புதன்கிழமை, ஓசூர் ஒன்னல்வாடியில் வீட்டில் தனியாக இருந்த முதியவர்கள் இருவர் கொல்லப்பட்டனர். மறுநாளான, 13ம் தேதி அவிநாசி துலுக்கமுத்துாரில் தோட்டத்து வீட்டில் பழனிசாமி - பர்வதம் தம்பதி கொலை செய்யப்பட்டனர். 15ல் ஈரோடு மாவட்டம், பவானியில் முக்கிய பிரமுகர் மதியழகன் கொலை செய்யப்பட்டு காவிரி ஆற்றில் வீசப்பட்டார்.
அடுத்தடுத்து கொலை
கடந்த 16ல் கரூர், நரிசுட்டியூரில் ரவுடி சந்தோஷ்குமார் குத்திக்கொலை செய்யப்பட்டார்; 18ல் திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ., ஜாஹிர் உசேன் வெட்டிக்கொலை; 19ல் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில், சேலத்தைச் சேர்ந்த ரவுடி ஜான், தான் பயணம் செய்த காரிலேயே வெட்டிக்கொலை என, கொலை பட்டியல் நீள்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில், நாகம்மா என்பவரை நகை, பணத்துக்காக கடந்த 19ல் கொலை செய்துவிட்டு வீட்டை கொளுத்தி சென்றுள்ளனர். இது, ஓசூரில் மார்ச் 12ம் தேதி நடந்த கொலை போலவே இருந்ததால், அடுத்த கொலை ஏதும் நடந்து விடுமோ என்ற அச்சத்தில் போலீசார் உள்ளனர்.
இந்நிலையில், மார்ச் 21ல், காரைக்குடி வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட வந்த மனோஜ்குமார் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அன்றே திருத்தணியில் வாலிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இப்படி அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது போலீஸ் தலைமைக்கும், போலீஸ் துறைக்கு தலைமை வகிக்கும் முதல்வருக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிபாரிசில் பதவி
அதுவும் சட்டசபை கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்ட பின், தமிழகத்தில் அடுத்தடுத்து 11 கொலைகள் நடந்துள்ளன. மூன்றரை ஆண்டில் எஸ்.பி.,க்கள் முதல் ஐ.ஜி., உளவுப்பிரிவு, ஏ.டி.ஜி.பி., சட்டம் - ஒழுங்கு, மாநகர ஆணையர்கள் என அனைவரும், சிபாரிசில் உயர் பதவியில் அமர்ந்துள்ளனர். தி.மு.க., கூட்டணி கட்சியினர் பரிந்துரைத்த அதிகாரிகள் பலர் முக்கிய பதவியில் உள்ளனர். வேண்டியவர்களுக்கு பதவி வழங்கியதும், நேர்மையான, திறமையான பல அதிகாரிகள் ஓரங்கட்டி வைக்கப்பட்டிருப்பதும், தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது.
குறிப்பாக, காரைக்குடி, சித்தோடு, கரூர் உட்பட பல கொலைகளில் ஜாமினில் வந்தோர், நீதிமன்றம், போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லும் போது அல்லது திரும்பும் போது கொல்லப்பட்டு உள்ளனர். ரவுடிகளை கண்காணிக்க வேண்டிய ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரின் செயல்பாடு கேள்விக்குறியாகி உள்ளது. இதேநிலை தொடர்ந்தால், சட்டம் - ஒழுங்கு பிரச்னையே, 2026 தேர்தலில் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும்.
-- நமது நிருபர் -