டில்லியை சூழ்ந்தது புகைமூட்டம்: யமுனையில் படர்ந்தது நச்சு நுரை
டில்லியை சூழ்ந்தது புகைமூட்டம்: யமுனையில் படர்ந்தது நச்சு நுரை
ADDED : அக் 20, 2024 03:03 AM

புதுடில்லி: குளிர்காலம் துவங்க உள்ள நிலையில், டில்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. நிலைமையை மோசமாக்கும் வகையில், யமுனை நதியில் நச்சு நுரை உருவாகி அதை மூடியுள்ளது. டில்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், சாதாரணமாகவே காற்று மாசு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
காற்று மாசு பிரச்னை
குளிர்காலம் துவங்க உள்ள நிலையில், அதை சுற்றியுள்ள பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவது, காற்று மாசு பிரச்னையை தீவிரமாக்கியுள்ளது.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடுமையான உத்தரவை பிறப்பித்தும் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.ஏ.க்யூ.ஐ., எனப்படும் காற்று தர வரிசையின்படி, ஒவ்வொரு நகரிலும்காற்றின் தரம் எந்தளவுக்கு உள்ளது என்பது கணக்கிடப் படுகிறது. இதன்படி, 0 -- 50 புள்ளிகள் இருப்பதே, காற்று சுவாசிப்பதற்கு மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.
இந்த புள்ளிகள் உயரும் போது, அந்தப் பகுதிகளில் உள்ள காற்றை சுவாசிப்பது மிகவும் ஆபத்தாக கருதப்படுகிறது.இதன்படி, 301 - 500 புள்ளிகள் என்பது, சுவாசிப்பதற்கு மிகவும் ஆபத்தாகக் கருதப்படுகிறது.டில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள, 13 இடங்களில் நேற்று காலை நிலவரப்படி காற்றின் தரம், 300 புள்ளி களுக்கு மேல் உள்ளது.
டில்லியின் முக்கிய பகுதியான இந்தியா கேட்டில், 251 புள்ளிகளாக இருந்தது. ஒட்டுமொத்தமாக டில்லியின் காற்று தரம் 273 புள்ளிகளாகவும், அதைச் சுற்றியுள்ள
காஜியாபாதில், 245 மற்றும் நொய்டாவில் 228 புள்ளி
களாகவும் இருந்தது.
காற்று மாசை போக்குவதற்கு, மாநகராட்சி அதிகாரிகள் முக்கிய சாலைகளில் லாரிகள் வாயிலாக தண்ணீரை பீய்ச்சி அடித்துச் சென்றனர்.நகர் முழுதும் காற்று மாசு புகை மண்டலமாக சூழ்ந்துள்ளதால், மூத்த குடிமக்கள் மற்றும்
குழந்தைகள் சுவாசிப்பதற்கு சிரமப்பட்டனர்.
இதற்கிடையே,டில்லியைச் சுற்றி ஓடும் யமுனை நதியில் நச்சு நுரைஉருவாகி படர்ந்துள்ளது.
இதில் அமோனியா, பாஸ்பேட் போன்றவை மிகவும் அதிகமாக
உள்ளன. இது மூச்சு தொடர்பான பிரச்னை, தோல் தொடர்பான பிரச்னைகளை உருவாக்கும்.
நடவடிக்கை. காற்று மாசு தொடர்பாக அதிகாரிகளுடன் டில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் ஆலோசனை நடத்தினாார்.
காற்று மாசு அதிகரிப்புக்கான காரணங்களை கண்டறிந்து, அதற்கு தீர்வு காணும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ''டில்லி காற்று மாசு பிரச்னைக்கு ஆம் ஆத்மி அரசை குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால், பா.ஜ., ஆளும் உத்தர பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் அரசுகளும், மத்திய அரசும் இதில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதே பிரச்னை தீவிரமாகியுள்ளதற்கு காரணம்,'' என, கோபால் ராய்
கூறியுள்ளார்.