ஆட்சியில் பங்கு, 39 தொகுதிகள்; முதல்வரிடம் காங்., முன்வைத்த 3 நிபந்தனைகள்
ஆட்சியில் பங்கு, 39 தொகுதிகள்; முதல்வரிடம் காங்., முன்வைத்த 3 நிபந்தனைகள்
ADDED : டிச 05, 2025 06:32 AM

'ஆட்சியில் பங்கும், 39 தொகுதிகளும் வேண்டும்; வரும் 20ம் தேதிக்குள், 'சீட்' ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க வேண்டும்' என, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் மூன்று நிபந்தனைகளை முதல்வர் ஸ்டாலினிடம் விதித்துள்ளதாக தெரிகிறது.
இது குறித்து, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க., கூட்டணியை உறுதி செய்யும் வகையில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் செயலர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதிக் ஆல்வா, சட்டசபை குழு தலைவர் ராஜேஷ்குமார் ஆகிய ஐவர் குழுவினர், நேற்று முன்தினம் சென்னை அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர்.
அப்போது, முதல்வர் ஸ்டாலின், 'வழக்கமாக தொகுதி பங்கீடு பற்றி பேச தி.மு.க., குழு அமைத்த பின்னர் தான், காங்கிரஸ் குழு அமைத்து தி.மு.க., குழுவோடு பேச்சு நடத்தும். நீங்கள் ரொம்ப சீக்கிரமாகவே குழு அமைத்து வந்துள்ளீர்களே' என ஆச்சரியமாக கேட்டுள்ளார்.
வழக்கமான பேச்சு முடிந்ததும், ஸ்டாலினை தனியாக சந்தித்து கிரிஷ் ஷோடங்கர் பேசினார். அப்போது, ராகுல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள மூன்று நிபந்தனைகள் அடங்கிய கடிதத்தை வழங்கியுள்ளார்.
முதலாவதாக, காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ள 39 தொகுதிகளை ஒதுக்க வேண்டும். இரண்டாவதாக, ஆட்சியில் பங்கு தர வேண்டும். மூன்றாவதாக, தொகுதி ஒதுக்கீடு குறித்து தேர்தல் வரை இழுத்தடிக்காமல், வரும் 20ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என, அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
அதற்கு முதல்வர் ஸ்டாலின், 'தொகுதி பங்கீடு குறித்து பேச, நாங்களும் குழு அமைப்போம்; அக்குழு அமைக்கப்பட்டதும், உங்களை அழைக்கிறோம்; மற்ற கோரிக்கைகளை ராகுலிடம் பேசிக் கொள்கிறேன்' என கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஐவர் குழுவில் சிதம்பரம், திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி போன்ற மூத்த தலைவர்களை இடம் பெற வைக்காதது ஏன் என்று கட்சியில் பரபரப்பாக பேசுகின்றனர். அப்படி அவர்களை நியமித்திருந்தால், அவர்கள் அனைவரும் ஸ்டாலின் தெரிவிக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஏற்றுக்கொள்வர்.
தங்கள் வாரிசுகளுக்கும், ஆதரவாளர்களுக்கும் சீட் வாங்குவதில் தான் அக்கறை காட்டுவர். அதனால் தான், அவர்களை ஓரங்கட்டி விட்டு, இந்த ஐவர் குழுவை ராகுல் அமைத்துள்ளார். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -

