கர்நாடகாவில் அடுத்த முதல்வராகும் வாய்ப்பு யாருக்கு அதிகம்?
கர்நாடகாவில் அடுத்த முதல்வராகும் வாய்ப்பு யாருக்கு அதிகம்?
ADDED : செப் 04, 2024 06:17 AM

'மூடா' முறைகேடு வழக்கில் முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் ஆதரவு அளித்துள்ளது. ஒருவேளை நிலைமை மாறினால், 'பிளான் பி'யாக, உள்துறை அமைச்சர் பரமேஸ்வரை, காங்கிரஸ் மேலிடம் முதல்வராக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடகாவில், 'மூடா' முறைகேடு விவகாரம், சித்தராமையாவின் முதல்வர் நாற்காலியை ஆட்டம் காண வைத்துள்ளது. தன் மீது விசாரணை நடத்த கவர்னர் அனுமதி அளித்ததை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கு, வரும் 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூடா முறைகேட்டில் முதல்வர் சித்தராமையாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறிய உடனே, மாநிலம் முழுதும் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் மேலிட அழைப்பின்படி புதுடில்லி சென்ற முதல்வர் சித்தராமையா, தனக்கும், மூடா முறைகேடுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளார்.
இதை ஏற்றுக் கொண்ட கட்சி மேலிடமும், அவருக்கு ஆதரவாக நிற்கும் என்று தெரிவித்தது. மாநில தலைவர்களும் அவருக்கு ஆதரவாக நிற்பதாக தெரிவித்துள்ளனர்.
அடுத்தது என்ன?
ஒருவேளை முதல்வர் மீது விசாரணையை தொடர, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால், அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் கட்சி தயாராகி வருகிறது.
இதை யூகித்த கட்சியின் சில மூத்த தலைவர்கள், சித்தராமையா முதல்வராக தொடர்ந்தால் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஒருவேளை அவர் ராஜினாமா செய்தால், தங்களுக்கு முதல்வர் பதவி வேண்டும் என்று மேலிடத்துக்கு நெருக்கடி கொடுக்க துவங்கி உள்ளனர்.
சித்தராமையா பதவி விலகினால், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதலில் வாய்ப்பு தரப்படும் என பேசப்பட்டது. சமீபத்தில் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 'சித்தார்த்தா விஹாரா டிரஸ்ட்டிற்கு, கர்நாடக அரசு, 5 ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கியிருந்தது. 'இது எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது' என்று விளக்கம் அளிக்கும்படி, மாநில தலைமை செயலருக்கு, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், நேற்று முன்தினம் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இதனால் கார்கே குடும்பத்துக்கும், நிலம் ஒதுக்கிய கனரக, தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளன. இந்நேரத்தில் கார்கேவுக்கு முதல்வர் பதவி கொடுத்தால், மேலும் சிக்கல் உருவாகும் என கட்சி மேலிடம் நினைக்கிறது.
ரகசிய சந்திப்பு
சமீபத்தில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், பொதுப்பணி துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி ஆகியோர் ரகசியமாக சந்தித்து பேசினர். இதனால், முதல்வர் மாற்றம் தொடர்பாக தீவிர யூகங்கள் எழுந்தன. இந்த சந்திப்பு குறித்து பரமேஸ்வர் இதுவரை வாய் திறக்கவில்லை.
டி.கே.,வுக்கு தடை
இதற்கிடையில், பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தை சேர்ந்த அமைச்சர்கள் சதீஷ் ஜார்கிஹோளி, மஹாதேவப்பா ஆகியோர் ம.ஜ.த.,வில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தவர்கள்.
ஏற்கனவே, ம.ஜ.த., வில் இருந்து காங்கிரசில் இணைந்த சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி கொடுக்கப்பட்டதற்கு, கட்சியில் மூத்த தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
மீண்டும் கட்சி மாறியவர்களுக்கு சீட் வழங்கினால், மாநிலத்தின் கட்சியின் நிலை தள்ளாடும் என்பதால், அவர்களை கட்சி மேலிடம் கணக்கில் எடுத்து கொள்ளவில்லை.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் தேஷ்பாண்டே, தனக்கும் முதல்வராகும் ஆசை உள்ளது என்று தெரிவித்துள்ளார். பிராமணரான இவருக்கு, கட்சி எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு குறைவாக உள்ளது. எனவே, அவருக்கு முதல்வர் வாய்ப்பு கிடைப்பது கடினம்.
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக எட்டு ஆண்டுகள் பதவி வகித்த பரமேஸ்வர், 2013 தேர்தலில் தோல்வி அடைந்தார். இதனால் முதல்வராகும் வாய்ப்பை இழந்தார்.
எனவே, அவருக்கு முதல்வர் பதவி வழங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. காரணம், கடந்தாண்டு சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற காங்கிரசில், முதல்வர் பதவிக்கு சித்தராமையா, சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவியது.
கட்சி தலைமை இருவரிடமும் பேசி சமாதானம் செய்தனர். இதையடுத்து, முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் சிவகுமாரும் முதல்வராகலாம் என்று உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
தற்போது மாநிலத்தில் சித்தராமையா மீது எழுந்துள்ள மூடா முறைகேடு விஷயத்தால், சிவகுமாருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என கூறப்படுகிறது. ஆயினும், மாநிலத்தில் தனக்கு இணையாக பலம் பெற்ற சிவகுமாரை முதல்வராக்குவதில் சித்தராமையாவுக்கு விருப்பம் இல்லை என்பது ஊர்ஜிதமான விஷயம்.
எனவே, அவர், தலித் சமூதாயத்தை சேர்ந்த பரமேஸ்வருக்கு ஆதரவு அளிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் தலித் சமூதாயத்தக்கு ஆதரவானவன் என்பதை சித்தராமையா நிரூபித்து விடுவார். எனவே, முதல்வர் பதவி, 'ரேசில்' பரமேஸ்வர் முதலிடத்தில் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
- நமது நிருபர் -