சுங்க வரி குறைப்பால் தங்கம் கடத்துவது சரிந்தது!: 'ரிஸ்க்' எடுக்க பயந்து பதுங்கிய 'குருவிகள்'
சுங்க வரி குறைப்பால் தங்கம் கடத்துவது சரிந்தது!: 'ரிஸ்க்' எடுக்க பயந்து பதுங்கிய 'குருவிகள்'
UPDATED : செப் 16, 2024 06:12 AM
ADDED : செப் 16, 2024 02:40 AM

தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரியை மத்திய அரசு குறைத்ததன் எதிரொலியாக, சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் சம்பவங்கள் கணிசமாக குறைய துவங்கியுள்ளன.
தென் ஆப்ரிக்கா, துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து, இந்தியாவுக்கு ஓராண்டிற்கு பல ஆயிரக்கணக்கான கிலோ தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. மற்ற நாடுகளுக்கு இடையிலான போர்சூழல்கள், உலகளாவிய பண வீக்கம் உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால், வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்துவது தொடர்கிறது. காரணம், நாட்டில் தங்கம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 55 சதவீதத்திற்கு மேல் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தமிழகத்தில் தங்கத்தின் நுகர்வு அதிகமாக உள்ளது. இதனால், மலேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து, சென்னைக்கு விமானங்கள் வாயிலாக தங்கம் கடத்தல் நடக்கிறது.
வெளிநாடுகளை விட தமிழகத்தில் தங்கத்தின் விலை அதிகம். அதாவது, 1 கிலோ தங்கம், மலேஷியாவில் 60 லட்சம்ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றால், தமிழகத்தில் அது 70 லட்சம் ரூபாயாக இருக்கிறது. பல நாடுகளிலும் இதுபோன்ற நிலையே உள்ளது. அதனால், தங்கத்தை கடத்தி விற்றால், 10 லட்சம் ரூபாய் வரை கடத்தல்காரர்களின் கையில் தங்குகிறது என்பதால், கடத்தல் செய்வதையே பிரதான தொழிலாக பலர் செய்கின்றனர்.
சர்வதேச அளவில் சிண்டிகேட் அமைத்து, சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு செல்லும் சிலர், 50 முதல் 200 கிராம் வரை தங்கத்தை கடத்தி வருகின்றனர். இதற்காக, 'குருவி'கள் என்ற பெயரில் வருவோர், தங்கள் உள்ளாடைக்குள்,மின் சாதனங்கள், சானிட்டரி உள்ளிட்ட பொருட்களில் ஒளித்துவைத்து கடத்துகின்றனர்.
தங்கத்தை பசையாகவும், சாக்லேட், மாத்திரை வடிவிலும் மாற்றி எடுத்து வருகின்றனர். இதற்காக அவர்களுக்கு, பிரத்யேக பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. சில ரசாயனங்களை தங்கத்தில் கலக்கும்பட்சத்தில், சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் உள்ள 'டோர் பிரேம் மெட்டல் டிடெக்டர்' கருவியால் கூட கண்டுபிடிக்க முடியாத அளவில், இந்த திருட்டு சம்பவம் அரங்கேறுகிறது.
அந்த வகையில், சென்னை விமான நிலையத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் கண்ணில் மண்ணை துாவி, அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டாலும், கடந்தாண்டு மட்டும் 303 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு 218 கோடி ரூபாய். கடந்த எட்டு மாதங்களில், 137 கோடி ரூபாய் மதிப்பில், 205 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
அதிகாரிகளின் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் மீதான சுங்க வரியை 6 சதவீதமாக மத்திய அரசு குறைத்ததால், விமான நிலையம் வாயிலாக தங்கத்தை கடத்துவது குறைந்துள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் கூறியதாவது:
இந்தியாவில் 15 சதவீதம் சுங்க வரி இருந்தபோது, கடத்தல் அதிகம் நடந்தது. நடப்பாண்டு ஜூலையில் நடந்த மத்திய பட்ஜெட்டில், தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 15ல் இருந்து 6 சதவீதமாக குறைப்பதாக, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்துவது கணிசமான அளவில் குறைய துவங்கியுள்ளது.
முன்பைவிட குறைவான தொகையே கமிஷனாக கிடைக்கும் என்பதால், 'ரிஸ்க்' எடுக்க தயங்கி, பலரும் கடத்தலில் ஈடுபடமாட்டார்கள். தவிர, அதிகாரிகள் கண்காணிப்பும் தீவிரமாக இருப்பதால், தங்கம் கடத்தல் சம்பவங்கள் இனி மெல்ல மெல்ல குறையும். இவ்வாறு சுங்கத்துறை அதிகாரிகள் கூறினர்.
முறையாக நடக்கிறது
மத்திய அரசின் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி குறைவுக்கு பின், நகை வியாபாரம் நல்லபடியாக நடக்கிறது. கடத்தி கொண்டுவரும் தங்கத்தை சிலர், கள்ளச்சந்தையில் விற்று வந்தனர்; தற்போது அவ்வாறு செய்வது குறைந்து வருகிறது.
- கோல்ட் குரு சாந்தகுமார்
நகைக்கடை உரிமையாளர், சென்னை
- நமது நிருபர் -