அமைச்சர்களில் 47% பேர் கிரிமினல்கள்: ஏ.டி.ஆர்., வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை
அமைச்சர்களில் 47% பேர் கிரிமினல்கள்: ஏ.டி.ஆர்., வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை
ADDED : செப் 05, 2025 04:18 AM

புதுடில்லி: நா டு முழுதும் மத்திய - மாநில அமைச்சர்களில் 47 சதவீதம் பேர் மீது கொலை, கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உட்பட தீவிரமான கிரிமினல் குற்றச்சாட்டுகள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கொடுங்குற்றத்துக்கு ஆளாகி 30 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலில் இருக்க நேர்ந்தால், பிரதமராக இருந்தாலும் பதவியை பறிக்கும் மசோதா சமீபத்தில் பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப் பின்னணி இம்மசோதாவுக்கு அரசியல் கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு கிரிமினில் குற்றப் பின்னணி கொண்ட அமைச்சர்கள் பற்றி ஆய் வு நடத்தியது.
இதற்காக 27 மாநிலங்கள், மூன்று யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்கள் என 643 அமைச்சர்கள் தேர்தலின்போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை ஆய்வு செய்தது.
அதில் 302 அமைச்சர்கள் அதாவது 47 சதவீதம் பேர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த 302 அமைச்சர்களில் 174 பேர் மீது தீவிரமான கிரிமினல் வழக்குகள் உள்ளதாக ஏ.டி.ஆர்., அறிக்கை தெரிவிக்கிறது.
கட்சி ரீதியாக உள்ள அமைச்சர்களின் குற்றப் பின்னணி குறித்து ஏ.டி.ஆர்., வெளியிட்ட அறிக்கை:
பா.ஜ.,வை சேர்ந்த, 336 அமைச்சர்களில் 136 (40 சதவீதம்) பேர் மீது கிரிமினல் குற்றங்கள் உள்ளன. அதில் 88 பேர் (30 சதவீதம்) தீவிர குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர்.
நான்கு மாநிலங்களில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி அமைச்சர்களில் 45 பேர் (74 சதவீதம்) மீது கிரிமினில் குற்றங்கள் பதிவாகியுள்ளன. அதில் 18 பேர் (30 சதவீதம்) மீது தீவிர குற்ற வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
தி.மு.க.,வின், 31 அமைச்சர்களில் 27 பேர் (87 சதவீதம்) மீது கிரிமினல் குற்றங்களும், 14 பேர் மீது தீவிர குற்றவழக்குகளும் பதிவாகியுள்ளன.
கிரிமினல் வழக்கு திரிணமுல் காங்., கட்சியின் 40 அமைச்சர்களில் 13 பேர் (33 சதவீதம்) மீது கிரிமினல் வழக்குகளும், 8 பேர் (20 சதவீதம்) மீது தீவிர குற்ற வழக்குகளும் உள்ளன.
தெலுங்கு தேசம் கட்சியில் உள்ள 23 அமைச்சர்களில், 22 பேர் மீது (96 சதவீதம்) கிரிமினல் வழக்குகள் உள்ளன. அவர்களில் தீவிர குற்ற வழக்குகளில் சிக்கியவர்கள் 13 பேர் (57 சதவீதம்).
ஆம் ஆத்மி அமைச்சர்கள் 16 பேரில், 11 பேர் ( 69 சதவீதம்) மீது கிரிமினல் வழக்குகளும், ஐந்து பேர் (31 சதவீதம்) மீது தீவிர குற்ற வழக்குகளும் பதிவாகியுள்ளன.
தேசிய அளவில் 72 மத்திய அமைச்சர்களில் 29 பேர் (40 சதவீதம்) மீது கிரிமினல் வழக்குகள் இருப்பது அவர்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரியவந்துள்ளது.
மாநிலங்களை பொறுத்தவரை, ஆந்திரா, தமிழ்நாடு, பீஹார், ஒடிஷா, மஹாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப், தெலுங்கானா, ஹிமாச்சல், டில்லி மற்றும் புதுச்சேரி என 11 சட்டசபைகளில் உள்ள அமைச்சர்களில் 60 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
இதில் முரண்பாடாக, ஹரியானா, ஜம்மு - காஷ்மீர், நாகாலாந்து மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் ஒரு அமைச்சர் மீது கூட கிரிமினல் வழக்குகள் பதிவாகவில்லை.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.