பார்லிமென்டை முடக்குங்கள்: தி.மு.க.,வுக்கு அ.தி.மு.க., யோசனை
பார்லிமென்டை முடக்குங்கள்: தி.மு.க.,வுக்கு அ.தி.மு.க., யோசனை
ADDED : மார் 20, 2025 06:56 AM

சென்னை: ''பார்லிமென்டை முடக்கி, மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கான நிதியை பெறுங்கள்,'' என, அ.தி.மு.க., - அருண்மொழித்தேவன் ஆலோசனை கூறினார்.
சட்டசபையில் பட்ஜெட் விவாதத்தில் அவர் பேசியதாவது:
தி.மு.க., அரசின் பட்ஜெட்டை, விளம்பர அறிவிப்பாகவே மக்கள் பார்க்கின்றனர். பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. விலைவாசி உயர்வை குறைக்க, எந்த திட்டமும் இல்லை.
மத்திய அரசிடம் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்கிறீர்கள். ஆனால், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள என்.எல்.சி.,க்கு நிலம் கையகப்படுத்தி கொடுக்க, ஏன் அக்கறை காட்டுகிறீர்கள்?
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, அ.தி.மு.க.,வின் 37 எம்.பி.,க்கள், 22 நாட்கள் பார்லிமென்டை முடக்கினர். அதுபோல, தி.மு.க., கூட்டணியின் 39 எம்.பி.,க்களும் பார்லிமென்டை முடக்கி, மத்திய அரசிடம் இருந்து நிதியைப் பெறுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.