ஸ்டாலின் கேட்கும் ஏழு கேள்விகளும்; தேர்தல் கமிஷன் தரப்பு பதில்களும்
ஸ்டாலின் கேட்கும் ஏழு கேள்விகளும்; தேர்தல் கமிஷன் தரப்பு பதில்களும்
ADDED : ஆக 19, 2025 04:43 AM

சென்னை: 'இண்டி' கூட்டணியினர் தேர்தல் கமிஷனை நோக்கி எழுப்பி இருக்கும் கேள்விகளுக்கு விடை அளிப்பதற்கு பதிலாக, தலைமை தேர்தல் கமிஷனர் செய்தியாளர் சந்திப்பு நடத்தி இருக்கிறார்.
இதனால், பின்வரும் கூடுதல் கேள்விகளை, அவரது பேட்டி எழுப்பி இருக்கிறது என, தலைமை தேர்தல் கமிஷனருக்கு முதல்வர் ஸ்டாலின், ஏழு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ஆனால், வெளிப்படையான தேர்தல் நடத்தப்பட்டதாலேயே வெற்றி பெற்று, முதல்வர் ஆகி இருந்தும், எப்படி இப்படிப்பட்ட கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார் என தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தரப்பு சந்தேகம் எழுப்புகின்றனர்.
முதல்வரின் அறிக்கை வாயிலான கேள்விகளும், அதற்கு தேர்தல் கமிஷன் தரப்பு அளித்த பதில்களும்:
1 வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்?
வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியது மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தான்.
இதில் ஏதும் தவறு இருந்தால், அரசியல் கட்சிகளின் முகவர்கள், தேர்தல் கமிஷனுக்கு சுட்டிக் காட்ட வாய்ப்பு வழங்குகிறது. அப்போது, எவ்வித குற்றச்சாட்டும் வைக்காமல், திடுமென குற்றம்சாட்டுவது ஏன்?
2 புதிய வாக்காளர் பதிவு, வழக்கத்திற்கு மாறாக குறைவாக உள்ளது. இளம் வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனரா; தகுதிக்குரிய நாளில், 18 வயது நிறைந்த இளம் வாக்காளர்கள் எத்தனை பேர் சேர்க்கப்பட்டனர் என்பதை சொல்லும் தரவுகள் ஏதாவது இருக்கின்றனவா?
பதினெட்டு வயது நிரம்பியோர், ஓட்டுரிமைக்காக சிறப்பு முகாம்கள் அல்லது அதற்கென இருக்கும் அலுவலகங்களில் விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் சேர்த்து, அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு முறையும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும்போது, வயது வாரியாக வாக்காளர்கள் விபரம், புதிதாக சேர்க்கப்பட்டோர், நீக்கப்பட்டோர் விபரங்களும் வெளியிடப்படுகின்றன.
இது தொடர்பான, 'சிடி'களும் அங்கீகாரம் பெற்ற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்படுகின்றன. இது முதல்வருக்கும் தெரியும் தானே?
3 வாக்காளர் பதிவு சட்டம் 1960ன் கீழ் கொடுக்கப்பட்ட விசாரணை மற்றும் இரண்டு முறையீடு நடைமுறைக்கான காலவரையறையால், வரும் பீஹார் சட்டசபை தேர்தலில், பெருமளவிலான வாக்காளர்களை நீக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த விவகாரத்தை, தேர்தல் கமிஷன் எவ்வாறு தீர்க்க போகிறது?
அப்படியெல்லாம் திட்டமிட்டு எதுவும் செய்யப்படவில்லை என, தேர்தல் கமிஷனர் ஏற்கனவே தெரிவித்து விட்டார். கூடவே, இது தொடர்பான புகார்கள் எதுவும் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
4 பிற மாநிலங்களில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும்போது, இந்த நடைமுறை சிக்கல்களை தேர்தல் கமிஷன் கணக்கில் கொள்ளுமா?
எந்த குறையாக இருந்தாலும், தேர்தல் கமிஷன் கவனத்துக்கு ஆதாரத்துடன் தெரியப்படுத்தினால், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு முறை வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது, உரிய அவகாசம் அளிக்கப்பட்டு, சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, முறைப்படியே பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.
5 கடந்த மே 1ம் தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி, மறைந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்குமாறு, தேர்தல் கமிஷனிடம், ஜூலை 17ம் தேதி நாங்கள் முறையிட்டோம்; இது எப்போது நிறைவேற்றப்படும்?
ஏற்கனவே இறந்து போனோர், வெளி மாநிலங்களுக்கு குடிபெயர்ந்தோர் பீஹார் மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டுள்ளனர்.
இப்படி நீக்கியதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதோடு, நாங்கள் கூறுவோரை நீக்குங்கள் என்றும் கூறுகிறீர்கள். உங்கள் செயல்பாடே குழப்பமாக உள்ளதே?
6 வாக்காளரின் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணமாக, 'ஆதார்' அட்டையை ஏற்க தேர்தல் கமிஷனை தடுப்பது எது?
ஆதார் அட்டையை, 12 வாக்காளர் அடையாள ஆவணங்களில் ஒன்றாக பயன்படுத்தலாம் என்பதில், தேர்தல் கமிஷன், இதுவரை எவ்வித மாற்றமும் கொண்டு வரவில்லை.
இந்த கேள்விக்கான தேவையே எழவில்லை. இருந்தபோதும், உச்ச நீதிமன்றமும் ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள ஆவணங்களில் ஒன்றாக ஏற்குமாறு கூறியுள்ளது.
7 நியாயமான தேர்தல்கள் என்பதே, தேர்தல் கமிஷனின் இலக்கு என்றால், அது மேலும் வெளிப்படை தன்மையுடனும், வாக்காளர்களுக்கு நெருக்கமாகவும் இருக்கலாமே?
அப்படியொரு நடை முறை இருப்பதால் தானே, தவறு என சந்தேகம் இருக்குமானால், ஆதாரத்துடன் தேர்தல் கமிஷனை அணுகலாம் என கூறி உள்ளனர்.
ஓட்டுப்பதிவையும், 'சிசிடிவி' வாயிலாக பதிவெடுப்பதோடு, நேரலையிலும் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்படுகிறது.
அனைத்து கட்சி முகவர்களின் ஒப்புதலோடுதான், தேர்தல் தொடர்பான அனைத்து நடைமுறைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இப்படி எல்லா விஷயங்களிலும் வெளிப்படைத்தன்மையுடன் தான் தேர்தல் கமிஷன் செயல்படுகிறது.