ADDED : நவ 23, 2026 05:07 AM

சென்னை: ''ஆறே மாசம், எல்லாம் நாசம் என சொல்லும் அளவில் த.வெ.க., ஆட்சி உள்ளது,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் விமர்சித்தார்.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்த நுால் வெளியீட்டு விழாவில், அவர் பேசியதாவது: தி.மு.க., ஆட்சியில், அனைத்து துறைகளிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக உயர்ந்தது. நாம் பாதுகாத்து உருவாக்கிய வளர்ச்சி அனைத்தும், ஆறே மாதத்தில் பின் நோக்கி போய் விட்டன. தற்போதைய ஆளுங்கட்சியினர் ஈ.வெ.ராமசாமியை, கொள்கை தலைவர் என்கின்றனர். ஆனால், இந்த ஆட்சிக்கு, ஒரு ஜோசியர் தான் வழிகாட்டியாகவும் கொள்கை தலைவராகவும் உள்ளார்.
தற்போது உள்ள அரசால், ஒரு விஷயத்தில் கூட உறுதியாக நிற்க முடியவில்லை. முதலில் ஓர் அறிவிப்பை வெளியிடுகின்றனர்; பின் அதை ரத்து செய்கின்றனர். எல்லா விஷயத்திலும் 'யூ டர்ன்' தான். அதேபோல் வெளிப்படைத் தன்மையும் கேள்விக்குறியாகி உள்ளது. முதலில் ஒரு செய்தியை கசிய விடுகின்றனர். அதற்கு எதிர்ப்பு கிளம்பினால், அது உண்மையில்லை என, அவர்களே மறுக்கின்றனர். தொழில்துறைக்கு வழிகாட்ட வேண்டிய அமைப்பு, தற்போது வழி தெரியாமல் தள்ளாடுகிறது.
அரசாங்க உயர் பதவியில் உள்ள அதிகாரிகளுக்கு தொல்லை தருவதில், அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏ.,க்களுக்கும் இடையே போட்டி நடக்கிறது. த.வெ.க.,வின் 'கிரைம் ரேட்டை' பார்த்து மக்கள் கிறுகிறுத்து போயுள்ளனர்.
பட்டப்பகலில் நடு ரோட்டில் இரட்டைக்கொலை, ஆளுங்கட்சியினரின் பாலியல் வன்கொடுமையால், பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாமல் அஞ்சுகின்றனர். மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், முதல்வர் வாய் திறந்து பேசுவதே இல்லை. 'ஆறே மாசம் எல்லாம் நாசம்' என்று சொல்லும் அளவில், த.வெ.க., ஆட்சி உள்ளது. இவ்வாறு பேசினார்.
