கிளையை வெட்டினால் ஆறு மாதம் சிறை; மரங்கள் மாநாட்டில் சீமான் அறிவிப்பு
கிளையை வெட்டினால் ஆறு மாதம் சிறை; மரங்கள் மாநாட்டில் சீமான் அறிவிப்பு
ADDED : ஆக 31, 2025 04:52 AM

திருத்தணி : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அருங்குளம் கூட்டுச் சாலையில் மனித நேய பூங்கா மற்றும் வனப்பகுதியில், நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரங்களின் மாநாடு நேற்று நடந்தது.
கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:
மரங்களின் மாநாடு நடத்துவதற்காக, காட்டில் புலிகள் நுழைந்துள்ளன. அதனால், ஒரு அணில் கூட காணவில்லை. ஆனாலும், அணில்களுக்கும் சேர்த்து தான் மரங்களின் மாநாடு நடத்துகிறோம்.
காடுகள் இருந்தால் தான், அங்கிருக்கும் மரங்கள் மழை பொழிய வைக்கும். மரங்கள் இல்லை என்றால், உலகில் எந்தவொரு உயிரினமும் இருக்காது.
மரங்கள் வெட்டப்படுவதால் பருவநிலை மாறி வருகிறது. இனி இந்த மண்ணில், பருவமழை பெறும் மழை கிடையாது. வெறும் புயல் மழை மட்டும் இருக்கும். புவி வெப்பமாவதால், பூமியின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
ஒரு கட்டத்தில், தாங்க முடியாமல் கடல் பொங்கி கொந்தளிக்கும். மழைநீரை முறையாக சேமிக்காமல், கடலில் வீணாக கலக்கிறது. பின், குடிநீர் பிரச்னை என்று சொல்லி கடல் நீரை சுத்திகரித்து குடிநீராக்குகின்றனர். இதற்கு, அரசு தரப்பில் 50,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, துாய்மையான காற்றை பெறுவதற்கு, 4,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யும் அளவுக்கு உள்ளோம். புதுடில்லியை போல தமிழகத்திலும், சுத்தமான காற்றை குடுவையில் விற்கப் போகின்றனர். காற்று தானாக மாசுபடுவதில்லை; நாம் தான் அதை மாசுபடுத்துகிறோம்.
பூமியை சமநிலைப்படுத்துவதில், மரங்களின் பங்கு அதிகம் என்பது அறிஞர்கள் கருத்து. நான் ஆட்சிக்கு வந்தால், மரத்தின் ஒரு கிளையை வெட்டினாலும், ஆறு மாதம் சிறை தண்டனை வழங்குவேன்.
மேலும், மாணவர்கள் 100 மரக்கன்றுகள் நட்டால் பொதுத்தேர்வில் 10 மதிப்பெண், 1,000 மரக்கன்றுகள் நட்டால், அரசு பணிக்கான தேர்வில் 10 மதிப்பெண் வழங்குவேன். 10,௦௦௦ மரக்கன்றுகள் நடுபவர்களுக்கு, அவர்களின் இறுதி சடங்கு, அரசு மரியாதையுடன் செய்யப்படும். இது என் உறுதிமொழி.
கழிவுநீரை சுத்திகரித்து, அதன் வாயிலாக கிடைக்கும் தண்ணீரை ஊற்றியே மரங்களை வளர்க்கலாம்; அதை செய்வேன். இவ்வாறு அவர் பேசினார்.
வேட்பாளர் அறிவிப்பு
மரங்கள் மாநாட்டில் வரும் சட்டசபை தேர்தலில், திருத்தணி தொகுதியில் பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த சந்திரன், திருவள்ளூர் தொகுதியில் மணவாளநகர் பகுதியைச் சேர்ந்த செந்தில் ஆகியோர் போட்டியிடுவர் எனக்கூறி, அவர்களை சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.