இறந்தவரின் பர்சில் பணம் லபக்கிய எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
இறந்தவரின் பர்சில் பணம் லபக்கிய எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
UPDATED : ஏப் 02, 2025 10:12 AM
ADDED : ஏப் 02, 2025 10:08 AM

திருவனந்தபுரம்: கேரளாவில் ரயில் விபத்தில் இறந்தவரின் பர்சிலிருந்து, 3,000 ரூபாய் திருடிய எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இதில் கோகோய், 27, என்ற தொழிலாளி கடந்த 19ம் தேதி எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவா அருகே ரயிலில் சென்று கொண்டிருந்தபோது தவறி விழுந்து இறந்தார். உடலைக் கைப்பற்றிய ஆலுவா போலீசார், அவரது மொபைல் போன், பர்ஸ் உள்ளிட்ட உடைமைகளை போலீஸ் ஸ்டேஷனில் வைத்துள்ளனர். பர்சில், 8,000 ரூபாய் இருந்ததாக போலீசார் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன், கோகோயின் உடைமைகளை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தபோது, பர்சில் 5,000 ரூபாய் மட்டுமே இருந்தது. தொடர்ந்து, போலீஸ் ஸ்டேஷனில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், எஸ்.ஐ., சலீம், பர்சில் இருந்து பணத்தை எடுத்த காட்சி பதிவாகி இருந்தது.
இதையடுத்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஏற்கெனவே அவர் மீது பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

